jeudi 11 octobre 2012

அடுத்தோர் பிறவி



எடுத்தோர் செயலை முடிக்கின்ற
        ஏற்றம், ஏழை பசிதீரக்
கொடுத்தோர் பெற்ற பேருள்ளம்,
       கொஞ்சும் தமிழாம் பெரும்புலமை,
படுத்தோர் அணையில் உலகாளும்
       பரமா! பாவம் முற்றுமிலா
அடுத்தோர் பிறவி வாய்க்குமெனில்
       அடியேன் இவைதாம் பெறவேண்டும்!

உண்ணா, உறங்கா உயர்நிலையில்
       ஒளிரும் சித்தர் ஞானமதை
எண்ணா திருந்த என்னுயிரும்
       இனியோர் பிறவி எடுக்குமெனில்
நண்ணா திருந்த பேரொளியை
       நன்றே சூடி நலமெய்தக்
கண்ணா என்னைப் படைத்திடுக!
       கருணைக் கடலே! கனியமுதே!

முன்னோர் படைத்த செந்தமிழை
       முழுதும் கற்றுப் புகழுறவும்
அன்போ(டு) அழகும் அறநெறியும்
       அமைந்த மங்கை துணைதரவும்
என்போ(டு) உறையும் எழில்கண்ணா!
       எளியேன் கேட்கும் வகையிலெனைப்
பின்னோர் பிறவி வாய்க்குமெனில்
       பிறக்கச் செய்வாய் பீடுடனே!

செய்யும் தொழிலால் மாந்தரினம்
       சீரும் பேரும் பெற்றனரே!
பொய்யாய்ச் சாதி புனைகின்ற
       புல்லர் இல்லாத் தரைமீது
மெய்யாம் நெறியை யான்சூடி
       மேன்மை பெறவே, இங்கடுத்தோர்
உய்யும் பிறவி வாய்க்குமெனில்
       ஒளிரும் வண்ணம் எனைச்செய்க!

செல்வச் செழிப்பு பெற்றாலும்
       செறுக்கே இல்லாச் சீருளமும்
கொல்லும் துயரை உற்றாலும்
       கொள்கை மாறா நன்னிலையும்
வெல்லும் அறிவு  நிறைந்தாலும்
       மேலோர் போன்று பயன்தரவும்
உள்ளும் உணர்வில் எந்நொடியும்
       ஒளிரும் கண்ணா எனைச்செய்க!

வல்ல புலவன் பாரதியாய்,
       வாழ்வைக் காத்த பெரியாராய்,
நல்ல அறிஞன் அண்ணாவாய்,
       நன்றே ஆய்ந்த நேயராய்,என்
உள்ளம் தன்னில் குடிகொண்டே
       ஒளிரும் கண்ணா! மீண்டுமொரு
வெல்லும் பிறவி வாய்க்குமெனில்
       வீரர் இவர்போல் எனைச்செய்க!

பெண்மேல் ஆசை வெறிகொண்டால்
       பெறுவோம் அழிவை! அடுத்தவர்தம்
மண்மேல் ஆசை வைத்திட்டால்
       மாய்ப்போம் வாழ்வை! மிளிர்கின்ற
பொன்மேல், பொருள்மேல் பேராசை
       புகுந்தால் ஏற்போம் பாழ்இழிவை!
என்மேல் இவைதாம்  மேவாமல்
       இறைவா மீண்டும் எனைச்செய்க!

பொழில்சூழ் நகரில் பாய்ந்தோடும்
       புனித ஆற்றின் கரையினிலே
செழித்த சோலை நடுவினிலே
       சின்னக் குடிசை வீட்டினிலே
மொழியைக் காக்கும் முனிவனென
       முன்னைத் தமிழின் சீர்பாடப்
பொழியும் புகழில் வரும்பிறவி
       பூக்கும் வண்ணம் எனைச்செய்க!

வடலூர் வள்ளல் பொதுநிலையை
       மாண்பாய் எங்கும் பரப்பிடவும்
உடலும் உயிரும் உயர்தமிழின்
       உயர்வை எண்ணி உழைத்திடவும்
படரும் மடமை முட்செடியைப்
       பாரில் முற்றும் ஒழித்திடவும்
தொடரும் பிறவி வாய்க்குமெனில்
       தூயா என்னைப் படைப்பாயே!

இந்த வாழ்வு முடிவெய்தி
       எடுக்கும் அடுத்த பிறவியிலும்
முந்தும் வினையால் துயர்க்கடலில்
       முழுகித் துடிக்கும் நிலைவரினும்
அந்தம் ஆதி அறிந்துலகை
       ஆக்கி அழிக்கும் திருக்கண்ணா
சிந்தை யுன்னை மறவாமல்
       சிறக்கும் வண்ணம் எனைச்செய்க!

கம்பன், 15-06-2003

16 commentaires:

  1. இனித்ததய்யா !

    உங்கள் அழகிய தமிழ்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்! நன்றி!

      தமிழெனில் நல்லினிமை! தோழா தமிழுக்(கு)
      அமிழ்தும் இணையிலை ஆடு!

