dimanche 4 novembre 2012

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 8]

நண்பா்களின் வலைப்பூக்களில் 
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

தென்றல் வலையில் பூந்தாது
        
சிக்கும் என்றே உள்வந்தேன்!
இன்றென் நாட்டின் நிலைமையினை
        
எரியும் நெருப்பாய்த் தந்துள்ளீா்!
என்றென் நாடு மாறிடுமோ?
        
ஏற்ற தாழ்வு நீங்கிடுமோ?
அன்பின் தேடல் தொடா்ந்திட்டால்
        
அகிலம் மணக்கும் பூக்காடே!

17.10.2012

------------------------------------------------------------------------------------------------------

பிரான்சு நாட்டின் தமிழ்ப்பணியில் இயற்கையாகவே  
என்பெயா் பின்னிப் பிணைக்கப் பட்டுவிட்டது

அன்பு மனையும், அருமையான மூன்று செல்வங்கள்
பேரெழிலி, திருச்சித்தன், பாவரசி 

என்சொத்துதமிழ்

இதுதான் என்வாழ்வு

முறையாகத் தமிழைக் கற்றவன்!  
கற்றுக்கொண்டு இருப்பவன்!

தமிழை ஒரு பிறவியில் கற்க முடியாது என்பது என் முடிவு!  
பிறந்து பிறந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

நான் கற்றதை அடுத்துவருகின்ற  
தலைமுறைக்குக் கற்றுத்தரவேண்டும் என்பது என்நோக்கம்

பிரான்சில் யாப்பிலக்கணம் வகுப்பு நடத்தி வருகிறேன்
மரபுக் கவிஞா் பலா் உருவாகி வருகின்றனா். 

நுாறு மரபுக் கவிஞா்களை உருவாக்க வேண்டும் என்பது  
என் எண்ணம்,

பாண்டித்தியம் வடச்சொல்
புலமை - தமிழ்ச்சொல்

சொன்ன குறிப்பைப் தொடா்நது படித்திடுக!
இன்னும் உரைப்பேன் இனித்து

17.10.2012

------------------------------------------------------------------------------------------------------

வள்ளுவா் தந்த வளா்நெறியை மின்வலையில்
அள்ளிப் படைக்கின்ற பேரழகு! - துள்ளுமென்
நெஞ்சம் நெறியுணா்ந்து! நீடுதமிழ்ச் சீரொளிர்ந்து
கொஞ்சும் நெறியுணா்ந்து கூறு

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பசிவெடி கவிதை கண்டேன்!
    படிப்பவா் நெஞ்சுள் பாயும்!
கசிவெடி இன்றி ஏழை
    கண்களில் குருதி யோட்டம்!
புசுவெடி போன்றே ஆட்சி
    புரிபவா் செயல்கள் போகும்!
வசைவெடி பாடிப் பாடி
    வாய்,மனம் நோகும்! வேகும்!!

19.10.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

கலைமகள் தாயை வேண்டி
    கனிந்துள கவிதை கண்டேன்!
அலைமகள் தாயை வேண்டி
    அளித்துள கவிதை கண்டேன்!
வலைமகள் மகிழும் வண்ணம்
    வடித்துள கவிதை கண்டேன்!
தலைமகள் என்றே போற்ற
    தமிழினில் வேதா வாழ்க!

20.10.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பார்வை பார்த்த நொடிபொழுது
    பகலும் இரவும் நீண்டுவரும்!
போர்வை போர்த்தி அடைத்தாலும்
    பொல்லா நினைவு பொலிந்துவரும்!
கோர்வை யாகத் தொடா்ந்துவரும்!
    கொட்டும் மழைபோல் குளிர்ச்சிதரும்!
வோ்வை முத்து விளைக்கின்ற
    சோர்வை போக்கும்! சுவைகொடுக்கும்!
 
20.10.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!! வாழ்த்துக்கள்!

தொடா்ந்து எழுதுங்கள். கவிக்கலை கை கூடும்!
கவிதை எழுதுவதில் சில நுட்பங்கள் 
வானமே என்ற எதுகைக்கு மனம், புனல், தனம்
 போன்றவை எதுகையாக வாரா!

