mardi 30 octobre 2012

தேனூறும் தமிழே




தேனூறும் தமிழே

எடுப்பு

பூத்தாடும் பூஞ்சோலை பாரு - நெஞ்சைப்
புண்ணாக்கும் பொன்மாலை யோடு
                                    (பூத்தாடும்)

தொடுப்பு

நாத்தாடும் வயல்வெளியாம் மேட்டில் - நாளும்
நாமிருந்தோம் பேரின்ப வீட்டில்
                                   (பூத்தாடும்)
முடிப்புகள்

இரவோடும் மனத்தோடும் விளையாடும் முல்லை - செவ்
விதழோரம் வாய்வைத்தால் சுவைக்கேதாம் எல்லை
அருளோடும் அன்போடும் எனையாளும் நங்கை - நல்
அழகோடும் அறிவோடும் உறவாடும் மங்கை
                                   (பூத்தாடும்)

இனிதான மணம்வீசம் எழிலான மேனி - என்றும்
இயல்பான மொழிபேசும் கலைஞான வாணி
தணியாத மோகத்தைத் தந்தவளே வாநீ - எனைத்
தனியாக வாடவிட்டே ஏன்போனா யோநீ
                                   (பூத்தாடும்)

மலராகும் மதுவாகும் மாதேஉன் முகமே - பவள
மணியாகும் அணியாகும் அன்பேஉன் நகமே
நிலவாகும் ஒளியாகும் அமுதேஉன் அகமே - என்
நினைவாகும் வாழ்வாகும் அழகேஉன் சுகமே
                                   (பூத்தாடும்)

உடலானாய் உயிரானாய் தேனூறும் தமிழே - என்
உணவானாய் உறவானாய் அமுதூறும் அழகே
கடலானாய் நதியானாய் கற்பனையாம் காட்டில் - உயர்
கருவானாய் பொருளானாய் நான்பாடும் பாட்டில்
                                   (பூத்தாடும்)

4 commentaires:

  1. அடேங்கப்பா. .....!?

    தேனமுது அய்யா...

    RépondreSupprimer
  2. தமிழுக்கும் அமுதென்று பேர்.

    RépondreSupprimer
  3. எடுப்பு, தொடுப்பு, முடிப்பு - அனைத்தும் அருமை ஐயா...

    நன்றி...

    த.ம.1

    RépondreSupprimer
  4. வாணி வா நீ அழகான இ டம்

    ஏன் போணாயோ நீ துணைவியார் பணிக்கு சென்று வருவதற்க்குள் இவ்வளவு ஏக்கமா
    சிவப்பிரகாசம்

    RépondreSupprimer