      Supprimer
  2. அய்யா!நல்ல வேண்டுகோள்கள் அழகு கவித்தமிழில் கண்டு ரசித்தேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றியுடன் வணக்கம்!

      அழகுக் கவித்தமிழை அள்ளிப் பருகப்
      பழகும் மொழிச்சீா் படா்ந்து

      Supprimer
  3. இந்தப் பாட்டின் அழகுக்கும்
    ஆழ்ந்த பொருளுக்கும் மயங்கி ஆண்டவன்
    நீங்கள் கேட்பவைகளுக்கு அதிகமாகவே
    நிச்சயம் அள்ளி வழங்குவான்
    மனம் கொள்ளை கொண்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வருகைக்கு நன்றி! வண்ண மிகுந்த
      கருத்தை வணங்குமென் கை!

      கொள்ளை கொண்ட செந்தமிழாள்
      கொடுத்த கவிதை! ஐந்தகவை
      பிள்ளை கொண்ட பொம்மையெனப்
      பேணிக் காத்தேன்! பூத்தாடும்
      கொள்ளைப் புறத்துப் பேரழகாய்க்
      குலுங்கும் கருத்தைப் படைத்திட்டீா்!
      கள்ளைக் குடித்த போதையெனக்
      கவிஞன் நெஞ்சம் கூத்திடுதே!

      Supprimer
  4. அருமை வரிகள்...

    /// படரும் மடமை முட்செடியைப்
    பாரில் முற்றும் ஒழித்திடவும்
    தொடரும் பிறவி வாய்க்குமெனில்
    தூயா என்னைப் படைப்பாயே! ///

    அந்த வாய்ப்பு கிடைக்கட்டும் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம் தோழா!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      துறவிகள் பலபோ் இன்று
      உறவினில் உவந்து நிற்பார்!
      பிறவிகள் வேண்டாம் என்று
      பிணியிலாப் பித்தா் கேட்பார்
      இறவிகள் பலபோ் இல்லை!
      ஈடிலா மேலோன் ஒன்றே!
      அறவியல் தமிழைக் காக்க
      அடியவன் பிறக்க வேண்டும்!

      Supprimer
  5. பெண் மண் பொன் இவை மேல் ஆசை இல்லாது எனைக்காப்பாய் இறைவா இதை விட சிறப்பு என்ன இருக்கு அழுத்தமான வரிகள் நன்றி ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம் தோழி! வளமுடன் வாழி!

      பெண்ணாசை பிடித்தவா்கள் அழிவைக் காண்பார்!
      பேராசை பிடித்தவா்கள் துன்பில் ஆழ்வார்!
      மண்ணாசை பிடித்தவா்கள் உணர வேண்டும்
      மண்நமக்கும் ஆறடியே! மின்னும் வண்ணப்
      பொன்னாசை பிடித்தவா்கள் மணநாள் பேச்சில்
      பேணிடுவார் மணக்கொடையே! மாற வேண்டும்!
      என்னாசை என்னவென உரைப்பேன் தோழி!
      எழிற்றமிழைப் பரப்புகின்ற பணியே ஆகும்!

      Supprimer
  6. இந்த வாழ்வு முடிவெய்தி
    எடுக்கும் அடுத்த பிறவியிலும்
    முந்தும் வினையால் துயர்க்கடலில்
    முழுகித் துடிக்கும் நிலைவரினும்
    அந்தம் ஆதி அறிந்துலகை
    ஆக்கி அழிக்கும் திருக்கண்ணா
    சிந்தை யுன்னை மறவாமல்
    சிறக்கும் வண்ணம் எனைச்செய்க!

    கவிதை முழுவதுமே நல்லா இருக்கு எனக்கு பிடித்தவரிகள் மேலே

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!
      வழங்கினேன் நன்றி!

      நாளும் கருத்திட்டு நற்றமிழைத் சூடியே
      ஆளும் அகமே அழகு!

      திருமால் திருவடியைத் தித்தித் திருக்க
      ஒருநாள் மறவா துயிர்!

      Supprimer
  7. முன்னோர் படைத்த செந்தமிழை
    முழுதும் கற்றுப் புகழுறவும்

    நல்லதய்யா..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முன்னோர் படைத்துத்தம் மூச்சாகத் காத்திட்ட
      தன்னோ் இலாத தமிழ்!

      Supprimer

  8. வலையின் வழியே வரும்உறவை வாழ்த்திக்
    கலையாய் வணங்கும் கவி!

    கண்ணுாட்டம் காதல் கமழ்சோலை! கார்மேக
    விண்மூட்டம் நன்மழை மேலாடை! - நண்பா்களின்
    பின்னுாட்டம் பேரின்பம்! பிள்ளை உளம்போன்றே
    என்னுாட்டம் துள்ளும் எழுந்து!

    RépondreSupprimer

  9. அடுத்த பிறவியை அன்புடன் வேண்டித்
    தொடுத்த கவிதைகளைத் துய்த்தேன்! - எடுத்துள்ள
    இந்தப் பிறப்பினை எண்ணி அளந்திட்டேன்!
    தந்த தமிழில் தவழ்ந்து!

    RépondreSupprimer