samedi 27 octobre 2012

நான் முதலமைச்சரானால்........
நான் முதலமைச்சரானால்......

நாள் 26.10.2012

கழகத்துத் தோழரெல்லாம் திரண்டு வந்து
     கமழ்மாலை அணிவித்தார்! அல்வா தந்தார்!
வழக்கத்துக் கில்லாத முழக்கம் இட்டு
     வருங்கால முதல்வரே வாழ்க என்றார்!
ஒழுக்கத்துக் குயிர்கொடுக்கும் என்றன் உள்ளம்
     ஓடோடி வான்விளிம்பைத் தொட்ட தென்பேன்!
முழக்கத்துப் புகழொலியோ முதல்வா.. வா..வா..
     முகம்நோக்கி அழைப்பதுபோல் குளிர்ந்து போனேன்!

கொடியென்ன? கூத்தென்ன? படங்கள் என்ன?
     கூடுகின்ற கூட்டத்தார் தட்டும் ஓசை
இடியென்ன என்பதுபோல் இருக்கும்! நீங்கள்
     இப்போதே முதல்வரென உரைக்கும்! ஊற்றும்
குடியென்ன? எடுத்தோத இயலா வண்ணம்
     கும்மாளம் கச்சேரி ஆட்டம் நீளும்!
முடியென்ன என்பதுபோல் எதிர்த்து நிற்கும்
     முனிசாமி மனம்குரைக்கும்! மேடை நாறும்!

முனிசாமி கொண்டிருந்த சொத்தில் ஒன்றை
     முதலீடாய்த் தேர்தலுக்கு இறக்கி வைத்தார்!
இனி..சாமி இவரென்று சொல்லும் வண்ணம்
     எல்லோர்க்கும் தொலைக்காட்சிப் பெட்டி தந்தார்!
சனிசாமி கோயிலுக்குச் சென்று வந்தால்
     சத்தியமாய் வென்றிடலாம் செய்தி கேட்டுக்
கனி..சாமி உண்ணுமென வாங்கிக் கொண்டு
     கடைவிரித்தேன் முதல்வரெனும் வரத்தைக் கேட்டே!

போடுங்கம் மா!ஓட்டு! கவிதை தீட்டும்
     புகழ்க்கம்பச் சின்னத்த பார்த்து! வந்து
போடுங்கை யா!ஓட்டு! நம்மின் துன்பம்
     போக்குகின்ற பாவலனைப் பார்த்து! தட்டிப்
பாடுங்கம் மா!பாட்டு! கம்பன் தந்த
     பைந்தமிழைப் பார்மணக்க மீட்டு! நன்றே
கூடுங்கம் மா!கூட்டு! வாட்டும் பொல்லாக்
     கொடுமைகளைப் பொசுக்கிடவே வைப்போம் வேட்டு!

தொலைக்காட்சி பெற்றுவந்த மக்கள், நாளும்
     தொடர்ந்துதரும் பொருளென்ன என்றே எண்ணி
அலைப்பேசி வழியாக அலசிக் கொண்டார்!
     அரைப்பைசா பொருளேனும் கொடுக்க வேண்டும்
நிலையாட்சி நாம்பெறவே! நண்பர் கூற்று!
     நெடுவயலை உடன்விற்றே  ஆக்கம் செய்தேன்!
தொலைக்காட்சிப் பெட்டியினைப் போர்த்தி வைக்கத்
     தொங்குதிரை கொடுத்திட்டேன்! மகிழ்ந்தார் மக்கள்!

வாக்கெண்ணும் நாளன்று வளர்ந்த தென்னை
     மரத்தினிலே ஒருசொட்டுக் கள்ளும் இல்லை!
ஊக்கெண்ணும் வியபாரி மகிழ்வில் ஆட
     உயிரென்றும் உறவென்றும் அழைத்துச் செல்வார்!
நாக்கெண்ணும் பொய்நடிப்பில் மயக்கம் கொண்டு
     நகத்தின்கீழ்க் கரும்புள்ளி! அழியும் இந்தப்
போக்கெண்ணும் சிறுவெண்ணம் இல்லா நாடு!
     புதருகளும் முள்செடியும் நிறைந்த காடு!

வானவெடி மத்தாப்பு வகைகள் யாவும்
     வரும்வெற்றி வாழ்வுதனை உரைக்க வேண்டும்!
ஆனவெடி வெடிக்கின்ற ஓசை கேட்டே
     அடுத்தவூர்க் காரர்களும் அஞ்ச வேண்டும்!
ஈனவெடி போலன்றே வந்த செய்தி!
     இருபத்து வாக்குகளில் தோற்றுப் போனேன்!
மானவெறி கொண்டவரை! மிகவும் நல்ல
     மாண்புநெறி கொண்டவரை மறக்கும் நாடே!

இறந்திட்ட மனிதரெலாம் மீண்டும் வந்தே
     எதிர்கட்சிக் காரருக்கு வாக்க ளித்தார்!
நிறைந்திட்ட என்னணியின் மொத்த வாக்கும்
     குறைந்திட்ட வகையறியேன்! முன்னே பேசிக்
கறந்திட்ட களித்திட்ட காக்காக் கூட்டம்
     காணாமல் போனதுவே! இனிய கம்பா!
பிறந்திட்ட ஊரினிலே தேல்வி பெற்றேன்!
     பின்னெங்கே முதலமைச்சர் கவிதை பாட.... 