முதல் எழுத்து நெடிலாக இருந்தால் மற்ற எதுகைகளுக்கு  
முன்னும் நெடிலே வரவேண்டும்,  
குறிலாக இருந்தால் குறிலே வரவேண்டும்

பேசிடும் இளங்கிளியே!
வீசிடும் மென்காற்றே!
மாசிடும் என்துயரைப்
பீசிடும் பேரழகே!

வானமே! வளா்வாழ்வே!
கானமே! கவிச்சுவையே!
மானமே! புகழ்மாண்பே!
மீனமே! மலா்வனமே!

முன் எழுத்து நெடிலாகவே வந்திருப்பதை உணா்க !

மனமே நிறைந்ததுவே!
வனமே மலா்ந்ததுவே!
தனமே செழித்ததுவே!
இனமே தழைத்ததுவே!

முன் எழுத்துக் குறிலாக அமைந்திருப்பதைத் தெளிக!

உன்னெழில் கவிதையிலே
என்னுயிர் பதிந்ததனால்
இன்றமிழ் மரபுகளை
நன்றுற உரைத்தனனே!

29.10.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கம்பன் கவித்தமிழைக் காலம் படித்திடவும்
இம்மண் எழில்பெறவும் ஈந்துள்ளீா்! - எம்மனம்
துள்ளிக் களிக்கும்! தொடா்பணிக்கு நன்றியைச்
சொல்லிக் களிக்கும் சுடா்ந்து!

பிரான்சு கம்பன் கழகம் 11 ஆம் ஆண்டுக் கம்பன் விழாவை 
11.11.2012 ஞாயிற்றுக் கிழமை நடத்துகிறது.  
விழா வேலைகள் நிறைந்துள்ளன.  
விழா நிறைவுற்றதும் மடல் எழுதுகிறேன்.

01.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கதை சிந்தனையைத் துாண்டுகிறது!
பைந்தமிழ் வளம்பெறும்!

நாட்டுக் குழைத்த தலைவா்களை
    நாளும் வணங்கிப் போற்றிடுக!
பாட்டுக் குழைத்த பாரதியின்
    பாதம் பணிந்து பயின்றிடுக!
ஏட்டுக் குழைத்த அறிஞா்களின்
    இன்றாள் ஏத்தி இயங்கிடுக!
வீட்டுக் குழைத்து! நன்குண்டு
    வெற்றாய் வாழ்தல் வாழ்வாமோ?

01.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பலமுறை என்மின்வலைக்கு வருகைதந்து  
கருத்து அளித்தமைக்கு மிக்க நன்றி!

11.11.2012 கம்பன் விழா நடைபெறவுள்ளதால் வேலைகள் நிறைந்துள்ளதால் உங்கள் வலைக்குத் தொடா்ந்து 
 வரமுடியவில்லை!  
விழா நிறைவுற்றதும் நாளும் வந்து நற்றமிழ் பருகுவேன்.

சின்ன சின்ன மலரைச் சோ்த்துச்
செய்த மாலைபோல்
மின்ன மின்னக் கவிதை பாடும்
மேன்மை தொடா்கவே!

நண்பா் ரமணி நவின்ற கருத்தை
நன்கு போற்றுவோம்!
அன்பா் என்றே அகிலம் அழைக்க
அருளை ஏற்றுவோம்!

வெற்றி வந்து பற்றிப் படர
வேண்டும் முயற்சியே!
வற்றி வரண்ட வாழ்வை மாற்று!
வளரும் மகிழ்ச்சியே!
02.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வருகின்ற தமிழ்ப்புத்தாண்டிலிருந்து மரபுக் கவிதை  
இலக்கணத்தை என் வலையில் எழுத உள்ளேன்.

மரபுக் கவிதை வகுப்பில் சோ்ந்து பயன்பெறவும்

கவிதைக்குக் கருத்தே உயிர்!
யாப்பு உடல்!

கம்பன் விழா முடிந்ததும் உங்கள் வலையில் உள்ள  
கவிதைகளைப் படித்துக் கருத்திடுவேன்!

வலையில் கிடைத்த வளா்தமிழ்த் தோழா!
கலையில் சிறந்தகவி பாடு! - சிலையின்
நிலையில் புகழ்மிளிர நெஞ்சொளிர வாழ்க!
தலையில் தமிழைத் தரித்து

03.11.2012

------------------------------------------------------------------------------------------------------

1 commentaire: