lundi 8 octobre 2012

காலம்




காலமே உன்னை யானும்
    கடவுளாய் வணங்கு கின்றேன்!
ஞாலமே போற்றும் வண்ணம்
    நல்கினாய் முன்னை ஆண்டை!
கூளமாய் ஆகச் செய்தாய்
    குறுமதி உற்றோர் தம்மை!
ஆலமாய்த் தழைக்கச் செய்தாய்
    அருண்ணெறி பெற்றோர் தம்மை!

பொன்னெனக் காலந் தன்னைப்
    போற்றுவார் வாழ்க்கை ஓங்கும்!
கண்ணெனக் கடமைச் சீரைக் 
    காப்பவர் கவலை நீங்கும்!
மண்ணெனக் கிடப்போர் வாழ்வில்
    மலையெனத் துன்பம் தூங்கும்!
விண்ணென விரிந்த நெஞ்சுள்
    வியன்மிகு மேன்மை தேங்கும்!

ஆனைக்கோர் காலம் வந்தால்
    அடுப்பறை உருட்டும் சின்னப்
பூனைக்கோர் காலம் வாய்க்கும்!
    புழுதியில் கிடக்கும் வண்ணப்
பானைக்கோர் காலம் நேரின்
    பட்டாடை சூடிக் கொள்ளும்!
வானையோர் கையால் தூக்கி
    வளைத்திட நினைத்தல் வீணே!

நாளினை அறுக்கும் வாளாய்
    நவிலுவார் காலப் பெண்ணை!
காலினை இழந்த மாந்தன்
    கோலினை ஊன்றிச் செல்வான்!
சால்புடைக் காலந் தன்னைச்
    சற்றுமே மதியா விட்டால்
நூலினைப் போன்று வாழ்க்கை
    நொடியினில் அறுந்து போகும்!

வன்சுமை நெஞ்சம் பெற்றால்
    வாடிடும் இளமைக் காலம்!
பெண்தனை நாடி இன்பம்
    பெற்றிடும் பருவக் காலம்!
தன்சுமை தாங்கா(து) அங்கம்
    தளர்ந்திடும் முதுமைக் காலம்!
என்சுமை நேரும் என்றே
    ஏங்குதல் காலக் கோலம்!

விண்சுமை குறையச் செய்யும்
    மின்னிடும் மாரிக் காலம்!
மண்சுமை குறையச் செய்யும்
    மரவிலை உதிரும் காலம்!
புண்சுமை பெருகச் செய்யும்
    புழுங்கிடும் கோடைக் காலம்!
இன்சுமை பெருகச் செய்யும்
    இனியநற் குளிராம் காலம்!

அறிவினை அளிக்கும் காலம்
    அழிவினைத் தடுக்கும் காலம்
சிறப்பினைக் கொடுக்கும் காலம்
    சீரினைப் பரப்பும் காலம்
அறத்தினை ஊட்டும் காலம்
    அமைதியை நாட்டும் காலம்
திறனுடை நல்லோர் பின்னே
    சேர்ந்துள காலம் அன்றே!

நாயென நம்மைக் கீழாய்
    நலிவுறச் செய்யும் காலம்
தாயெனும் உள்ளம் இன்றித்
    தவறுகள் புரியும் காலம்
நோயெனும் துன்பஞ் சேர்ந்து
    நொந்துயிர் வாட்டும் காலம்
தீயர்தம் உறவிற் கூடித்
    திரிந்திடும் காலம் அன்றே!

செல்வமே சேர்ந்த போதும்
    செய்கையில் எளிமை வேண்டும்!
வள்ளலே வாழ்க என்று
    வாழ்த்திட வாழ வேண்டும்!
அல்லலே வந்த போதும்
    அதையெதிர்த் தழிக்க வேண்டும்!
உள்ளமே இவை அறிந்தே
    ஒளியுறக் காலம் வெல்க!

எண்ணிய எண்ணம் யாவும்
    இனிமையை அளிக்க வேண்டின்,
கண்ணியம் வாழ்வில் சூடிக்
    கருணையைப் பொழிய வேண்டின்,
புண்ணிய நெறியை மேவிப்
    பொலிவுடன் திகழ வேண்டின்
பின்னிய காலம் வென்று
    பிறந்ததன் பேற்றைக் காண்க!

