mardi 9 octobre 2012

எழுதுகோல்
எழுது கோலே! என்னுடைய
    இதயம் மீது வாழ்ந்தனையே!
பழுது நேரும் பொழுதெல்லாம்
    பாரைப் புரட்ட நின்றனையே!
அழுது புலம்பும் ஏழையர்தம்
    அவலம் கண்டு கொதித்தனையே!
விழுதாய் என்னை நீதாங்கி
    விளைத்த இன்பம் பலகோடி!

கொடிய அரசாம் கொடுமைகளைக்
    கொல்லும் எழுது கோலே!வான்
இடியைப் போன்றே எழுந்திங்கே
    எரிப்பாய் பகைவர் துன்செயலை!
பிடியில் அடங்கும் கோலே,உன்
    பிடியிள் உலகைப் படைக்கின்றாய்!
முடியா(து) உழலும் மடமைகளை
    முற்றும் அழித்துக் காப்பாயே!

இறகும் ஆணி யும்,உன்றன்
    இறவாப் புகழ்சேர் முன்னோர்கள்;!
துறவைக் கொண்டோர் உனையென்றும்
    துறவா(து) இருந்து நூல்தந்தார்!  
உறவாம் ஓலைச் சுவடிகள்!தேன்
    உணவாம் கற்றோர் சிந்தனைகள்!
நிறைவாய் என்னுள் நின்றினிதே
    நிலைத்த புகழைத் தந்தருளே!

மின்னும் வாளைப் பாயம்பை
    மிஞ்சும் தூவல் கூர்முனையே!
பொன்னும் மணியும் பொலிவெய்தப்
    போட்டு மகிழும் பெண்ணினமே!
ஏனோ தூவல் பொன்முனையை
    எழிலாய்க் சூடி மிளிர்கிறது!
ஆணும் பெண்ணும் இணைந்தொளிரும்
    அருமை ஈசன் காட்சியிதோ?

அருளை எழுதி னாய்!அமுதாம்
    அன்பை எழுதி னாய்!இன்பப்
பொருளைப் பாடி னாய்!பூக்கும்
    புகழைச் சூடி னாய்!நெஞ்சின்
மருளை  நீக்கி னாய்!பொல்லா
    மடமை போக்கி னாய்!மதமாம்
இருளை மாய்க்கும் உயர்கவியை
    என்கை எழுதல் எந்நாளோ?

உரிமை கேட்ட பாரதியின்
    உள்ளம் படைத்த எழுச்சியினை
அடிமை மூட வழக்கொழிய
    அடலே(று) எங்கள் பாவேந்தர்
மிடிமைப் பாட்டின் முழக்கமென
    மீண்டும் தமிழர் நாட்டினிலே
விடிவை வேண்டிப் புரட்சியினை
    விளைத்தல் என்றோ விளம்புகவே?

உலக உருண்டை, தூவல்உன்
    ஒண்முள் முனையில் சுற்றுவதால்
குலவும் அறிவால் சிந்தித்துக்
    கூறும் கவிதை கேட்டிடுக!
நிலவில் முதலில் கால்வைத்தோன்
    நெஞ்சம் கொண்ட துணிவதனை
நலமாய் நானும் பெற்றுள்ளேன்
    நரியின் ஊளைக்(கு) அஞ்சேனே!

அன்று தமிழர் ஓலையிலே
    அறிவாய் வடித்த எழுத்தெல்லாம்
என்றும் இன்பம் பொழிகின்ற
    இனிய தமிழின் கருவூலம்!
இன்றென் நற்கை அதுபோல
    ஈடே இல்லா நன்னூலை
நன்றே எழுத, வன்தூவல்
    நண்பா! துணையாய் இருந்தருளே!

