jeudi 18 octobre 2012

புயலென எழுக





வானினும் உயர்ந்த வளர்புகழ் மொழியே!
            மணங்கமழ் மலர்விரி காவே!
தேனினும் இனிய தீந்தமிழ் அமிழ்தே!
            திசைதொறும் பரவிடும் புகழே!
ஊனினும் புகுந்தே உயிரினும் கலந்தே
            உவட்டிடா தினித்திடும் சுவையே!
நானினி வளர நன்னெறி தனையே
            நல்குவாய் நற்றமிழ்த் தாயே!

அயல்மொழி விருப்பம் அருந்தமிழ் மக்கள்
            அகத்தினுள் ஆழ்வதும் சரியோ?
இயலிசை மிளிரும் இன்றமிழ் மொழியை
            இங்குநாம் மறந்ததும் முறையோ?
வயல்வெளி பசுமை வானமிழ் தினிமை
            வளத்தினை உடையது தமிழே!
புயலென எழுக! புதுவையின் மைந்தா!
            பூந்தமிழ் காத்திட இன்றே!
           
 அன்னியர் வந்தே அருந்தமிழ் கற்ற
            அருமையை எப்படிச் சொல்வேன்!
இன்னியல் வழியும் இசைத்தமிழ் மழையில்
            என்னுயிர் கலந்தினி திருப்பேன்!
கன்னியர் ஊட்டும் காதலின் சுவையும்
            கனிதமிழ்ச் சுவைக்கிணை யாமோ?
தன்னிகர் இல்லாத் தண்டமிழ் காக்கத்
            தயங்கிடா தெழுகநீர் இன்னே!

8 commentaires:

  1. தேன் கவிதை மழையில் நனைந்து
    இன்புற்றேன்.மனம் கவர்ந்த அருமையான கவிதை
    பதிவுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. சிறப்புக்கவிதை அருமை ஐயா...

    நன்றி...

    த.ம. 2

    RépondreSupprimer
  3. அன்னியரும் விரும்பிக் கற்கும் அருந்தவ மொழியாம் நம் தமிழமுதம் பருகி மகிழ்ந்தேன். மிக்க நன்றி கவிஞரே.

    RépondreSupprimer
  4. சிறப்பான கவிதை அய்யா...

    RépondreSupprimer

  5. வணக்கம்!

    வலையுக நண்பா் வழங்கும்எண் ணங்கள்
    கலையுகம் காட்டும் கமழ்ந்து!

    RépondreSupprimer
  6. அன்பின் பாரதி தாசன் - அருமையான கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    RépondreSupprimer

  7. பொங்குதமிழ் காக்கப் புலியெனப் பாய்ந்திடுக!
    எங்கும் தமிழ்க்கொடி ஏற்றிடுக! - அங்கமெலாம்
    பற்றிப் படா்ந்திடுக பைந்தமிழ் மேல்பற்று!
    கற்றுக் கமழ்ந்திடுக காத்து!

    RépondreSupprimer