dimanche 25 avril 2021

ஈழக் கொலைச்சிந்து

 
ஈழக் படுகொலைச்சிந்து

 1.

வேழம் போன்ற ஈழ நாடு

வீரம் பாயும் வேங்கை நாடு

சோழர் மேன்மை சொல்லும் நாடு

துாய பாதை சூடும் நாடு

புலிபறக்கும் பாரு - அதன்

புகழ்சிறக்கும் கூறு

 2.

வீரம் விளையும் விந்தை நாடு

வெற்றி விளையும் மேன்மை நாடு

காரம் விளையும் கவிதை நாடு

கடமை விளையும் கன்னல் நாடு

ஈழம் என்று போற்று - மனம்

ஏந்திச் சேவை யாற்று

 3.

அன்னைத் தமிழ் ஆளும் நாடு

ஆற்றல் படை ஆளும் நாடு

முன்னை நெறி மூளும் நாடு

முற்றிப் புகழ் ஆளும் நாடு

எங்கள் ஈழ நிலமே - அது

ஈடில் வீரக் களமே

 4.

தாக்கும் பகையைப் போக்கும் நாடு

சங்கத் தமிழை ஆக்கும் நாடு

வாக்கும் செயலும் பூக்கும் நாடு

வல்ல மறவர் காக்கும் நாடு

ஈழம் என்றே சொல்லு - தலைவன்

இட்ட பாதை செல்லு!

5.

கார்த்திப் பூக்கள் காணு நாடு

கவிதைப் பூக்கள் பேணு நாடு

கீர்த்தி பூக்கள் கட்டு நாடு

கேள்விப் பூக்கள் கொட்டு நாடு

மேன்மைத் தொடர் ஈழம் - அதன்

ஆண்மைக் கடல் ஆழம்

 6.

மண்ணைக் காக்கும் மறவர் கூட்டம்

மாண்பைக் காக்கும் அறிஞர் கூட்டம்

பண்ணைக் காக்கும் புலவர் கூட்டம்

பண்பைக் காக்கும் மகளிர் கூட்டம்

ஈடு சொல்ல ஏது - ஈழ

எழிலை எங்கும் ஓது

 7.

ஓங்கு பனைகள் உள்ள மக்கள் 

ஓய்வு மின்றி ஓடும் மக்கள் 

தேங்கு புகழைத் தாங்கும் மக்கள் 

தீவை யாண்ட திண்மை மக்கள் 

வாடும் நிலை யுற்றார் - தமிழ்

வாழும் வழி கற்றார்

 8.

அண்டை நாடு  கொண்ட சதியே

அல்லும் பகலும் கண்ட சதியே

மண்டைக் குள்ளே மனித மின்றிச்

வஞ்சம் பொங்கி வார்த்த சதியே

சதியால் சாய்ந்த ஈழம் - புகழ்

சமைத்து மண்ணில் வாழும்

 9.

செம்மை கொண்ட சிந்து நாடு

செய்த தீமை செப்பும் ஏடு!

எம்மண் எங்கும் இரத்த ஆறு

ஈசன் இல்லை என்றே கூறு

கோல இந்து தேசம் - படு

கொலையைக் காலம் பேசும்

 10.

புத்தன் இல்லை புனிதன் இல்லை

கத்தன் இல்லை கருணை இல்லை

சித்தன் இல்லை செம்மை இல்லை

முத்தன் இல்லை முற்றன் இல்லை

சிங்கக் கொலைச் சிந்து - கண்ணீர்

சிந்தும்  உலகப் பந்து!

 

 [தொடரும்]

 பாட்டரசர் கி. பாரதிதாசன்

25.04.2021

தெம்மாங்கு



தெம்மாங்கு
 

[சந்தையிலே மீனு வாங்கி என்ற மெட்டு]
 

 

1.

சுங்கு சுங்கு சுங்க றாளே - யெனச்

சுட்டுச் சுட்டுத் திங்க றாளே!

நுங்கு நுங்கு விக்க றாளே - இவ

நோக்கு வர்மம் கற்க றாளே

 

2.

சிங்கு சிங்கு சிங்கு றாளே -  யென்

சிந்தை குள்ளே தொங்க றாளே!

அங்கும் இங்கும் பார்க்க றாளே - பல 

ஆட்டங் காட்டிச் சேர்க்க றாளே! 

 

3.

கெண்டை மீனு கண்ணு காரி - வீரச்

சண்டை செய்யும் மண்ணு காரி

கொண்டை போட்டுக் காட்டு றாளே - இவ 

தண்டைத் தாளம் மீட்டு றாளே!

 

 

4.

நீண்ட நீண்ட மூக்குக் காரி - இவ

நெஞ்சை மாத்தும் வாக்குக காரி

வேண்ட வேண்ட விஞ்சி றாளே - இவ

வித்தை காட்டிக் கொஞ்சி ராளே

 

5.

முத்து முத்துப் பல்லு காரி - இவ

மேகம் மூட்டும் சொல்லு காரி

கத்திக் கத்தி ஓட்டு றாளே - யென்

காதல் நெஞ்ச வாட்டு றாளே!

 

6.

செக்கச் செவந்த நாக்குக் காரி - அவ

சினிமா காட்டும் போக்குக் காரி

சொக்கக் சொக்கச் செய்யு றாளே - யெனச்

சும்மா நாளும் வய்யு றளே!

 

7.

சங்கு சங்குக் கழுத்துக் காரி - இவ

சங்க கால எழுத்துக் காரி

மங்கு மங்கு குத்த ராளே - இவ

மாயக் கண்ண சுத்த ராளே!

 

8.

முல்ல மெட்டு கொம்புக் காரி - அவ

முட்டித் தள்ளும் வம்புக் காரி

கல்ல தொட்டுக் காட்டு றாளே - யென

காக்கா வென்றே ஓட்டு றாளே!