தூவல்! என்றன் உயிரானாய்!
    துன்பம் போக்கும் மருந்தானாய்!
ஆவல் கொண்டே என்கையில்
    ஆடும் வண்ண மாதானாய்!
மேவும் புதுமை பாடிடவே
    மேன்மை தந்து துணையானாய்!
நாவில் எனக்குக் கலைமகளால்
    நலமாய் வடித்த தீர்ப்பிதுவே!

தந்தை பெரியார்! உயர்அண்ணா!
    தன்னேர் இல்லாப் பாவாணர்  
சிந்தை கொண்ட கருத்தெல்லாம்
    சிறக்கும் வண்ணம் எழுத்தாக்கித்
தந்த தூவல் போலொன்று
    தருக எனக்குத் திருக்கண்ணா!
முந்து தமிழின் சீர்மைகளை
    முழங்கி உலகை வெல்வேனே!

கம்பன், 15-03-2003

11 commentaires:

 1. அறிவும் பண்பும் துடிப்பும் இருக்கும் இடத்தில்
  இறைவன் அருளும் தெளிந்த ஞானமும் பொலியும்
  என்பதில் ஐயம் இல்லையே ஐயா .தங்கள் படைப்புகள்
  யாவும் உலக நன்மைக்கு வழி காடியாக என்றுமே விளங்கும்!...மனக் கவலை வேண்டாம் .மனம்போல் ஆக்கம் தொடரட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  RépondreSupprimer
 2. தந்தைப் பெரியார்
  அண்ணா
  பாவாணர்
  கருத்தெல்லாம்
  எழுத்தாய்
  குடிகொண்டிருக்கும்
  தங்கள் எழுதுகோல்
  உண்மையில் ஒரு
  திறவுகோல்

  RépondreSupprimer
 3. வாள்முனையைவிட பேனாவின் முனை கூர் வாய்ந்ததுதான்.

  RépondreSupprimer
 4. தந்தை பெரியார்! உயர்அண்ணா!
  தன்னேர் இல்லாப் பாவாணர்
  சிந்தை கொண்ட கருத்தெல்லாம்....
  சிறப்பான வரிகளால் சிந்தை மகிழ்ந்தது ஐயா நன்றி.

  RépondreSupprimer
 5. எழுதுகோல் - சிறப்பான கவிதை ஐயா... வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
 6. word verification option எடுத்து விட்டதற்காக நன்றி ஐயா...பலமுறை தங்க்ளின் வலையில் கருத்துப் பதிய முடியாமல் தவித்திருக்கிறேன் தங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது..

  RépondreSupprimer
 7. அருமை

  சிந்தை கொண்ட கருத்தெல்லாம்
  சிறக்கும் வண்ணம் எழுத்தாக்கித்
  தந்த தூவல் போலொன்று
  தருக எனக்குத் திருக்கண்ணா!

  RépondreSupprimer

 8. வணக்கம்!

  கருத்துரை தீட்டிக் கவியெனைப் போற்றி
  விருந்துறை இன்றேன் விளைத்தீா்! - அருமனத்தீா்!
  பொங்கும் களிப்பில் பொழிகின்றேன் நன்றிமழை!
  எங்கும் தமிழை இசைத்து!

  RépondreSupprimer
 9. அன்பின் பாரதிதாசன் - எழுதுகோல் அருமை - கவிதை இயல்பான நடையில் சொற்களிட்டு எழுதப் பட்ட கவிதை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  RépondreSupprimer
 10. அன்பின் பார0திதாசன் - பொங்கல் பற்றிய காணொளி அருமை - கவிதையும் கவிதையை வெளிப்படுத்தும் திறனும் நன்று - கவிதையும் கவி நடையும் கவின் நடையே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

  RépondreSupprimer

 11. வாள்முனை தோற்றோடும்! மாமறவன் கொண்டுள்ள
  வேல்முனை தோற்றோடும்! வெல்லுதமிழ் - தாள்மணக்கும்
  கோல்முனை முன்னே! குதிக்கும் பகைவன்தன்
  கால்முனை போகும் கழன்று!

  RépondreSupprimer