samedi 13 octobre 2012

உங்கள் கருத்துக்கள்மின்வலையில் சிக்கிய
இன்றமிழ் உறவுகளே வணக்கம்!

வருகின்ற 11.11.2012 ஞாயிற்றுக் கிழமை, பிரான்சு நாட்டில் என் தலைமையில் இயங்கும் கம்பன் கழகம் 11 ஆம் ஆண்டுக் கம்பன் விழா நடத்தவுள்ளது. விழா வேலைகள் நிறைந்துள்ளன. இரண்டு மாதங்களாகத் தொடா்ந்து வலையேற்றி வந்ததேன். கம்பன் விழா நிறைவுறும் வரை வலையேற்றக் காலம் கிடைக்குமா என்பது ஐயமே! காலம் கிடைப்பின் வலையிடுவேன்.

என்வலையில் பூத்த அடுத்தோர் பிறவி, வேலெனத் தாக்கும் விழி
ஆகிய இரண்டு கவிதைகளுக்கு நீங்கள் இட்ட கருத்துரையையும்,
உங்கள் கருத்துகளுக்கு நான் எழுதிய கவிதைகளையும் இங்குத் தொகுத்துத் தருகிறேன்!

தமிழைப் பரப்புவதும், தமிழ் நட்பை வளா்ப்பதும், மொழிப்பற்றாளா்களை ஒன்றிணைப்பதும் என் வலையின் நோக்கம்!

உங்களுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களில் எழும் ஐயங்களைக் கேள்வியாகத் தொடுக்கவும். விடை எழுதக் காத்திருக்கிறேன்.

உங்கள் கருத்துகளைத் தமிழில் எழுதவும்! பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதவும்!

மெல்லப் புரிகின்ற மேன்மைப் பணிகள்!நாம்
வெல்ல வழிகள் விளைப்பன! - வல்லவனே!
செல்லத் தமிழைச் செழிப்புறக் காப்பது
நல்ல மழையின் நலன்!

-----------------------------------------------------------------------------------------------------------------சீனி

இனித்ததய்யா !

உங்கள் அழகிய தமிழ்...

09.10.2012

வணக்கம்! நன்றி!

தமிழெனில் நல்லினிமை! தோழா தமிழுக்(கு)
அமிழ்தும் இணையிலை ஆடு!

10.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

முரளிதரன்

அய்யா! நல்ல வேண்டுகோள்கள்! அழகுக் கவித்தமிழில் கண்டு ரசித்தேன்.

09.10.2012

நன்றியுடன் வணக்கம்!

அழகுக் கவித்தமிழை அள்ளிப் பருகப்
பழகும் மொழிச்சீா் படா்ந்து

10.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

இரமணி

இந்தப் பாட்டின் அழகுக்கும்
ஆழ்ந்த பொருளுக்கும் மயங்கி ஆண்டவன்
நீங்கள் கேட்பவைகளுக்கு அதிகமாகவே
நிச்சயம் அள்ளி வழங்குவான்!
மனம் கொள்ளை கொண்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்!

09.10.2012

வருகைக்கு நன்றி! வளங்கள் கொடுக்கும்
கருத்தை வணங்குமென் கை!

கொள்ளை கொண்ட செந்தமிழாள்
    கொடுத்த கவிதை! ஐந்தகவை
பிள்ளை கொண்ட பொம்மையெனப்
    பேணிக் காத்தேன்! பூத்தாடும்
கொள்ளைப் புறத்துப் பேரழகாய்க்
    குலுங்கும் கருத்தைப் படைத்திட்டீா்!
கள்ளைக் குடித்த போதையெனக்
    கவிஞன் நெஞ்சம் கூத்திடுதே!

10.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

திண்டுக்கல் தனபால்

அருமை வரிகள்...

///
படரும் மடமை முட்செடியைப்
பாரில் முற்றும் ஒழித்திடவும்
தொடரும் பிறவி வாய்க்குமெனில்
தூயா என்னைப் படைப்பாயே! ///

அந்த வாய்ப்பு கிடைக்கட்டும் ஐயா... நன்றி...

