mardi 2 octobre 2012

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 4]

நண்பா்களின் வலைப்பூக்களில் என் கவிப்பூக்கள்

வணக்கம்

குறையொன்றும் இல்லையெனச் சொல்வேன்! அந்தக்
            கோதையவள் செய்திட்ட படையல் போன்று!
முறையொன்றும் அறியாத சிறுவன் நானும்
            முன்னுரையாய் உன்னெழுத்தைப் படித்தால் போது்
நிறையென்று புகழுரைகள் பாடும் வண்ணம்
            நெய்மணக்கச் சமைத்திடுவேன்! சமையல் செய்யும்
துறையொன்று வைத்திட்டால் தலைமை ஏற்றுத்
            தொண்டாற்ற இலட்சுமியை அழைப்பேன் யானே!

20.09.2012

------------------------------------------------------------------------------------------------------
 
வணக்கம்!

பத்துக்கும் ஐந்துக்கும் உழைக்கும் மக்கள்
            பஞ்சடைந்த தலைவார எண்ணெய் ஏது?
சொத்துக்கும் சுகத்துக்கும் குறைவே இன்றிச்
            சுரிதாரில் வருவோர்கள் ஏனோ இன்று
இத்திக்கு முடியளவை ஆக்கிக் கொண்டே
            இங்கிலீச் பெண்ணாக மாறிப் போனார்!
முத்துக்கு நிகரான பதிவைத் தந்த
            குட்டனைநான் கும்மிட்டேன்! வாழ்க நன்றே!
  
20.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பழிசொல்லல் பாவமெனப் பாடம் நடத்தி
வழிசொல்லும் மின்வலையே வாழ்க! - மொழிவெல்ல
நற்பணி செய்க! நறுந்தமிழை நன்கோதிப்
பொற்பணி செய்க பொலிந்து

21.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

தானே பெரியோன் என்றெண்ணித்
      தாவிக் குதித்தே ஆடுபவன்,
தேனே நிறைந்த சொல்லிருக்க
      தேள்போல் கொட்டிப் பேசுபவன்,
மானே! மயிலே! என்றுநமை
      மயக்கும் அழகைச் துாற்றுபவன்,
ஏனோ பிறந்தான்? மண்சுமையாய்
      இருந்தான் என்றே உலகேசும்!

21.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கலையகத்தில் முகம்தொலைத்த கலைஞா் உள்ளார்!
      கருத்தின்றிக் கால்செருப்பாய் இருப்பார் உள்ளார்!
கொலையகத்தில் கூலிபெறச் சோ்வோர் உள்ளார்!
      கொள்கையிலே தினம்மாறும் தலைவா் உள்ளார்!
வலையகத்தில் தொடராக எழுதி வந்த
      வரலாற்றை மின்நுாலாய்த் தந்தார் யாரோ?
மலையகத்தி்ல் முகம்தொலைத்த நண்பா! உன்னை
      மனத்தடத்தில் பதிக்கின்றேன் விருத்த தாலே!

21.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

வல்லோன் பெயரால் தொடா்கின்ற
      வலையைக் கண்டு வியக்கின்றேன்!
நல்லோன் செயலை இவ்வுலகம்
      நாளும் வணங்கிப் போற்றிடுமே!
வல்லோன் என்று வன்முறையில்
      வாழ்தல் அறத்தின் எதிர்பக்கம்!
இல்லோன் எளியோன் பசிபோக்க
      ஏற்ற பண்யே இறைத்தொண்டு!

21.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

செய்தாலி வலைக்குள்ளே சென்று பார்க்கச்
      சிலநாளாய் ஆசைவரும்! காலம் வந்து
மெய்வேலி போட்டாலும் அதனை மாறி
      மேவுகிறேன் பதிவுகளைப் பார்க்க! ஆகா..
பொய்பாடி, புகழ்பாடி வாழும் வாழ்வில்
      புதுமுறையில் தமிழ்பாடிப் பொலியும் எண்ணம்!
தய்யாடித் தந்தாடி என்றே நெஞ்சம்
      தானாடிக் களித்ததுவே! வளா்க! வாழ்க!!

21.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

அச்சத்தில் கிடக்காதே! துணிந்து சென்று
      ஆபத்தை ஒருகை..பார்! தமிழின் சீரை
உச்சத்தில் வைத்திட்ட பாட்டின் வேந்தன்
      உயா்மொழியை உரைக்கின்ற எழிலே வாழ்க!
மச்சத்தில் பயன்பார்க்கும் மடையா் போக்கை
      மட்டையென உடைத்திடுக! ஆணும் பெண்ணும்
இச்செகத்தில் சமமென்று சாற்று! பாவை
      இல்லையெனில் இவ்வுலகின் இயக்கம் இல்லை!

21.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

மனச்சாட்சி வலைப்பதிவைக் கண்டேன்! நண்பா
      மனச்சாட்சி இல்லாமல் ச்யைக் கொன்றாய்!
வனக்காட்சிப் பேரழகு! தென்றல் காற்று!
      மதுவூறும் வண்டமிழைத் தோழா காப்பாய்!
தினக்காட்சி, நாளேடு, தமிழைக் தின்று
      செரித்தனவே! மின்வலையே நீயும் ஏனோ
இனமாட்சி அறியாமல் செயல்கள் செய்தாய்!
      என்றுமுள செந்தமிழை இசைப்பாய் நன்றே!

மனச்சாட்சி, மனச்சான்று, மனப்பால், மனப்பிரமை,
மனத்துப்பிரவு மனப்பகை, மனப்பூரணம் ஆகிய சொற்களில் வல்லினம் மிகும்! திருத்தம் செய்து கொள்ளவும்

21.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

வேதா பார்த்துக் களித்திட்ட
      வியப்பை எல்லாம் பதிவாக்கிச்
சாதா போன்றே இருந்தஎனைச்
      சற்றே உசுப்பி விடுகின்றார்!
போதா என்றே புலிப்படங்கள்
      போட்டே உணா்வை ஊட்டுகிறார்!
மாதா மாரி நபியன்னை
      மனம்போல் வாழ்வை வழங்குகவே!

6 commentaires:

  1. எல்லா தளங்களும் பற்றி சிறப்பான வர்ணனை...

    நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிறந்த வலைகளைச் செந்தமிழில் தந்தேன்
      திறந்த மனத்துடன் தெளிந்து!

      Supprimer
  2. பிரமிப்பு தான் ஏற்படுகிறது தங்கள் கவிகளைப் படிக்கும் போது எனக்கு...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வியக்கும் தமிழாய் விளைத்திட்ட பாக்கள்
      மயக்கும் மனத்துள் மலர்ந்து!

      Supprimer

  3. தேனுாற்றாய் உன்னுள் தெளிதமிழ் ஊறிவர
    நானேற்று நன்றே நலங்கண்டேன்! - ஊனேற்று
    உயிரேற்று உயா்தமிழ் ஓதுகின்றாய்! வாழ்வை
    பயிரேற்ற நல்லுரமாய்ப் பற்று!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தேனுாற்றாய் உன்றன் தெளிதமிழ் ஊறிவர
      நானேற்று நன்றே நலம்பெற்றேன்! - ஊனேற்று
      உயிரேற்று உயர்தமிழ் ஓதுகின்றாய்! வாழ்வைப்
      பயிரேற்ற நல்லுரமாய்ப் பற்று

      Supprimer