சித்திர கவி மேடை - 10
ஒன்றில் நான்கு
ஒரு
செய்யுளுக்குள் மேலும் நான்கு செய்யுள் இருக்கும் வண்ணம் பாடுதல் ஒன்றில் நான்கென்னும்
சொற்சித்திரக் கவியாம். இவ்வகை நான் கண்டுணர்ந்த புதிய வகையாம்.
வஞ்சித்துறையில்
ஓரடியில் இரு சீர்கள் இருக்கும். வஞ்சித்துறையடியில் ஒரு சீர் கூடினால் வஞ்சி விருத்தமாகும்.
வஞ்சி விருத்தவடியில் ஒரு சீர் கூடினால் கலிவிருத்தமாகும். கலிவிருத்தவடியில் ஒரு சீர்
கூடினால் கலித்துறையாகும். கலிதுறையடியில் ஒரு சீர் கூடினால் அறுசீர் ஆசிரிய விருத்தமாகும்.
முன்னோர்
வகுத்த வாய்பாடுகளில் செய்யுள்கள் ஐந்தும்
அமைய வேண்டும். புதிய வாய்பாட்டைப் போட்டு எழுதக்கூடாது என்பது முன்னோர் வகுத்த உரையாம்.
ஐந்து
பாடல்களிலும் மோனை அமைய வேண்டும். முதல் பாடலில் அமைந்த புணர்ச்சி விதிகள் தொடரும்
பாடல்களிலும் வர வேண்டும்.
அறுசீர் விருத்தம்
[மா+மா+ மா+ மா+ மா+ காய்]
நேரசையில் தொடங்கும் இவ்விருத்தம் ஓரடியில் 17 எழுத்தும்,
நிரையசையில் தொடங்கினால் 18 எழுத்தும் பெறும்.
பெண்ணே
வருவாய்! பெயர்சேர்
பேறாம் பேணிப் பயனிடுவாய்!
பண்ணே
தருவாய்! பனிசேர்
பாங்காய்க் கட்டிக் கலையிடுவாய்!
கண்ணே
இணைவாய்! கனிந்து
காக்குந் தாயே! நலமிடுவாய்!
தண்ணே
புனைவாய்! தமிழே!
தாயே! அன்பே! மனம்புகுவாய்!
கலித்துறை
[மா+மா+ மா+ தேமா+ தேமா]
முதல் மூன்று சீர்கள் வெண்டளையால் அமையும். 1, 3
மோனை யமையும். நேரசையில் தொடங்கும் கலித்துறை
ஓரடியில் 12 எழுத்தும், நிரையசையில் தொடங்குங் கலித்துறை 13 எழுத்தும் பெறும்.
பெண்ணே
வருவாய்! பெயர்சேர் பேறாம் பேணிப்
பண்ணே
தருவாய்! பனிசேர் பாங்காய்க் கட்டிக்
கண்ணே
இணைவாய்! கனிந்து காக்குந் தாயே
தண்ணே
புனைவாய்! தமிழே! தாதே! அன்பே!
கலிவிருத்தம்
[மா+மா+ மா+மா]
[ஒவ்வோர்
அடியிலும் 10 எழுத்துகள் வந்தன]
பெண்ணே
வருவாய்! பெயர்சேர் பேறாம்
பண்ணே
தருவாய்! பனிசேர் பாங்காய்க்
கண்ணே
இணைவாய்! கனிந்து காக்குந்
தண்ணே
புனைவாய்! தமிழே! தாதே!
வஞ்சி விருத்தம் [வெண்டளை]
[ஒவ்வோர்
அடியிலும் 8 எழுத்துகள் வந்தன]
பெண்ணே
வருவாய்! பெயர்சேர்
பண்ணே
தருவாய்! பனிசேர்
கண்ணே
இணைவாய்! கனிந்து
தண்ணே
புனைவாய்! தமிழே!
வஞ்சித் துறை [வெண்டளை]
[ஒவ்வோர்
அடியிலும் 5 எழுத்துகள் வந்தன]
பெண்ணே
வருவாய்!
பண்ணே
தருவாய்!
கண்ணே
இணைவாய்!
தண்ணே
புனைவாய்!
இப்பாடலை
எளிதாக எழுதும் முறை
முதலில்
வஞ்சித் துறையை எழுத வேண்டும். வஞ்சித் துறையின் முதற்சீர் தேமா அல்லது புளிமா வரலாம்.
இரண்டாம் சீர் புளிமா வர வேண்டும்.
வஞ்சித் துறையடியில் ஒரு சீரைச் சேர்த்தால் வஞ்சி விருத்தமாகும். மூன்றாம் சீர் புளிமா
வர வேண்டும். முதல் சீரின் மோனையும் அதில்
அமைய வேண்டும்.
வஞ்சி
விருத்தவடியில் ஒரு சீரைச் சேர்த்தால் கலிவிருத்தமாகும். நான்காம் சீர் தேமா வர வேண்டும்.
முதல் சீரின் மோனையும் அதில் அமைய வேண்டும். [ இந்தப் பாடலில் 1, 3, 4 ஆகிய சீர்களில்
மோனை அமைந்திருக்கும். இவ்வாறு மோனை வந்தால்
அறுசீர் விருத்தத்திற்கு மோனை சரியாக அமையும்.
கலிவிருத்தவடியில்
ஒரு சீரைச் சேர்த்தால் கலித்துறையாகும். ஐந்தாம் சீர் தேமாவாகும்.
கலித்துறையில்
ஒரு சீரைச் சேர்த்தால் ஆசிரியர் விருத்தமாகும். ஆறாம் சீர் காய்ச்சீர் வர வேண்டும்.
நான்கடிகளிலும் ஒரே வகையான காய்ச்சீர் வந்தால் எழுத்து எண்ணிக்கை ஒன்றிவரும். மேலுள்ள
பாடலில் நான்கடிகளிலும் கருவிளங்காய் வந்துள்ளது.
அறுசீர்
விருத்தத்தில் வந்த புணா்ச்சி நெறிகள் அனைத்துப் பாடல்களிலும் அமைய வேண்டும்.
மேலுள்ள
பாடலில்
பெண்ணே
வருவாய்! பெயர்சேர்
பேறாம் பேணிப் பயனிடுவாய்!
பேணிப்
பயனிடுவாய் - ப் வல்லினம் மிகுந்து வந்தது.
கலித்துறையிலும் ப் வரவேண்டும்
பெண்ணே
வருவாய்! பெயர்சேர் பேறாம் பேணிப்
பண்ணே
தருவாய்! பனிசேர் பாங்காய்க் கட்டிக்
பேணிப்
பண்ணே என வல்லினம் மிகுந்தது
விரும்பிய
பொருளில் ஒன்றில் ஐந்து எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
கம்பன்
கழகம் பிரான்சு
தொல்காப்பியர்
கழகம் பிரான்சு
01.07.2022