jeudi 4 octobre 2012

விதி
துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர்
நன்றே  விதியால் நலிந்தோம் என்றே!
இன்பம் உற்றோர் ஏனோ விதியை
எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை!
மதியைக் கொண்டு வறுமை போக்கி
சதியை வெல்லல் விதியின் செயலே!
முன்னைப் பிறப்பில் முடித்த வினைகள்
மண்ணில் ஆன்மா மீண்டும் மலர்ந்தால்
ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்!

பாடி இனிமை படைக்கும் ஐயா
நல்லார் புரிந்த நன்னெறி வினைகள்!
பொல்லார் புரிந்த புன்மைச் செயலால்
வாடிக் கிடப்பர் வாழ்வை இழந்தே!
தேடிப் பணத்தைச் சேர்த்து மகிழச்
சிரித்துச் சிரித்துக் கொடுமை செய்தால்
அழுதழுது அதனைக் கழிப்பர் அன்றே?

போற்றும் வாழ்வைப் புவியில் பெறுதல்
ஆற்றும் தொண்டால் அமையும் என்பேன்!
காற்றும் கடலும் கதிரும் நிலவும்
ஊட்டும் நம்முள் ஒளிரும் பொதுமையை!
ஏனோ மாந்தர் இதனை எண்ணா
வானை வளைத்து வாழ நினைப்பர்!
தன்னலம் மறந்தால் மண்ணலம் ஓங்கும்!
பொன்னென உலகு பூத்துப் பொலியும்!

கடமை முடியக் கையூட்(டு) அளித்தல்
மடமை நாடி மயங்கிக் கிடத்தல்
நாளைய உலகை நாசம் செய்யும்
வேலை இவைகள்! விளையை ஏற்றிக்
கொள்ளைப் பயனைக் குவிக்கும் கூட்டம்,
எல்லை இல்லாத் தொல்லை கொடுத்தே
அரசியல் பெயரில் ஆடும் ஆட்டம்
நரகாய் நாட்டை நாட்டிச் சிரிக்கும்!
உண்மை நெறியை உலகில் கொன்று
நன்மை தேடும் நரிகள் அழிந்தால்
இன்பம் தழைக்கும்! இன்னல் தீரும்!
பொன்னும் பொருளும் மண்ணில் நிலையோ?
அப்பன் செய்த அழிவுகள் எல்லாம்
தப்பாது இங்கே தாக்கும் பிள்ளையை!
மலைபோல் சொத்து மண்டிக் கிடந்தும்
அலைபோல் நெஞ்சம் அலைதல் ஏனோ?
சொத்து! சொத்து!! என்றே நாட்டை
முற்றும் சுரண்டி மூட்டை கட்டிச்
சுற்றும் மனிதா! சுழலும் விதியால்
அற்றுப் போகும் அமைத்த வாழ்வே!
கண்ணில் பட்ட காட்சிகள் தம்மை
எண்ணிப் பார்த்தே எழுதினேன் கவியே!

கம்பன், 15-03-2003

8 commentaires:

 1. கையூட்டு வாங்காத அரசியல்வாதி இருக்கிறாரா..அவரைப் பார்க்க ஆசை..முடியாது என நினைக்கிறேன்..சொத்து மனிதனை பித்து பிடிக்க வைத்துவிடுகிறது..அழகாய்ச் சொன்னீர்கள்..

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   பொங்கும் கருத்தைப் புனைந்த மதுமதியே!
   எங்கும் விடிவை எழுப்பு!

   கையூட்டு வாங்காத அரசை காணக்
   கடுகளவும் நம்நாட்டில் இடமே இல்லை!
   மையூட்டும் பெண்ணழகில் மயக்கம் கொண்டு
   மதுவூட்டும் போதையிலே காலம் மாயும்!
   பையூட்டும் ஆசையிலே பறக்கும் மாந்தா்!
   பண்பூட்டும் நுாலெல்லாம் மறந்து போகும்!
   தையூட்டும் பெருமைகளைக் கவிதை பாடித்
   தமிழூட்டும் புலவனுக்கும் வேலை இல்லை!

   Supprimer
 2. Réponses

  1. வணக்கம்!

   மதியின் வழியில் மணித்தமிழ் மாண்பில்
   விதியும் விளகும் விரைந்து!

   Supprimer
 3. அய்யா, வணக்கம். கவிதை அனைவரும் எழுதுகிறோம் ஆனால் இலக்கணம் மறந்து எதுகை, மோனை, இயைபு, முரண் மறந்து அனைவரும் எழுதுகிறோம் என்ற எண்ணம் இருந்தது. அந்த கவலை தங்கள் கவிதையை கண்டதும் மறைந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி அய்யா. தாங்கள் மிக அருமையாக எதுகை, மோனையைக் கையாடுகிறீர்கள். உங்கள் தளத்திற்கு பல முறை வந்திருக்கிறேன், தாங்கள் என் தளத்திற்கு வந்த பிறகு. கருத்து வழங்க நேரமின்மையால் இத்தனை தாமதம்.

  தங்கள் தமிழ் சேவை தொடர என் வாழ்த்துகள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   எதுகை அழகிற்கு இணையாகப் பாட்டில்
   எது..கை கொடுக்கும் இயம்பு?

   Supprimer


 4. விதியென்னும் நற்றலைப்பில் மேவும் கவிதை
  மதிமின்னும் வண்ணம் வடித்தீா்! - புதிர்பல
  போட்டுப் புனைந்தகவி! போந்த வினைகளைக்
  காட்டும் திரையெனக் காண்!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   விதியின் பிடியில் விளையாடும் வாழ்வு!
   மதியும் மடிந்ததற்குள் ஆடும்! - பதிகின்ற
   யாவும் பயின்ற வினையென்க! இன்னலுற
   மேவும் வழியை விளக்கு!

   Supprimer