விருத்த மேடை - 49
எண்சீர் விருத்தம் - 1
காய்
+ காய் + காய் + மா
காய் + காய் + காய் + மா
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே!
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே!
நல்லார்க்கும் பொல்லார்க்கம் நடுநின்ற நடுவே!
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலஞ்சொடுக்கும் நலமே!
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே!
என்னரசே! யான்புகலும் இசையும்அணிந் தருளே!
[வள்ளலார், திருவருட்பா - 575]
நாப்பிளக்கப்
பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க எழுகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்,
காப்பதற்கும் வகையறியீர், கைவிடவும் மாட்டீர்,
கவட்டுத்தொல் மரத்திடுக்கில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனைப் பிடித்தசைத்த பேய்க்குரங்கு போல
அகப்பட்டீர், கிடந்துழல அகப்பட்டீர் நீரே!
[பட்டினத்தடிகள்]
மோனம் போற்று [பாரதியின் புதிய ஆத்திசூடி]
[மோனம்
- மௌனம்]
உள்ளிருக்கும் உன்னுயிரை உணர்ந்திடவே வேண்டின்
உடலடக்கி உளமடக்கி மோனநிலை ஏற்பாய்!
முள்ளிருக்கும் சொல்லகற்றி நாவடக்கம் கொண்டு
மூச்சிருக்கும் மொழியிருக்கும், ஞானநிலை கற்பாய்!
கள்ளிருக்கும் சுவையூறும் பேரிறையின் சீரில்
கட்டுண்டு களிப்பூறும் வானநிலை அறிவாய்!
எள்ளிருக்கும் சிறுவளவும் வாயடக்கம் மேவ
இனித்திருக்கும் இறையொளியின் கானநிலை காண்பாய்!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
முதல் மூன்று சீர்கள் காய்ச்சீராகும். நான்காம் சீர் மாச்சீராகும்.
இதுபோன்றே மற்ற அரையடி அமையும். நான்கடிகளும்
ஓரெதுகை பெறவேண்டும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறும்.
ஆத்திசூடி
நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு
அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.11.2020