mardi 27 novembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 16]
ஏக்கம் நுாறு [பகுதி - 16]
 
வெல்லுதடி உன்னழகு! தோற்றுத் தோற்று
     வீழுதடி என்னான்மா! நாளும் வந்து
கொல்லுதடி நீளிரவும்! மெல்ல மெல்லக்
     கொஞ்சுதடி உன்கனவும்! இறைமுன் நின்று
சொல்லுதடி நம்காதல் மலர வேண்டி!
     சொக்குதடி! சுரக்குதடி ஏக்கம் கோடி!
செல்லுதடி நீயமா்ந்த இடத்தை நாடி!
     சிரித்தமா்ந்து களிக்குதடி கவிதை பாடி! 71

அப்பப்பா அவளழகு அடியேன் மெய்யை
     அலக்கலக்காய்ப் பிரித்தெய்தும்! உணவில் போடும்
உப்பப்பா என்பதுபோல் உணா்வில் ஊறி
     உயிர்க்குருதி போலியங்கும்! நன்றே தேடி
ஒப்பப்பா என்றுரைக்க ஒன்றும் இல்லை!
     ஒண்டமிழும் அன்னவளும் ஒருதாய் பிள்ளை!
எப்பப்பா இரவுவரும்! காதற் கண்ணி
     இன்கனவு பெருகிவரும்! ஏங்கும் நெஞ்சே! 72

வாய்மலா்ந்து மணக்கின்ற சொற்கள் கேட்க
     மனமலைந்து கிடக்குதடி! கொஞ்சும் சின்ன
சேய்மலா்ந்து சிரிக்கின்ற அழகைக் கண்டு
     சிந்தனைகள் சிறக்குதடி! காதல் என்னும்
நோய்மலா்ந்து கொடுக்கின்ற துன்பம் கோடி!
     நோக்குமவள் பார்வைதரும் இன்பம் கோடி!
தாய்மலா்ந்து படைக்கின்ற அமுதைப் போன்று
     தமிழ்சுரந்து இனிக்குதடி! சந்தப் பெண்ணே! 73

உளம்வாட, உயிர்வாடக் கண்ணைக் காட்டி
     ஒயிலாகச் செல்பவளே! பகையை நோக்கிக்
களமாட அஞ்சாத கவிஞன் என்னைக்
     கைதாக்கிக் கொண்டவளே! காதல் பூத்து
வளம்பாட நீருற்று! செந்தேன் பொங்கி
     வழிந்தோட முகம்காட்டு! கவிதை பாடி
விளையாட மொழியூட்டு! கனவில் இன்ப
     விருந்துட்டு! வியப்பூட்டு! விரைந்து நன்றே! 74

கன்னியுனை எதிர்ப்பார்த்துக் காலை மாலை
     காத்திருத்தல் சுகமன்றோ! பெருகும் ஆசை
பின்னியெனை வாட்டுவதும் இன்ப மன்றோ!
     பின்தொடா்ந்து வருவதுவும் இனிமை யன்றோ!
மின்னியெனைக் கண்ணழைக்கப்! பேசும் சொற்கள்
     மீட்டுகின்ற இசைகொடுக்கப் போதை ஏறும்!
சன்னியெனைப் பிடித்ததுபோல் உளறும் உள்ளம்!
     பொன்னிநதி பூஞ்சோலைப் பொழிலே வாராய்! 75
                                           [தொடரும்] 

6 commentaires:

 1. அய்யா!
  உங்கள் தமிழ் மழையில்-
  நனைந்தேன் அய்யா!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   மழையில் நனைந்து மகிழ்ந்தாடும் தோழா!
   கழையின் சுவையே கவிதை! - விழைந்து
   கருத்தெழுதி என்றன் கருத்தமா்ந்தாய்! தந்தேன்
   விருப்பெய்தி நன்றி விருந்து!

   Supprimer
 2. அழகு... அருமை...

  வாழ்த்துக்கள் ஐயா...
  த.ம.1

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அவளைப் பாடும் எழுத்தெல்லாம்
   அமுதாய் இனிக்கும்! குளிரூட்டும்
   குவளைக் கண்ணி! கூா்மூக்கு!
   கொத்தி மனத்தைப் புண்ணாக்கும்!
   தவளை காத்தும் இரவுவரத்
   தவழும் ஏக்கம்! சுமையேறும்!
   கவலை பெருகும்! கவிப்பூக்கள்
   கமழக் கமழப் பூத்திடுமே!

   Supprimer
 3. ஆஹா... அபாரம்...அற்புதம்!

  என்னவென்று பாராட்டுவது?
  வார்த்தையின்றி வணங்குகிறேன்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   என்னவென்று பாராட்ட? சொற்கள் தேடி
   ஏடுகளைத் திருப்புகிறார் அருணா செல்வம்!
   சின்னதென்று செப்புகிற சீரும் கூடச்
   செல்வியவள் எழில்பாடச் சிறந்தே ஓங்கும்!
   அன்னமென்று அருந்தமிழை அள்ளி அள்ளி
   அகம்நிறைய உண்ணுகிற புலவன் நானும்
   இன்னதென்று புரியாத மயக்கம் கொள்வேன்
   இனியதமிழ் நெஞ்தெழுதும் கருத்தைக் கண்டே!

   Supprimer