vendredi 9 novembre 2012

ஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி.
ஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி....

இரும்பைக் காய்ச்சும் இடத்தினிலே
     ஈக்கே என்ன வேலையடா?
கரும்பை நிகர்த்த கவிபடைக்கும்
     கவியின் நெஞ்சம் தோய்வதுவோ?
குரும்பைப் போன்று காய்வதுவோ?
     குன்றிக் குறுகி ஓய்வதுவோ?
உருவை நீட்டி இவ்வுலகை
     ஓங்கி யளந்த உத்தமனே!

ஊர்..ஊர்.. சுற்றி அலைந்தேனோ?
     உறவைக் கொன்று மகிழ்ந்தேனோ?
பார்..பார்.. இவனின் கொடுமைகளைப்
     பாவச் சுமையைச் சேர்த்தேனோ?
யார்..யார்.. குடியைக் கெடுத்தேனோ?
     நார்..நார்.. ஆகக் கிழித்தேனோ?
ஓர்..ஓர்.. அடியால் இவ்வுலகை
     ஓங்கி யளந்த உத்தமனே!

அம்மை அப்பன் செய்வினையோ?
     ஆன்மா கொணர்ந்த முன்வினையோ?
இம்மை சேர்த்த கொடுங்தீதோ?
     முன்னோர் எடுத்த பெரும்பழியோ?
பொம்மை யாக விதியேந்திப்
     போடும் ஆட்டம் போதுமடா?
செம்மை செய்க! இவ்வுலகைச்
     சீராய் அளந்த திருமாலே!

ஓட்டைப் பானை! என்செய்வேன்!
     உறங்கா இரவு நீள்கிறது!
கூட்டைக் களைத்துக் குஞ்சுகளைக்
     கொள்ளும் பாவம்! அய்அய்யோ!
வேட்டை மிருகம்! உள்ளமெனும்
     கூட்டை உடைத்துத் சீறுவதோ?
ஆட்டை மாட்டைக் குன்றேந்தி
     அன்பாய்க் காத்த பேரழகா!

அண்ணன் என்ன? பின்வந்த
     தம்பி என்ன? ஆசையினால்
மன்னன் என்று கொஞ்சிமகிழ்
     மனைவி என்ன? உறவென்னும்
பின்னல் என்ன? துயர்க்கடலே!
     பிறவா திருக்கும் பேறருளாய்!
அண்ணல் இராமா! இவ்லுலகை
     அடியால் அளந்த வில்லழகா!

தீரா நோயால் வலிபெருக,
     திண்தோள் குன்றி உயிர்அழுவ,
ஆராக் காயம் அனம்படர,
     அமுதா? நஞ்தா? மருண்டுழல,
தேரா வாழ்வு! பழிபாவம்!
     திக்கற் றிருக்கும் எனையிங்குப்
பாரா(து) எனோ? ஈரடியால்
     பாரை அளந்த பரம்பெருளே!

நம்பி இருந்தேன்! உறவாடி
     நாசம் புரிந்து நகன்றனரே!
தம்பி பிடித்துக் கயிர்கட்டித்
     துடிக்கத் துடிக்க வதைப்பதுபோல்
தம்பி என்றே சிலர்நடித்துத்
     தாங்காத் துயரைத் தந்தனரே!
வெம்பி விழும்முன் முணிவீந்து
     வெற்றி தருவாய் வில்லழகா!

துணையாய் எண்ணிப் பயணித்தேன்!
     தூங்கும் பொழுது சதிபுனைந்தார்!
இணையாய் எண்ணி உடன்சேர்த்தேன்!
     எமனை விழுங்கி ஏவ்..என்றார்!
கணையாய் வந்து பாய்கிறது
     காலம் போட்ட பொய்க்காதல்!
அணையாய் நின்றே ஆழ்துயரை
     அடியோ(டு) அகற்றுத் திருவரங்கா!

அறிவும் குறைவு! அகம்கொண்ட
     அழகும் குறைவு! உயிர்களிடம்
பரிவும் குறைவு! மேன்மைதரும்
     பண்பும் குறைவு! தீயோர்தம்
பிரிவும் குறைவு! பெரியோர்தம்
     நட்பும் குறைவு! உன்நாம
தெளிவும் அருளும் வேண்டுகிறேன்!
     தேனார் சோலைத் திருவரங்கா

அலைபோல் ஆசை பொங்கிவர,
     அதன்மேல் ஆடி மயங்கிவிழ,
கலைபோல் காதல் காட்சிதர,
     கனல்போல் காமம் பற்றியெழ,
இலைபோல் காய்ந்து எரிவதுவோ?
     தலைமேல் பதித்த எழுத்துகளை
மலைமேல் பதித்த திருவடியால்
     மாற்றி எழுது மாயவனே!

2 commentaires:

 1. ஓங்கி உலகளந்த பெருமாளிடம் தேன் தமிழில் நீங்கள் வேண்டும் வரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது அய்யா!
  // அலைபோல் ஆசை பொங்கிவர,
  அதன்மேல் ஆடி மயங்கிவிழ,
  கலைபோல் காதல் காட்சிதர,
  கனல்போல் காமம் பற்றியெழ,
  இலைபோல் காய்ந்து எரிவதுவோ?
  தலைமேல் பதித்த எழுத்துகளை
  மலைமேல் பதித்த திருவடியால்
  மாற்றி எழுது மாயவனே!//
  சந்தமும் வார்த்தைகளும் அந்த மாயவனையும் மயக்கிவிடும்.

  RépondreSupprimer
 2. வரிகள் மிகவும் அருமை ஐயா...

  வாழ்த்துக்கள்...

  த.ம.3

  RépondreSupprimer