கம்பன் இதழ் 09.09.2002

19 commentaires:

  1. வாழ்க்கைக்குகந்த தத்துவத்தை
    வளமாய் சொன்னீர் கவிதையினால்
    உனைப் போற்ற இங்கு வார்த்தையின்றி
    மீண்டும் புழுவாய்த் துடிக்குது மனமும் ஐயா !.....
    ஏற்றத் தாழ்வு எல்லாமே எம்
    எதிரே வருமே சொல்லாமல் !..
    அதை வாட்டம் இன்றி எதிர்த்து நின்றால்
    வளமாய் அமையும் நற் காலம் என
    பாட்டில் சந்தம் குறையாமல் தினம்
    பாடும் புலவர் நீர் வாழ்க !!!!!................
    நின் குடி வாழ்க !....
    நின் புகழ் வாழ்க !....
    செந்தமிழ் பரப்பும் நற் குணவானே
    அந்த ஐங்கரன் துணை இருக்க
    நின் பணியது சிறக்கட்டும் !....
    நன்றிகள் பல கோடி இங்கும்
    நானுரைக்கின்றேன் ஐயா ......

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மீண்டும் நன்றிகள்!

      அம்பாள் படைத்த கருத்தினிலே
      அமுதம் சுரக்கக் காண்கின்றேன்!
      அம்..மால் அழகில் ஆழ்வார்கள்
      ஆழ்ந்த நிலைபோல் நானுள்ளேன்!
      செம்பால் ஊற்றிச் சிந்தனையைச்
      செழிக்கச் செய்யும் என்கவிகள்!
      எம்மால் இயன்ற தெதுவுமிலை!
      எல்லாம் இன்பத் தமிழருளே!

      Supprimer
  2. இலகு வழியில் தளத்தை வடிவமைக்க
    இங்கு செல்லுங்கள் ஐயா .பிற தளங்களிலும்
    தமிழ் 10 ,தமிழ்மணம் ,இன்ட்லி இவற்றிலும்
    உங்கள் ஆக்கங்களைப் பகிர்ந்தளியுங்கள் .
    வெற்றி என்றும் உங்களுக்கு கிட்டிடவே
    இந்த அம்பாளடியாளும் வாழ்த்துகின்றேன் .
    http://www.bloggernanban.com/p/how-to-start-blog.html

    RépondreSupprimer
    Réponses

    1. அன்பு வணக்கம்!

      இங்கே உரைத்த இணையவழிச் செய்கைகளை
      எங்கே படிப்பேன் இயம்பிடுக! - சங்கே
      எடுத்துாதிச் சாற்றுகிறேன்! இன்வலை கற்றுத்
      தொடுத்துாத இல்லை துணை!

      நீங்கள் உரைத்த தமிழ் 10!
      இன்ட்லி என்றால் இட்லி நினைவுதான் வருகிறது!
      தமிழ்மணம் இவைகளைக் குறித்து முழுமையாக நான் அறியவில்லை

      இயன்றால் என் மின்னஞ்சலுக்கு விளக்கமாக எழுதுங்கள்
      முயற்சி செய்கிறேன்! kambane2007@yahoo.fr

      Supprimer

  3. அய்யா!

    உங்கள் கவிதைகளில் மூழ்கிடுவேன் -
    தினம் தினம்!

    கருத்திட முடியாமல்-
    வருந்துவேன்-
    அணுதினம்!

    இன்று-
    வழியை திறந்தமைக்கு-
    மகிழும் தினம்!

    அம்பாளடியால் அவர்கள்-
    சொன்ன பிறகே -
    அறிந்தேன்!

    உங்கள் தமிழ் மழையை-
    கொட்டுங்கள்-
    நான் நனைந்திடுவேன்!

    RépondreSupprimer
    Réponses

    1. முதல் வணக்கம்!

      ஓரிரு சொற்கள் மட்டும்
      ஓதிடும் சீனி இன்று
      பேருரு கொண்டு நின்ற
      பெருமைசோ் திருமால் போன்று
      சீருறு வண்ணம்! கன்னல்
      சிந்திடும் தமிழைத் தந்தார்!
      தாருறும் மணத்தை நானும்
      தழுவியே நெகிழ்ந்தேன் நண்பா!

      Supprimer
  4. காலம் - முக்காலத்தையும் முரசு கொட்டி அறிவித்து, இனிமையான எதிர்காலத்திற்கு வழி காட்டுகின்றது. நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. கருத்திற்குக் கனிவான நன்றிகள்!

