jeudi 29 novembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி 17]



ஏக்கம் நுாறு [பகுதி - 17]
 
தோள்கண்டார் தோளேகண்டார் நிலையைப் போன்று
     தோகைவிழி எழிற்கண்டு நின்றேன்! மாயோன்
தாள்கண்டார் தாளேகண்டார் நிலையைப் போன்று
     தமிழவளின் விரலழகில் மயக்கம் கொண்டேன்!
வாள்கண்டார் பிழைத்திடலாம்! பாய்ந்து தாக்கும்
     வரிப்புலியை வென்றிடலாம்! காதல் நோயுள்
நாள்கண்டார் உரைத்திட்ட கவிதை யாவும்
     நான்கண்டு வாடுகிறேன்! ஏங்கும் நெஞ்சம்! 76

மங்கையவள்! மலருமவள்! மனம் செழிக்கும்
     மழையுமவள்! மதுவுமவள்! கவியாய்ப் பாயும்
கங்கையவள்! கருணையவள்! கன்னல் முற்றிக்
     கனிந்தாடும் காடுமவள்! நிலவின் சின்ன
தங்கையவள்! தமிழுமவள்! என்றன் நெஞ்சின்
     தாகமவள்! உயிர்புகுந்து காதல் எந்திச்
சங்கையவள் ஊதுகிறாள்! கண்கள் நான்கும்
     தாம்கவ்வி இன்பமுறும்! தொடரும் ஏக்கம்! 77
                                         
                                      [தொடரும்]

8 commentaires:

  1. ஆகா.. ரசிக்க வைக்கும் வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...
    த.ம.1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நோகா வண்ணம் கருத்தெழுதும்
      நுண்மை கொண்ட தனபாலை
      ஆகா என்றே கை..தடடி
      ஆடச் செய்யும் என்கவிதை!
      பாகா? பழமா? பனிக்கூழா?
      படிக்கப் படிக்கச் சுவைகூடும்!
      சாகா வரத்தைத் தமிழன்னை
      தந்தே என்னைக் காத்திடுவாள்!

      Supprimer
  2. கம்ப நாட்டார்
    இராமனை வர்ணித்ததுபோல
    இங்கே உருவகங்கள்
    மிக அழகாக நெஞ்சம் நிறைகிறது ஐயா ..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கம்பன் கவியைக் கற்றதனால்
      கவிஞன் என்ற பெயா்பெற்றேன்!
      நம்பன் இராமன் திருவருளால்
      நன்றே பாடும் திறனுற்றேன்!
      கொம்பன் வம்பன் யாரிடமும்
      குனிந்து போகா என்னெஞ்சம்
      செம்பொன் மனத்தா் மகேந்திரனார்
      செப்பும் தமிழைப் பணிகிறதே!

      Supprimer
  3. மங்கையவள் மலருமவள்..படிக்க படிக்க இனிமையாக இருக்கிறது . நன்றி ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மங்கை என்றும் மலா்என்றும்
      வடித்த கவியின் சுவைபருகி
      நங்கை சசியும் கருத்திட்டார்!
      நன்றி நவின்று மகிழ்கின்றேன்!
      நுங்கைப் போன்று குளிரூட்டும்
      நோக்கா் சூடும் புகழ்மாலை!
      சங்கை எடுத்தே ஊதுகிறேன்!
      தமிழைப் பாடி பரப்பிடவே!

      Supprimer
  4. அடடா... அருமை அருமை..

    புலவர் அவர்களே... ஏக்கத்தை நுாறோடு முடித்து விடுவீர்களா...? முடிந்திடுமா...?

    எங்களின் மனம் இங்கே கேட்டு ஏங்குகிறது. அதனால் தான் கேட்டேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மடலைக் கண்டேன்! என்னெழுத்தை
      மடக்கும் கேள்வி! வாழ்த்துகிறேன்!
      இடரைத் துரத்தும் துணிவுண்டு!
      எதிர்ப்பை வெல்லும் அறிவுண்டு!
      உடலைப் பிரிந்தே என்ஆன்மா
      உயா்ந்தோன் அடியை அடைந்தாலும்
      சுடரைப் போன்றே அவள்ஏக்கம்
      தொடா்ந்தே ஓங்கி ஒளிர்ந்திடுமே!

      Supprimer