(2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் 
கம்பன் கட்சியின் வேட்பாளா் 
கவிஞா் கி பாரதிதாசன் அவா்கள் 
25551 வாக்குகள் அதிகமாகப் பெற்று 
முதல்வராகத் தோ்ந்தெடுக்கப் பட்டுள்ளார்) 

நாளை வலையில்  நான் முதல்வரானால்....                                                                                                                          

12 commentaires:

 1. அருமை அய்யா!

  நக்கலும் நையாண்டியும்-
  கருத்தும்-
  தமிழும்....

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்! கருத்துக்கு நன்றி!

   நக்கலும் நையாண் டியும்பாட என்னிடத்தில்
   சிக்கலும் செய்தடையும் வந்திடுமோ? - இக்காலத்
   துன்னாட்சி போக்கித் துயரமிலா வாழ்வுதரும்
   இன்னாட்சி காணும்நாள் என்று?

   Supprimer
 2. Réponses

  1. வணக்கம்

   வாழ்த்துக்கு நன்றி!

   நலமிகு ஆட்சி! நறுதமிழ் மாட்சி!
   வளமிகு வாழ்வு வழிந்தாட! - உலகத்
   தமிழினம் ஓங்கித் தழைத்தாடச் செய்வேன்
   அமிழ்தினை நல்கும் அரசு!

   Supprimer
 3. அதற்கு ஏன் 2017 ஆம் ஆண்டு வரை செல்ல வேண்டும் ஐயா...

  வரிகளை மிகவும் ரசித்தேன்... மகிழ்ந்தேன்...

  வாழ்த்துக்கள் ஐயா...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தோ்தல் காலம் ஐந்தாண்டு!
   தெளிந்தே கவிதை படைத்துள்ளேன்!
   ஆா்தல் தந்தே என்துயரை
   அடியோ டகல மருந்திட்டீா்
   சேர்தல் என்ற கொள்கையினை
   தோ்ந்து முதல்வா் பொறுப்பே்ற்பேன்
   ஓா்தல் இனிறி அதுவரையில்
   உயாந்த தமிழைச் சுவைத்திடுவேன்!

   Supprimer
 4. முதல்வர் சக பதிவர்களுடனா ?

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   பதிவா் உலகின் முதல்வரெனப்
   பாடல் பாடி மகிழ்ந்திடலாம்!
   மதியா்! மாண்பா்! மாச்செயலா்
   வலையில் நிறைந்து ஒளிர்கின்றார்!
   புதிய வலையை வளா்கின்ற
   புலவன் எனக்கு வம்பெதற்கு?
   இதயத் தமிழே! என்தாயே!
   என்னுள் இருந்து இயக்குகவே!

   Supprimer
 5. தோற்றுப் போனதைக் கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா...?

  கவிஞரே... அருமை அருமை...
  வாழ்த்தி வணங்குகிறேன்.

  இன்று இந்தியா கிளம்புகிறேன்.
  வந்ததும் உங்களுக்காக... நீங்கள் முதலமைச்சர் ஆக
  நானும் ஓட்டுப் பிச்சைக் கேட்கிறேன்.

  நன்றி.
  அன்புடன் அருணாசெல்வம்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   பிச்சை கேட்டுப் பேரிறைவன்
   பிணியில் திரிந்த இடமுண்டு!
   கச்சை அணிந்த கன்னியவள்
   காலில் நெகிழ்ந்த கதையுண்டு!
   இச்சை நிறைந்த பொழுதினிலும்
   இரங்கிக் கேட்கும் வழக்கில்லை!
   மொச்சை போன்றே என்னாற்றல்
   முளைக்கும் மண்ணின் தடையுடைத்தே!

   நக்கிப் பொருக்கும் நரியுண்டு!
   நஞ்சைக் கொடுக்கும் செயலுண்டு!
   சொக்கிக் கிடக்கும் நாயுண்டு!
   சுரண்டிப் பிழைக்கும் சூதுண்டு!
   மக்கி மடியும் பொருளாக
   மண்ணில் நாறும் மனத்தைப்போல்
   தொக்கித் துடிக்கும் பொழுதினிலும்
   தோழி! பிச்சை எடுப்பதுவோ?

   Supprimer
 6. Réponses

  1. வணக்கம்

   கலங்கி நிற்கும் கவிதையினைக்
   கருத்தால் துாக்கி நலஞ்சேர்த்தீா்!
   நலங்கிக் கிடக்கும் உலகத்தை
   நலமாய் மாற்றச் செயற்படுவோம்!
   குலுங்கிச் சிரிக்கும் பகைவா்தம்
   கொட்டம் அடங்க இணைந்திடுவோம்!
   துலங்கிச் சிரிக்கும் நம்வாழ்வு!
   துணிவே துணையாய்க் கொண்டிடுவோம்!

   Supprimer