09.10.2012

வணக்கம் தோழா!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

துறவிகள் பலபோ் இன்றும்
     உறவினில் உவந்து நிற்பார்!
பிறவிகள் வேண்டாம் என்று
     பிணியிலாப் பித்தா் கேட்பார்!
இறவிகள் பலபோ் இல்லை!
     ஈடிலா மேலோன் ஒன்றே!
அறவியல் தமிழைக் காக்க
     அடியவன் பிறக்க வேண்டும்!

10.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

சசிகலா

பெண், மண், பொன், இவை மேல் ஆசை இல்லாது எனைக்காப்பாய் 
இறைவா! இதை விடச் சிறப்பு என்ன இருக்கு! 

அழுத்தமான  வரிகள்நன்றி ஐயா.

09.10.2012

வணக்கம் தோழி! வளமுடன் வாழி!

பெண்ணாசை பிடித்தவா்கள் அழிவைக் காண்பார்!
     பேராசை பிடித்தவா்கள் துன்பில் ஆழ்வார்!
மண்ணாசை பிடித்தவா்கள் உணர வேண்டும்
     மண்நமக்கும் ஆறடியே! மின்னும் வண்ணப்
பொன்னாசை பிடித்தவா்கள் மணநாள் பேச்சில்
     பேணிடுவார் மணக்கொடையே! மாற வேண்டும்!
என்னாசை என்னவென உரைப்பேன் தோழி!
     எழிற்றமிழைப் பரப்புகின்ற பணியே ஆகும்!

10.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

இலட்சுமி

இந்த வாழ்வு முடிவெய்தி
எடுக்கும் அடுத்த பிறவியிலும்
முந்தும் வினையால் துயர்க்கடலில்
முழுகித் துடிக்கும் நிலைவரினும்
அந்தம் ஆதி அறிந்துலகை
ஆக்கி அழிக்கும் திருக்கண்ணா
சிந்தை யுன்னை மறவாமல்
சிறக்கும் வண்ணம் எனைச்செய்க!

கவிதை முழுவதுமே நல்லா இருக்கு எனக்குப் பிடித்தவரிகள் மேலே

09.10.2012

வணக்கம்! வழங்கினேன் நன்றி!

நாளும் கருத்திட்டு நற்றமிழைத் சூடியே
ஆளும் அகமே அழகு!

திருமால் திருவடியைத் தித்தித் திருக்க
ஒருநாள் மறவா துயிர்!

வலையின் வழியே வரும்உறவை வாழ்த்திக்
கலையாய் வணங்கும் கவி!

-----------------------------------------------------------------------------------------------------------------

இரவின் புன்னகை

முன்னோர் படைத்த செந்தமிழை
முழுதும் கற்றுப் புகழுறவும்
நல்லதய்யா..

09.10.2012

வணக்கம்!

முன்னோர் படைத்துத்தம் மூச்சாகத் காத்திட்ட
தன்னேர் இலாத தமிழ்!


10.10.2012

கண்ணுாட்டம் காதல் கமழ்சோலை! கார்மேக
விண்மூட்டம் நன்மழை மேலாடை! - நண்பா்களின்
பின்னுாட்டம் பேரின்பம்! பிள்ளை உளம்போன்றே
என்னுாட்டம் துள்ளும் எழுந்து!

10.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

சீனி

adengappaaaaaa.....!!!!!


arumai ayya!
10.10.2012

வணக்கம்!

நண்பா் கருத்திற்கே அன்பனென் நன்றிகளை
வெண்குறளில் வைத்தேன் விருந்து!

இனிய மொழியால் இயம்பும் கருத்துக்
கனிபோல் கமழும் கலந்து!

11.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

புலவா் சா. இராமாநுசம்

ஆற்றொழுக்காய் சொற்கள் அழகுத் தமிழ்தன்னில்
ஊற்றுப் பெருக்காக ஓடிவந்தே-போற்றிடவும்
வெண்பாவாய் இங்கே விளையாட விட்டீரே
நண்பானீர் வாழ்க நனி
10.10.2012

வணக்கம்!