      காலத்தை நன்குணா்ந்து கட்டும் பணியாவும்
      ஞாலத்தை வெல்லுமே நன்கு!

      Supprimer
  5. மிகவும் அருமை ஐயா..

    மிகவும் பிடித்தவை :

    /// செல்வமே சேர்ந்த போதும்
    செய்கையில் எளிமை வேண்டும்!
    வள்ளலே வாழ்க என்று
    வாழ்த்திட வாழ வேண்டும்!
    அல்லலே வந்த போதும்
    அதையெதிர்த் தழிக்க வேண்டும்!
    உள்ளமே இவை அறிந்தே
    ஒளியுறக் காலம் வெல்க! ///

    நன்றி... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய நண்பருக்கு கனிந்த வணக்கம்!

      அழகு வரிகளை அள்ளி அருந்தி
      பழகு தமிழைப் பரப்பு!

      Supprimer
  6. வணக்கம்.

    காலத்தை நன்றாய் அளந்து
    கவிதையாய் வரைந்து விட்டீர்!
    ஞாலத்தில் நடக்கும் இழிவை
    நயம்பட உரைத்து விட்டீர்!
    சாலங்கள் செய்வோர் தம்மைச்
    சரித்திட வழியும் சொல்லிப்
    பாலங்கள் போட்டு மொழியில்
    படைத்திட்ட கவியே! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காலத்தைக் கணக்கிட்டு வாழ வேண்டும்!
      கடமைகளில் எந்நொடியும் உறுதி வேண்டும்!
      ஞாலத்தைக் கணக்கிட்டுப் பாதை போடடு
      நமக்கிணையாய் யாருமிலை உயர வேண்டும்!
      பாலத்தைக் கணக்கிட்டுக் கட்டல் போன்று
      பகலிரவாய்ப் படைப்புகளைப் படைத்தல் வேண்டும்!
      ஆலத்தைக் கணக்கிட்டு வன்மை சூடும்
      அருணாவின் கருத்திற்கு நன்றி! நன்றி!

      Supprimer
  7. எண்ணிய எண்ணம் யாவும்
    இனிமையை அளிக்க வேண்டின்,
    கண்ணியம் வாழ்வில் சூடிக்
    கருணையைப் பொழிய வேண்டின்,
    புண்ணிய நெறியை மேவிப்
    பொலிவுடன் திகழ வேண்டின்
    பின்னிய காலம் வென்று
    பிறந்ததன் பேற்றைக் காண்க!

    முழு கவிதையுமே நல்லா இருக்கு அதில் எனக்கு மிகவும் பிடித்தவரிகள் மேலே

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      படித்த அடிகளில் பாய்ந்தேஉம் நெஞ்சைப்
      பிடித்த அடிகள்எம் பேறு!

      Supprimer
  8. வணக்கம்,

    இன்றும் வழக்கம் போல் கவி மழையைப் பொழிந்துள்ளீர்கள் அய்யா?

    பிடித்தது:
    அல்லலே வந்த போதும்
    அதையெதிர்த் தழிக்க வேண்டும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாளும் கவிமழையில் நன்றே நனைந்துளம்
      மூளும் கருத்தை மொழி!

      Supprimer
  9. word verification option எடுத்து விட்டதற்காக நன்றி ஐயா...பலமுறை தங்க்ளின் வலையில் கருத்துப் பதிய முடியாமல் தவித்திருக்கிறேன் தங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நடிகா் ரசினி வந்ததுபோல்
      நண்பா உன்னை வரவேற்றேன்!
      விடிவை விளைக்கும் என்கவியை
      விழுதாய்த் தாங்கி நிற்கின்றீா்!
      முடிவை எழுதிச் செயலாக்கம்
      முறையாய்ச் செய்தல் என்பாதை!
      அடியைத் தொடரும் எதுகையென
      ஆகா நட்பு மலா்கிறதே!

      Supprimer

  10. காலம் அறிந்து கடமை புரிந்திட்டால்
    ஆல வன்மை அடைந்திடலாம்! - ஞாலத்தை
    வெல்லும் வழியை விளைத்திடலாம்! எத்திசையும்
    ஒல்லும் வழியை உணா்ந்து!

    RépondreSupprimer