நான் முதலமைச்சரானால்...... [பகுதி - 2]
(26.10.2017 கம்பன் கட்சியின் தலைவர்
கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் 25551 வாக்குகள்
அதிகமாகப் பெற்று முதலமைச்சராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்)
முதலமைச்சர் பதிவியினைத் தந்த, என்றன்
முதுகெலும்பு போன்றவரே வணக்கம்! நன்றே
அதற்கமைச்சா் என்றென்னைப் போற்றிப் பாடி
ஆண்டவனாய் ஆக்காதீா்! ஆட்சி மன்ற
இதற்கமைச்சர் ஆனாலும் என்றும் உங்கள்
இதயத்தின் தோழரென இருப்பேன்! இங்கே
எதற்கமைச்சர் ஆனாலும் ஆளும் வாய்ப்போ
ஈரைந்தே ஆண்டுகளாம்! பிறகொன் றில்லை!
தொட்டாலே தீட்டென்று சொன்னால், நெற்றிப்
பொட்டினிலே சுடுவென்பேன்! மரங்கள் எங்கும்
நட்டாலே மழைசிறக்கும்! மரமும் மண்ணும்
நாட்டுரிமை! சாதிகளின் பெயரைச் சொல்லி
இட்டாலே பத்தாண்டுச் சிறையைக் காண்பார்!
இனியதமிழ் மக்களிடம் சுரக்கும் அன்புக்
கட்டாலே ஆண்டிடுவேன்! இன் கரும்புக்
கட்டாகக் கவிதருவேன்! ஓங்கும் வாழ்வே!
இமயத்தில் முக்கொடியை ஏற்றி வைத்த
ஈடில்லா மன்னன்போல் வீரங் கொண்டு
நமைச்சுற்றி வருகின்ற நிலவின் மேலே
நற்றமிழின் கொடிபறக்கச் செய்வேன் பாரீர்!
சமயத்தின் பெயரெல்லாம் நீக்கி விட்டுத்
தமிழ்மார்க்கம் தந்திடுவேன்! குறளாம் நூலை
இமையொத்துக் காக்கின்ற உணர்வை ஊட்டி
இன்குறளை நம்மறையாய் ஒலிக்கச் செய்வேன்!
தையூட்டும் நல்வளங்கள் தருவார் என்று
தமிழுட்டும் புலவரெலாம் எண்ணி நிற்க!
கையூட்டும் நினைவினிலே காலை மாலை
கனவுலகில் மகிழ்ந்திடுவார்! கொள்ளை கொண்ட
பையூட்டும் எண்ணங்கள் மக்கள் வாழ்வைப்
பாழூட்டும்! நாடழியப் பஞ்ச மூட்டும்!
மையூட்டும் மதுவூட்டும் மனத்தார் தம்மை
நெய்யூட்டும் அடுப்பிலிடச் சட்டம் செய்வேன்!
மனைபோட்டு விற்கின்ற கொள்ளை! நாட்டு
வரலாற்றில் எள்ளளவும் இனிமேல் இல்லை!
சினைபோட்டுப் பொரிக்கின்ற செயலைப் போலச்
சீர்திருத்தச் சிந்தனைகள் என்னுள் பூக்கும்!
எனைப்போட்டுத் தாக்கிடவே எத்தர் கூட்டம்
எதிர்வந்து நின்றாலும் அஞ்ச மாட்டேன்!
பனைபோட்டு நீர்க்கரையைக் காத்தல் போன்று
பசுந்தமிழின் குறள்நெறியில் ஆட்சி செய்வேன்!
அன்றைக்கும் தன்மகனை மன்னன் ஆக்கும்
தன்னலத்து முடியாட்சி! தோழா இங்கே
இன்றைக்கும் தன்மகனைத் தலைவன் ஆக்கும்
இழிநிலையில் குடியாட்சி! இந்தப் போக்கை
என்றைக்கும் இல்லாமல் ஒழிக்க வேண்டி
என்னாட்சி அதற்கான சட்டம் தீட்டும்!
கொன்றைக்கும் கோடிக்கும் இடமே இல்லை!
கொஞ்சுகின்ற குளிர்தமிழே என்றன் எல்லை!
அரசியலை நெறிபடுத்த முனைவர் பட்டம்
அடைந்தவரே தேர்தலிலே நிற்க வேண்டும்!
மரச்செதிலை விற்கின்ற தொழிலைக் கூட
மண்ணாள வருபவர்கள் செய்யக் கூடா!
வரும்பொருளைக் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும்!
ஒருபைசா அதிகமெனில் பதவி இல்லை!
பெரும்பொருளைத் தலைமுறைக்குச் சேர்த்து வைக்கும்
பெருசாளிக் குடன்தூக்கு! நீதி காப்பேன்!
ஒன்றுமுதல் இறுதிவரை தமிழாம் கல்வி
ஒப்பின்றி அளித்திடுவேன்! தமிழைக் கற்றால்
இன்றுமுதல் வேலையுண்டு! நாட்டைத் தூற்றி
இருநொடிகள் எண்ணுவதும் பொல்லாக் குற்றம்!
அன்றுமுதல் இருந்துவரும் மாய பொய்யை
அடியோடு அழித்திடுவேன்! கம்பன் போன்றே
என்றுமுள செந்தமிழை உயிராய்ப் போற்றி
எத்திசையும் பரப்பிடுவேன்! இனிக்கும் வாழ்வே!
பதினெட்டு வயதுவரை படிக்க வேண்டும்!
படிப்பவரை பணிசெய்யப் பணித்தல் குற்றம்!
மதிப்பிட்டு அயல்நாட்டு வேலை தேட
வழியில்லை! தாய்செழிக்கப் பணிகள் செய்வீர்!
சதியிட்டுத் தாய்த்தமிழைத் தடுப்போர் தம்மைத்
தனிக்காட்டில் விட்டிடுவேன் புலிகள் உண்ண!
பதிப்பிட்டுத் தருகின்ற நூhல்கள் ஆய்ந்து
பரிசளிப்பேன்! கொடைதருவேன்! மகிழ்ச்சி பொங்கும்!
விளையாட்டில் தமிழர்களின் திறமை ஓங்க
விருதுபல வழங்கிடுவேன்! கொஞ்சும் வண்ண
கலையூற்றில் அறிவியலைப் புகுத்தி வைப்பேன்!
கவியூற்றில் மணக்கின்ற நூல்கள் காப்பேன்!
வலையேட்டில் தமிழ்நூல்கள் யாவும் மின்ன
வகைவகையாய் மொழிபெயர்ப்பேன்! விரைந்து பாயும்
மலையாற்றின் போக்கைப்போல் வளங்கள் சேர்த்து
மண்ணுலகைப் பொன்னுலகாய் ஆட்சி செய்வேன்!
26.10.2012
நிறைய திட்டங்கள் வைத்துள்ளீர்கள். மனம் மகிழ்கின்றது. இதற்காகவே நீங்கள் முதலமைச்சராக இருக்கலாம். இதுவும் நடக்கலாம். வாழ்த்துக்கள்.
RépondreSupprimerமுதலமைச்சரான தங்களுக்கு வாழ்த்துகள்...
RépondreSupprimerதங்கள் பணி சிறக்கட்டும்...
ஒன்றையும் விடாமல் கூறி விடீர்கள். இதை செயற்படுத்தினால் நாட்டின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
RépondreSupprimerஎண்சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்தானே ஐயா?
அற்புதம்.
நல்ல பல திட்டங்கள்... வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerத.ம.1