ஒண்பாப் புலவருக்கு வெண்பாக் கவிஞன்யான் 
தண்பா வணக்கம் தருகின்றேன் - நண்பரே!
என்பா படித்தே இனியதமிழ் ஓங்கிடப்
பொன்பா படைத்தீா் புகழ்ந்து!
11.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

திண்டுக்கல் தனபால்

யப்பா... என்ன விழிகள்...

அழகான வர்ணனை... நன்றி ஐயா... 
10.10.2012

வணக்கம்!

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்!

அப்பா எனுமுரையில் அந்தமிழ்த் தேன்சுரக்கும்!
இப்பா புகழ்ந்தீா் இனித்து!

11.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

சிட்டுக்குருவி

நீராடி நின்றவுனை நேராகக் கண்டதனால்
போராடி நிற்கின்றேன் பூங்குயிலே!
/////////////////

நிறையக் காதல்கள் ஆரம்பம் இதுதான் போல....
நன்றாக இருக்குது சார்

10.10.2012

வணக்கம்!

சிட்டுக் குருவிக்குச்
செப்பினேன் நன்றிகள்!

நல்ல தமிழினில் நண்பா எழுதிடுக!
தொல்லை அகற்றுவதே தொண்டு!

சார்என்ற சொல்நீக்கி ஐயா எனச்சாற்று!
பார்உன்னைப் போற்றும் பணிந்து!

11.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

முரளிதரன்

அத்தனை வெண்பாக்களும் அருமை .

// தேனருந்தும் வண்டினமே! தேடியெனை வந்திடுக!
நானறிந்த செய்திகளை நன்குரைப்பேன்! - தேன்னாடிக்
கால்வைக்க வேண்டா!என் காதலியின் பூமுகத்தில்
வேலெனத் தாக்கம் விழி!// மிகவும் கவர்ந்தது.
10.10.2012

வணக்கம்!

பிடித்த கவிதையைச்! செந்தேன் பெருக்கை
வடித்த கவிதையை வார்த்தீா்! - துடிப்பாய்ப்
படித்த கவிதையைப் பார்த்தேன்நான்! நெஞ்சை
இடித்த கவிதை இது!

11.10.2012

-----------------------------------------------------------------------------------------------------------------

இலட்சுமி

கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துகள்.
11.10.2012

வணக்கம்! நன்றிகள்!

கவிதைச் சுவையில் கலந்து களித்தீா்!
குவித்தேன் இருகை குளிர்ந்து

11.10.2012

15 commentaires:

 1. அய்யா!

  உங்கள் பணி சிறக்க -
  வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ஆனாலும் வலையில் பதியுங்கள்-
  உங்கள் எழுத்தில் லயிப்பவன் நான்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   முதன்மைக் கருத்தை மொழிந்திட்ட சீனி
   பொதுமை மணக்கும் பொழி!

   Supprimer
 2. நல்லதொரு தொகுப்பு ஐயா...

  அவ்வப்போது... நேரம் கிடைக்கும் போது... வலைப்பக்கம் வந்து எங்களையும் மகிழ்விக்கவும்...

  கம்பன் விழா ஏற்பாடுகள் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  நன்றி ஐயா...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சொக்கும் மொழிபடைக்கும் துாய தனபாலா!
   ஒக்கும் தமிழ்ப்பா உனக்கு!

   Supprimer

 3. செப்பும் மறுமொழிக்கும் செந்தமிழில் பாவிண்டே
  ஒப்பில் எனச்சொல்ல ஓதுகின்றீர்-இப்புவியில்
  பாரதிதாசனே! பைந்தமிழின் நேசனே!
  ஊரறியும்! உண்மை! உரை

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   அழகிய வெண்பா! மனம் குளிர்ந்தேன்!

