jeudi 25 octobre 2012

உன்னை உணர்வாய்
உன்னை உணர்வாய்

என்னுயிர்த் தோழா! என்னுரை கேட்பாய்!
உன்னுயிர் உணர்வின் உறக்கம் கலைப்பாய்!
வீட்டினுள் இருந்தால் வேதனை தீருமா?
நாட்டினுள் நடக்கும் நன்மைகள் தெரியுமா?
சிறந்த மேதையர் சிறப்புகள் புரியுமா?
இறந்த கால இன்னலை மறப்பாய்!
நிகழும் வறுமையில் நிமிர்ந்து நிற்பாய்!
புகழும் செயலைப் புவியில் படைத்தால்
எதிர்வரும் வாழ்வுக்கு இணையும் இல்லை!
கதிர்வரும் போது காரிருள் அகலும்!
தூக்கம் போதும்! துணிந்தே எழுக!
ஏக்கம் ஒழித்தே எழுச்சி பெறுக!
ஊக்கத் தோடே உழைக்க வருக!
ஆக்கப் பொருளை அதிகம் தருக!
உழைத்து வாழ்தல் உயிருக்(கு) இன்பம்!
மழைபோல் உளத்தால் மடியும் துன்பம்!
கல்லைப் போன்ற கரிய நெஞ்சன்
தொல்லை தருவான் துவண்டு விடாதே
எல்லை யில்லா உன்றன் ஆற்றல்
எல்லைக் கப்பால் ஏவும் அவனை!
திலகம் போன்று திகழ்ந்தால் தானே
உலகம் வந்துனக்(கு) ஊஞ்சல் ஆட்டும்!
உறவை நம்பி ஒண்டுதல் வேண்டாம்!
பிறரை நம்பும் பிழைப்பு வேண்டாம்!
உன்னை நம்பு! உயர்வைப் பெறுவாய்!
அன்னைத் தமிழ்போல் அரங்கில் மிளிர்வாய்!
அன்னியன் அகன்றபின் அடிமை வாழ்வா?
என்ன கொடுமை? எங்கே உரிமை?
கண்கள் இருந்தும் காண மறுப்பா?
எண்ணித் துணிவாய்! இதயக் கொதிப்பில்
இரும்பு விலங்கும் இளகிப் போகும்
துரும்பாய் நினைத்தே இமய உச்சியில்
ஏறி நிற்பாய்! எதிர்த்தவன் நட்பாய்
மாறி உனக்கு வாழ்த்துப் படிப்பான்
சோற்றுக் குழைத்துத் தூங்கும் தோழா!
காற்றைப் பாராய்! கடலைப் பாராய்!
வானில் தவழும் வளர்மதி பாராய்!
தேனீ உழைக்கும் திறத்தைப் பாராய்!
தடைகள் கண்டும் தயங்கா(து) இவையெலாம்
நடைமுறைச் செயல்கள் நடத்தும் நன்றே!
சுதந்திர மாகச் செய்யும் செயலால்
இதமுடன் வாழ்வும் இனிக்கக் காண்பாய்!
தன்னம் பிக்கை தளர்ந்த மாந்தன்
என்ன ஆவான்? எழுதல் இயலா!
மனத்தில் உறுதியை மறவன் ஏற்றுத்
தனித்தே நின்று தரணியை வெல்வான்!
அறிவும் அடக்கமும் ஆளும் நெஞ்சில்
செறிவுடன் நலங்கள் சேரும் அன்றோ!
முயன்றால் முடியாத தொன்று மில்லை!
முயற்சியே வெற்றியின் முதற்படி ஆகும்!
'அன்பே ஆண்டவன் அருளைக் காட்டும்'
இன்ப நெறியாம்! இதனை யன்றோ
புத்தரும் ஏசுவும் புனித காந்தியும்
இத்தரை போற்ற ஏற்று வாழ்ந்தனர்!
புத்தியில் இதனைப் பொறித்துக் கொண்டு
நித்திரை நீக்கி நிமிர்ந்து எழுகவே!

4 commentaires:

 1. தன்னம்பிக்கையூட்டிப் போகும்
  அருமையான பதிவு
  கருவும் கவிதையின் நேர்த்தியும்
  உள்ளம் கவர்ந்தது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  RépondreSupprimer
 2. அருமையான பதிவு நம்பிக்கையூட்டுகிறது வரிகள்

  முயன்றால் முடியாத தொன்று மில்லை!
  முயற்சியே வெற்றியின் முதற்படி ஆகும்!/
  //////////

  உண்மை ஐயா

  RépondreSupprimer
 3. உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்னும் பழைய பாடல் நினைவில் வருகிரது

  RépondreSupprimer