கலைக்கோயில்
தாகூர்
வங்கக்
கவிஞர்! பொதுவுடைமை
மணக்கும் நெஞ்சர்! அஞ்சாத
சிங்க
கவிஞர்! சீர்திருத்தச்
செல்வர்! நம்மின் நற்றமிழின்
சங்க
கவிஞர் சிந்தனையைத்
தந்த கவிஞர்! அன்பொளிரும்
தங்கக்
கவிஞர்! ஈடில்லாத்
தாகூர் புகழைப் போற்றுகவே!
சிந்தை
இழந்து, செயலிழந்து
சிறைக்குள் வாடும் அடிமையெனக்
கந்தைத்
துiணியாய்க் கிடந்தோர்தம்
கண்ணீர் துடைத்தே ஒளிதந்த
தந்தை
பெரியார் ஈ.வே.ரா
தமிழர் வாழ்வின் விடிவெள்ளி!
முந்தைக்
கொடுமை முற்றெதிர்த்த
தாகூர் வங்க விடிவெள்ளி!
கவிதைக்
கோயில்! வங்கமொழி
காத்து வளர்த்த போர்மறவர்!
புவியைப்
புரட்டும் எழுத்துகளைப்
பொழிந்த ஈடில் பேரறிஞர்!
அறிவை,
அன்பை, பேரருளை
அழிகின் சிரிப்பை, அடங்கா,ஐம்
பொறியை
அடக்கும் நன்னெறியைப்
புகன்ற தாகூர் வாழியவே!
அமையும்
வாழ்க்கை அழகெய்த
அன்பாம் மனிதம் மணக்காதோ?
சமயம்,
சாதி, பிரிவினைகள்
சாற்றும் உள்ளம் திருந்தாதோ?
இமயம்
குமரி முழுப்பரப்பும்
இணைந்து வாழ உணர்வூட்டி
எமதின்
நாட்டின் மறையான
இனியர் தாகூர் வாழியவே!
நாட்டின்
உயிராய், ஒற்றுமையை
நல்கும் நெறியாய், வீரமதை
ஊட்டும்
மொழியாய், இந்தியர்தம்
உடலாய், உணவாய், இனிமையினைக்
கூட்டும்
அமுதாய் நாட்டுப்பண்
தீட்டிக் கொடுத்த புகழ்த்தாகூர்
காட்டும்
பாதை சோலையெனக்
கமழக் கண்டேன் பாடுகவே!
முகத்தில்
தொங்கும் வெண்கதிர்கள்!
முழங்கால் வரையில் மேல்ஆடை!
அகத்தில்
பொங்கும் நாட்டுணர்வு!
அல்லும் பகலும் மொழியுணர்வு!
செகத்தில்
தாகூர் போல்பிறப்பார்
சிலரே! கீதாஞ்சலி நூலால்
புகழிற்
பொலியும் நம்நாடே!
புரட்சித் தாகூர் நெறிகாப்பீர்!
படித்தோர்
புகழாம் போதையிலே
பட்டம் தேடி இங்கலைவார்!
நடித்தே
உலகை ஏமாற்றி
நாளும் கொள்ளை அடித்திடுவார்!
இடித்(து)ஓர்
உண்மை உரைக்கின்றேன்
இன்னல் விளைத்த அயலவரைத்
துடித்தே
எதிர்த்தார் நற்றாகூர்
துறந்தார் உயர்'சர்' பட்டத்தை!
சீரும்
பேரும் தாகூரைத்
தேடி வந்து சேர்ந்ததுவே!
ஊரும்
நாடும் அவர்உருவை
உயர்வாய் எண்ணி வணங்கியதே!
நேரு,
காந்தி, நற்றிலகர்
நெஞ்சம் நாடும் கவிக்கழகம்!
பாருள்
'மாகாத்மா' காந்தியெனப்
பட்டம் அளித்துப் புகழ்ந்தாரே!
நாகூர்
இறையும், நற்சிவனும்,
நாதர் வடிவும் ஒன்றன்றோ!
ஆ..கூர்
தீட்டி நமக்குள்ளே
அமைத்த சாதி ஒழியாதோ?
தாகூர்
புகழைச் சாற்றிடவே
சான்றோர் கூடும் இச்சங்கம்
தா..கூர்
அறிவை! நேயத்தை!
தரணி செழித்து மகிழ்ந்திடவே!
15-03-2005
தாகூர் விழா, பாரீசு.
புகழப்பட வேண்டியவர்களை தெரிந்து அழகான முரையில் புகழ்கிறீர்கள் ஐயா
RépondreSupprimerரசித்தேன்
அருமை... சிறப்பாக முடித்துள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...
RépondreSupprimerநன்றி...
த.ம.2