நானும், கவியரசரின் மைந்தா் அண்ணாதுரை கண்ணதாசனும்
கண்ணதாசன் விழா 26.04.2014
கவிதைத் தலைவன்
26.
மத்துவத்தின் வழியாந்தார்! மற்றும் உள்ள
மார்க்கத்தின் நெறியாந்தார்! விளக்கம் கண்டார்!
தத்துவத்தின் முத்தெடுத்துத் தந்த பாக்கள்
தர்மத்தின் அரணாகக் காவல் காக்கும்!
சத்தியத்தின் புகழ்பெற்ற காந்தி அண்ணல்
சாந்தியத்தின் அகமேற்ற அருமைப் புத்தர்
வித்துவத்தின் ஒளியேற்றி விற்றி ருக்கும்
வியன்நெஞ்சர் கவியரசர் கண்ண தாசர்!
27.
சீருண்டு! சிறப்புண்டு! செழிப்பும் உண்டு!
சிந்தனையோ சிறகடித்துப் பறப்ப(து) உண்டு!
பேருண்டு! பெருமையுண்டு! பெரியோர் போற்றிப்
பேணுகின்ற பேறுண்டு! புகழ்த்தாய் நல்கும்
தாருண்டு! கொடியுண்டு! தமிழ்த்தாய் தந்த
தேருண்டு! தேனுண்டு! செல்வம் உண்டு!
காருண்ட குழலழகில் காதல் பொங்கிக்
கவிபாடும் கவியரசர் கண்ண தாசர்!
28.
விண்தூதர் இறையேசு புகழைப் போற்றி
விளைத்துள்ள காவியத்தைப் படித்தால் போதும்
பண்தூதர் எனும்பெரைப் பாரில் பற்றிப்
பாவலர்கள் பயனுறுவார்! அன்பை ஊட்டும்
மண்தூதர் ஆற்றுகின்ற கடமை யாக
மகிழ்வூட்டும் மாண்புகளை வாரித் தந்த
தண்தூதர்! தமிழ்த்தூதர்! ஈடே இல்லாக்
கவித்தூதர் கவியரசர் கண்ண தாசர்!
29.
பழனியப்பா! பழனியப்பா! ஞானச் செல்வப்
பழனியப்பா! இசைத்தபுகழ்ப் பாடல் கேட்டேன்!
குழவியப்பா என்றினிக்கும் சொற்கள் கூட்டிக்
கொஞ்சுதமிழ் உரிமையினைக் கோரும் ஓளவை!
கழகமப்பா என்றெண்ணிக் கவிஞர் கூட்டம்
கவிக்கலையைக் கற்றொளிரக் காதல் கொள்ளும்!
வழக்கமப்பா எந்நாளும் அவர்..பா ஓதல்!
வாழ்வளிக்கும் கவியரசர் கண்ண தாசர்!
30.
செவிநுகரும் உரைசெல்வம் வாரித் தந்தார்!
சீருலவும் வாழ்வுபெற வழிகள் சொன்னார்!
புவிநுகரும் வண்ணத்தில் வாழ்ந்த வாழ்வைப்
புகழ்வாச நூலிரண்டில் புனைந்து வைத்தார்!
அவிநுகரும் தேவருக்கும் ஆசை மேவும்
அருந்தமிழின் சுவைநுகர ஆக்கம் செய்தார்!
கவிநுகரும் சொன்மணக்கக் கருத்தைக் பாடிக்
கனிந்தளித்த கவியரசர் கண்ண தாசர்!
தொடரும்