   ஊரறியும் வண்ணம் உயா்தமிழ்ப் பாட்டழகின்
   சீரறியும் வண்ணம் செயற்படுவோம்! - தாரணிந்து
   தேரறியும் வண்ணம் செழுந்தமிழின் செம்மையினைப்
   பாரறியும் வண்ணம் படைத்து!

   Supprimer
 4. ஆம் ஐயா அடியேனுக்கு நீங்கள் உரைத்த புத்திமதி கண்டேன் இனிமேல் ஐயாவையே வழமையாக்குகிறேன்

  வாழ்த்துக்கள் ஐயா விழா சிறப்பாக நடைபெற

  RépondreSupprimer
  Réponses

  1. சிட்டே வணக்கம்!

   கொத்திமகிழ் அலகுள்ள சிட்டே! உன்னைக்
   குத்திமகிழ் எண்ணங்கள் என்றும் இல்லை!
   புத்திமதி இதுவன்று! நம்மின் அன்னை
   பூந்தமிழின் மேலியங்கும் பற்று! நன்றே
   அத்திமரப் பால்போன்று அகத்தின் உள்ளே
   அருந்தமிழின் பால்சுரக்க வேண்டும்! கொள்கை
   கத்திமகிழ் கவிஞன்என் சொல்லை ஏற்றுக்
   கனித்தமிழை உண்டுமகிழ் குருவி வாழ்க!

   உங்கள் கருத்துக்கள் என்ற நேற்றைய என்பதிவு
   சிட்டுக்குருவியை நோக்கியே பதியப்பட்டது!
   எதை எண்ணிப் பதிந்தேனோ அது நடைந்தேறியது
   இரண்டு மாத வலைப்பதிவின் பயன் என்பேன்!

   Supprimer
 5. அய்யா, வணக்கம். தங்கள் கம்பன் விழா சிறக்க வாழ்த்துகள்...

  அனைத்து கருத்துகளையும் அழகாக ஒருங்கிணைத்து வழங்கியுள்ளீர்கள். அருமை.

  முடியும் போது எங்கள் தளமும் வந்து, பிழையைத் திருத்துங்கள் அய்யா.
  எந்தன்-என்தன் போன்று...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   திங்கள் ஒன்று போகட்டும்
   திருநாள் கம்பன் காணட்டும்!
   எங்கள் கழகப் பணிசிறக்க
   இனிய வாழ்த்தை வழங்கிடுவீா்!
   பொங்கல் போன்று இனித்தாலும்
   புளியோ தரையை நிகா்த்தாலும்
   உங்கள் வலையின் பதிவுகளை
   உள்ளம் உவந்து படித்திடுவேன்!

   Supprimer
 6. அய்யா, நேரம் கிடைக்கும் போது தோழி ஹேமா அவர்களின் பதிவிற்கு சென்று வாருங்கள். அவரும் அருமையாக கவி பாடுவார்...

  http://kuzhanthainila.blogspot.in/

  அவர் வலைத்தளம் இதுதான்...

  RépondreSupprimer
  Réponses

  1. மீண்டும் வணக்கம்!

   ஏமா கவிதையை ஏற்கெனவே பார்த்துள்ளேன்!
   ஆமா அவா்ஏன் அடியவனின் பக்கத்தைப்
   பார்க்க வரவில்லை! பைந்தமிழின் தேனள்ளிச்
   சோ்க்க வரவில்லை? செப்பு!

   Supprimer
 7. அய்யா வணக்கம். கம்பன் விழா சிறக்க வாழ்த்துக்கள்

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வாழ்த்து வழங்கிய வண்டமிழ் நண்பருக்குத்
   தாழ்த்தி வணங்கம் தலை!

   Supprimer

 8. எங்கள் கருத்துகளை ஏந்திப் பதிவளித்தீர்!
  உங்கள் உயர்ந்த கவியோடு! - தங்கத்தில்
  சேரும் மணியானோம்! தேனைச் சுவைத்துண்டோம்!
  யாரும் இணையோ எமக்கு!

  RépondreSupprimer