வண்ணத் தமிழே வந்தாடு
வண்ணத் தமிழே வந்தாடு – என்
வண்ணத் தமிழே வந்தாடு – என்
எண்ண அரங்கில் மலர் பந்தாடு!
(வண்ணத்)
அருஞ்சீர் புலவன் அகத்தியரின்
அகத்துள் அமர்ந்து அழகடைந்தாய்!
பெருஞ்சீர் புலவன் காப்பியரின்
பெருமை கண்டு உளம்மகிழ்ந்தாய்!
தருஞ்சீர் புலவன் இளங்கோவின்
தாளச் சிலம்பில் நடம்பயின்றாய்!
வருஞ்சிர்; புலவன் எனக்குள்ளே
வண்ணத் தமிழே வந்தாடு!
(வண்ணத்)
ஞானக் குழந்தை சம்பந்தர்
நாவில் நடந்து நலங்கொடுத்தாய்!
ஆன தெல்லாம் அவனென்ற
அப்பர் கவியில் அணியணிந்தாய்!
தான தந்த அருணகிரி
சந்தப் பாட்டில் புகழடைந்தாய்!
ஊனம் நீங்கி நானுயர
உயந்த தமிழே வந்தாடு!
(வண்ணத்)
உள்ளம் உருகும் வாசகரின்
உயிராய் உடலாய் ஒளிகொடுத்தாய்!
தௌ்ளத் தெளிந்த சேக்கிழாரின்
தேனார் மொழியில் செழிப்படைந்தாய்!
வள்ளல் இராம லிங்கரிடம்
வரமாய் இருந்து வளமடைந்தாய்!
கள்ளம் நீங்கி நானுயரக்
கன்னல் தமிழே வந்தாடு!
(வண்ணத்)
ஆழ்வார் பொழிந்த அமுதானாய்!
அகிலம் போற்றும் அறமானாய்!
சூழ்வார் வாழ்வில் துயர்போக்கும்
சுடரும் சித்தர் மருந்தானாய்!
வாழ்வார் வாழப் பெரும்நூலை
வடித்த கம்பன் விருந்தானாய்!
தாழ்வார் நிலையை நான்மாற்றத்
தழைத்த தமிழே வந்தாடு!
(வண்ணத்)
முறுக்கு மீசைப் பாரதியை
முழங்க வைத்த மூச்சானாய்!
நறுக்கு மீசைப் பாவேந்தர்
நரம்பில் ஊறும் உணர்வானாய்!
செருக்கு மீசை பாவாணர்
சொல்லும் செயலும் நீயானாய்!
கிறுக்கு மீசை காரன்யான்
கீர்த்தி பெறவே வந்தாடு!
(வண்ணத்)
RépondreSupprimerவண்ணத் தமிழோடு வந்தாடித் தந்தகவி
எண்ணம் நிறைந்திசை மீட்டியதே! - பண்சிறக்கத்
தந்ததன தாளமெலாம் தந்ததமிழ் ஓங்கிடவே
முந்துபுகழ் யாவும் முழங்கு!
Supprimerவணக்கம்!
தந்ததன தாளங்கள் தந்தபுகழ்த் தண்டமிழை
என்றனுயிர் ஏந்தி இசைத்ததுவே! - என்றென்றும்
பொங்கும் புகழ்க்கவி பூத்துப் பொலிந்ததுவே!
எங்கும் இனிமை இசைத்து!