jeudi 18 octobre 2012

புவியாண்ட தமிழினமே !
மங்கைதரும் இன்பமுடன் சுவைகள் யாவும்
     மதுத்தமிழின் முன்னாலே வேம்பாய்த் தோன்றும்!
சங்கமொளிர் வளர்தமிழ்போல் தரணி யின்கண்
     சால்புடைய வேறுமொழி உண்டோ சொல்வீர்!
சிங்கமெனத் தமிழ்மறவர் தோள்கள் விம்மின்
     சிறுநரியின் கூட்டம்கண் டோடிப் போகும்!
பொங்கியெழு புயலெனவே தமிழைக் காக்கப்
     புவியாண்ட தமிழினமே வெற்றி காண்பாய்!

காய்தனையே கனியிருக்கக் கவர்வார் உண்டோ?
     கண்தனையே காக்காத இமைதான் உண்டோ?
நோய்தனையே நாடுகின்ற உலகோர் உண்டோ?
     நூல்தனையே வெறுக்கின்ற புலவோர் உண்டோ?
சேய்தனையே பழிக்கின்ற தாய்தான் உண்டோ?
     சிந்தனையே சீர்பெற்றால் சிறுமை உண்டோ?
தாய்தனையே மறப்பதனால் நன்மை உண்டோ?
     தமிழ்தனையே மிஞ்சுகின்ற மொழிதான் உண்டோ?

மூவேந்தர் தமிழ்மொழியை முன்னே காத்த
     முறைகாத்து வாழ்வினிலே மேன்மை கொள்வோம்!
பாவேந்தர் பாடிவைத்த பாக்கள் போலப்
     பாவினையே படைத்திங்குப் பகையை வெல்வோம்!
நாவேந்தர் மொழிநடையை நன்றே கற்று
     நாற்றிசையும் போற்றிடவே நாளும் வாழ்வோம்!
சாவேந்த வந்தாலும் சற்றும் அஞ்சோம்
     தமிழ்த்தாயே உனைக்காக்கும் பணியில் தானே!

9 commentaires:

 1. மொழி -
  வலிமை-
  சொல்லிடீங்க அய்யா!

  RépondreSupprimer
 2. தமிழ்ப் பற்று ததும்பும் வரிகள் தமிழுணர்வை தட்டி எழுப்புகிறது.

  RépondreSupprimer

 3. கவியாளும் பாரதிதாசன கற்கண்டுப் பாடல்
  புவியாளும் நற்புகழும் பெற்றே- செவிதன்னில்
  செந்தமிழே தேனாறாய் சென்றேதான் பாய்கிறதே
  சந்தமுடன் நாள்தோறும் சால்பு

  RépondreSupprimer
 4. வீரமிகு வரிகள்... வாழ்த்துக்கள்...

  நன்றி ஐயா...

  RépondreSupprimer
 5. தமிழ் மீது தாங்கள் கொண்ட பற்றின் வெளிப்பாட்டில் வரும்
  கவிதைகள் ஒவ்வொன்றும் மிகவும் அற்புதமாக உள்ளதையா !....
  மனம் கவர்ந்த பகிர்வுகளுக்கு மிக்க நன்றி .மேலும் இவ்வினிய
  படைப்புகள் பலரையும் சென்றடைய தமிழ்மணம் ,தமிழ் 10
  இன்ட்லி போன்ற பிற தளங்களிலும் இணைத்துக்கொள்ளுங்கள் .
  இவற்றை இணைக்கும் வழிமுறைகளை இங்கு காணுங்கள் .
  http://www.bloggernanban.com/p/how-to-start-blog.html
  வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி இனிய பகிர்வுகளுக்கு .

  RépondreSupprimer
 6. அழகான தமிழில் அற்புதமான கவிதை ஐயா

  RépondreSupprimer
 7. வணக்கம்!

  இன்பத் தமிழின் சிறப்புகளை
  எழுதிக் குவித்தல் என்கடமை!
  துன்பப் பொழுதை நான்மறக்கத்
  துாய தமிழே அருள்செய்தால்!
  அன்ப! என்றே அழைக்குமுன்
  ஆடிப் பாடிக் கருத்தெழுதும்
  நண்பா் தமக்கு நனிநன்றி!
  நாளை வருக! சுவைபெறுக!

  RépondreSupprimer
 8. //சிங்கமெனத் தமிழ்மறவர் தோள்கள் விம்மின்
  சிறுநரியின் கூட்டம்கண் டோடிப் போகும்!//

  பாட்டு படிக்க நல்லாத்தான் இருக்கு. அனால் உண்மை அதற்கு மாறாக அல்லவா இருக்கிறது. ஒரு மூன்று நான்கு குள்ள நரிங்ககிட்ட தீர்த்தம் வாங்கிக் குடிச்சிகிட்டு பிரான்சு வாழ் தமிழ் மறவர் கூட்டம் மானம் கெட்டுக்கிடக்குதே, அதை பற்றி ஐயா ஒரு அறம் பாடக்கூடாதா ? காதலுக்காக போட்ட அரத்தை கொஞ்சம் நிறுத்தப்படாதா ?

  //காய்தனையே கனியிருக்கக் கவர்வார் உண்டோ?
  தமிழ்தனையே மிஞ்சுகின்ற மொழிதான் உண்டோ? //

  இலை மறை காயாக நீங்க போட்டுத்தாக்குவது என்ன மாதிரி அறிவிலிங்களுக்கு சட்டுன்னு விளங்காதே ஐயா !

  பிரான்சில் உள்ள வெள்ளக்கார ஏசுநாதருக்கே தமிழில் பூசை நடக்குது! அது அவருக்கு புரியுது!!
  மதுரை முத்தமிழ் சங்கத்து தலைவன் முருகனுக்கு சம்சுகிருதத்தில் பூசை நடக்குதே இங்கு !!! முருகன் விழிப்பிதுங்குது தன்னாலே !
  மறத்தமிழரெல்லாம் பார்பனிய நுகத்தடிக்கு இன்னும் எத்துனை நாள் தோள் கொடுக்கப்போராங்க ? அப்படின்னு நீங்க கவிதையிலே கேட்கக்கூடாதா ?
  என்னுமோ போங்க... சரி சரி சாமி கண்ணை குத்திடப்போகுது... ஆள விடுங்க சாமி....

  காஞ்சிபிலிம்ஸ்

  RépondreSupprimer

 9. புவியாண்ட பூந்தமிழர்! பொன்னொளி பூத்துக்
  கவியாண்ட பூந்தமிழர்! கன்னல் - சுவையாண்ட
  காலம் மறந்தனரே! காத்த..சீர் மாய்த்தனரே!
  ஞாலம் நகைக்கும் நயந்து!

  RépondreSupprimer