பாவலர்
சேந்தன்குடியாரின் விருத்தங்கள்
சாற்றுகவி
நாட்டுணர்வு பொங்கிவரும் நெஞ்சங் கொண்ட
நலமேவு நற்சேந்தன் குடியார் நாளும்
பாட்டுணர்வு பொங்கிவரும் ஆக்கந் தந்தார்!
பாட்டரசன் என்படையின் முன்னே வந்தார்!
கூட்டுணர்வு பொங்கிவரும் கொள்கை பூண்டு
குவலயத்தை உறவென்று பாக்கள் செய்தார்!
ஏட்டுணர்வு பொங்கிவரும் கற்றோர் போற்ற
ஈடிற்செந் தமிழாழன் வாழ்க! வாழ்க!
இனவுணர்வு பொங்கிவரும் இதயங் கொண்ட
இனியதமிழ்க் கவி.சேந்தன் குடியார் தம்மின்
மனவுணர்வு பொங்கிவரும் கவிதை யாவும்
மடமையிருள் கிழிக்கின்ற கதிரே யாகும்!
தினமுணர்வு பொங்கிவரும் மறவர் போன்று
தீந்தமிழைக் காக்கின்றார்! எத்தர் போக்கால்
சினவுணர்வு பொங்கிவரும்! சான்றோர் வழியிற்
சிறக்குஞ்செந் தமிழாழன் வாழ்க! வாழ்க!
அன்புநெறி பொங்கிவரும் அகமே கொண்ட
அருமாற்றல் சேர்சேந்தன் குடியார் என்றும்
இன்புநெறி பொங்கிவரும் தமிழைப் பாடி
இசைக்கின்ற கவியாவும் தேனே என்பேன்!
வன்புநெறி பொங்கிவரும்! வானம் எட்டும்
மாட்சிநெறி பொங்கிவரும்! அன்னை தந்த
முன்புநெறி பொங்கிவரும்! முத்தாய்ப் பண்பை
மொழியுஞ்செந் தமிழாழன் வாழ்க! வாழ்க!
சீர்யாவும் பொங்கிவரும் சிந்தை கொண்ட
திண்மைமிகு கவி.சேந்தன் குடியார் வாழ்விற்
பேர்யாவும் பொங்கிவரும்! பெற்றோர் காத்த
பேறெல்லாம் பொங்கிவரும்! உரிமைப் பாவில்
ஊர்யாவும் பொங்கிவரும்! பாடப் பாட
உளம்யாவும் பொங்கிவரும்! யாப்பில் உள்ள
கூர்யாவும் பொங்கிவரும்! புலமை யோங்கிக்
கொழிக்குஞ்செந் தமிழாழன் வாழ்க! வாழ்க!
கலையமுதம் பொங்கிவரும் மனமே கொண்ட
கடமையொளிர் கவி.சேந்தன் குடியார் நுாலில்
அலையமுதம் பொங்கிவரும்! மூத்தோர் சொன்ன
அருளமுதம் பொங்கிவரும்! வாழ்வைக் காக்குந்
தலையமுதம் பொங்கிவரும்! பாடு மன்றில்
தமிழமுதம் பொங்கிவரும்! பழுத்துத் தொங்குங்
குலையமுதம் பொங்கிவரும் குணமே வாழ்க!
கூர்மைத்செந் தமிழாழன் வாழ்க! வாழ்க!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
29.01.2022