lundi 22 octobre 2012

காலத்தை வென்றவர்

                                     (மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணா்)
    

காலத்தை வென்றவர்

ஞாலத்தை உயர்விக்கும் நெறியை ஏற்று
            நன்மைகளைப் படைத்தவரும், உலகில் நட்பாம்
பாலத்தை அமைத்தெங்கும் மனித நேயப்
            பண்புகளைப் பொழிந்தவரும், வலிமை மிக்க
ஆலத்தைப் போன்றுடலில் உறுதி பெற்றே
            அருங்கொள்கை காத்தவரும், வாழ்வில் மேலாம்
காலத்தை வென்றவர்கள் ஆவார்! அன்னார்
            கடைவிரித்த பொன்னெறியைக் காப்போம் வாரீர்!

சீரழிக்கும் சமுதாயக் கொடுமை கண்டு
            சிங்கமென எதிர்த்தவரும், முன்னோர் சேர்த்த
பேரழிக்கும் செயல்புரிந்த அயலார் தம்மின்
            பெரும்படையை வென்றவரும், நரியாய் நாளும்
ஊரழிக்கும் அரசியலார் ஒழியும் வண்ணம்
            உழைத்திங்கே உயர்ந்தவரும், அன்னோர் தாமே
காரழிக்காக் கடலழிக்காப் புகழை மேவிக்
            காலத்தை வென்றவர்கள்! போற்று வோமே!

கலையிழந்து, கண்ணிழந்து, கருத்தி ழந்து,
            கையிழந்து தம்முரிமை இழந்து, வாழும்
நிலையிழந்தே அடிமையெனக் கிடப்போர் வாழ்வில்
            நிலைத்தபெரும் துயரத்தை ஒழித்தார் தாமும்
விலையிழந்து கிடக்கின்ற பொருளைப் போன்று
            வினையிழந்து உறக்கமுறும் நெஞ்சம் தன்னில்
அலைபுரண்டே எழுவதுபோல் உணர்வை ஊட்டும்
            அறிஞர்களும் காலத்தை வென்றார் என்பேன்!

யாமறிந்த மொழிகளிலே தமிழைப் போன்றே
            அமிழ்தூறும் மொழியுண்டோ? என்று கேட்ட
தேமதுரப் பெரும்புலவர்! சாதிப் பேயின்
            தீதழித்த பாரதியார் காலம் வென்றார்!
மாமணியாய்த் திகழ்ந்தவுயர் கவிஞர்! பாக்கள்
            வான்வெடியாய் வடித்தபுகழ் அறிஞர்! வண்ணப்
பூமணக்கும் செந்தமிழைப் போற்றி, என்றும்
            புகழ்மணக்கும் பாவேந்தர் காலம் வென்றார்!


என்னினத்தின் விடிவெள்ளிப் பெரியார்! ஏழை
            எளியோர்தம் வாழ்வுக்கே உரியார்! நல்ல
பொன்னகத்தில் அச்சமென்றும் அறியார்! மின்னும்
            பொதுமையொளி .வே.ரா காலம் வென்றார்!
தன்னலத்தான் புரிந்திட்ட சூட்சம் மாய்த்துத்
            தனித்தமிழின் ஞாயிறென ஒளியைத் தந்தார்!
புண்ணகத்தான் விளைத்தவினைத் துயரைப் போக்கிப்
                                     புகழ்பெற்ற பாவாணர் காலம் வென்றார்!  
                                                                                                                        
           

5 commentaires:

  1. அருமையான கவிதை, அப்துல் தையுப்,La courneuve

    RépondreSupprimer
  2. காலத்தை வென்றவரை வாசித்தேன். சிலாகித்தேன்.

    RépondreSupprimer
  3. காலத்தை வென்றவருக்கு சிறப்பான கவிதை...

    வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    RépondreSupprimer
  4. ரொம்ப நல்ல கவிதை. வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  5. காலத்தை வென்றவர்க்கு தங்கள் கவிதை மூலம் அழகு சேர்த்துள்ளீர்கள்...

    RépondreSupprimer