 

9.

சிலுக்குக் சேலத் தோணிக் காரி - நெஞ்ச

சிலுக்கச் செய்யும் மேனிக் காரி

குலுக்கிக் குலுக்கிச் செல்ல றாளே - யெனக்

குத்திக் குத்திக் கொல்ல றாளே

 

10.

தண்ட பேட்ட காலு காரி - யெனத்

தாக்க வந்த வேலு காரி

வெண்டக் காட்டுப் பக்கதிலே - அவ

விருப்பம் சொன்னா வெக்கத்திலே

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

24.04.2021

தெம்மாங்கு

தெம்மாங்கு
ஒத்த ரூபாய் தாரேன் என்ற மெட்டு

ஆண்

மூட்ட நெல்லு தாரேன் - ஒரு
மூக்குத்தி வாங்கித் தாரேன்
காட்டுப் பக்கம் வாடி - யெனக்
கட்டி யின்பம் தாடி

பெண்

மூட்ட நெல்லு வேணா - ஒரு
மூக்குத்தி  ஒன்னு வேணா
பாட்ட கொஞ்சம் மாத்து - இனிப்
பண்ண வேணா கூத்து

 

ஆண்

கட்டுக் கரும்பு தாரேன் - பவுன்

கம்மல் வாங்கித் தாரேன்!

தொட்டுப் பேச வாடி - மனம்

சொக்குங் கவிதை பாடி

 

பெண்

கட்டுக் கரும்பு வேணா - பவுன்

கம்மல் ஒன்னு வேணா

எட்ட போயி நில்லு - நீ
இளிக்க உடையும் பல்லு

 

ஆண்

பட்டுப் புடவ தாரேன் - யேன் 
பாதிக் காணி தாரேன்

கிட்ட வந்து பேசு - மலர்

கிள்ளி மேல வீசு

 

பெண்

பட்டுப் புடவ வேணா - ஒம்
பாதிக் காணி வேணா

முட்டைக் கண்ணு மாமா - யேன்

மூச்சு முட்டுங் காமா

 

ஆண்

காலு கொலுசு தாரேன் - கைக்

காப்புச் செய்து தாரேன்

நாலு மணி யாச்சி - இனி

நடக்குங் காம னாட்சி

 

பெண்

காலு கொலுசு வேணா -  கைக்

காப்புச் செய்ய வேணா

நாளு முழுதும் தொல்ல - ஓங்

நடிப்புக் கில்லை எல்ல


ஆண்

நெத்திச் சுட்டி தாரேன் - எழில்

நீலப் பதக்கம் தாரேன்

கத்தரித் தோப்புக் குள்ள - வா

காதல் பாடம் சொல்ல

 

பெண்

நெத்திச் சுட்டி வேணா  - எழில்

நீலப் பதக்கம் வேணா 

சுத்த மில்லாப் பேச்சி - ஓங்

புத்தி யெங்கே போச்சி

 

ஆண்

முத்து மால தாரேன் - ஓங்

முகத்துச் சாயம் தாரேன்

காத்துக் குயில் தோட்டம் - வா

காண மயில் ஆட்டம்

 

பெண்

முத்து மால வேணா - ஓங் 

முகத்துச் சாயம் வேணா

செத்த மெல்லத் தள்ளு - மாமா

செய்யா திங்க லொள்ளு!

 

ஆண்

சீல வாங்கித் தாரேன் - காது

சிமிக்கை வாங்கித் தாரேன்

சோல பக்கம் வாடி - நாம

சொந்த மாவோங் கூடி

 

பெண்

சேல ஏதும் வேணா  - காது

சிமிக்கை ஏதும் வேணா
வேல ஏதும் மில்ல -  நீ 
மேலும் மேலும் தொல்ல 

 

ஆண்

தோடு வாங்கித் தாரேன் - மாந்

தோப்பு வாங்கித் தாரேன்

ஆடு மாடு மேயும் - ஓங்

அழகைக் கண்டு சாயும்

 

பெண்

தோடு போட வேணா - மாந்

தோப்புக் கூட வேணா

ஓடு வேறு பக்கம் - இலை

உண்ண ஆடு எக்கும்

 

ஆண்

ஒட்டி யாணம் தாரேன் - யேங்

உசுர கூடத் தாரேன் 

ஒட்டிக் கொள்ள வாடி - நாம

ஒதுங்கு மிடம் தேடி

 

பெண்

ஒட்டி யாணம் வேணா - ஓங்

உசுர விட வேணா  

தொட்டுப் பேசும் ஒன்ன - இங்குத்

துரத்தும் வழி யென்ன

 

ஆண்

வேலி வாங்கித் தாரேன்  - நீ

வேண்டும் பொருள் தாரேன்

சாலி யாக வந்து - நீ

தருக மலர்ப் பந்து!

 

பெண்

வேலி ஒன்னும் வேணா - மச்சான்
மேவு பொருள் வேணா

தாலி செய்து கட்டு - பின்

தழுவிக் கும்மி கொட்டு

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

24.04.2021

 

 

dimanche 18 avril 2021

தெம்மாங்கு

 

சிந்துப்பா மேடை - 18

தெம்மாங்கு

வாழையடி யுன்கூந்தல் வயிரமடி பற்காவி

ஏழையடி நானுனக்கு மானே - இன்னும்

இரங்கலையோ உன்மனது தேனே

அடி : நான்மையின ஏகம் நான்மை நடையில் 3 வட்டணையில் அமைந்த ஓரடிப் பாடல்

'வாழை' முதல் 'தேனே' வரை 12 சீர்களையுடை ஓரடி.  ஒவ்வொரு சீரும் 4 சிந்தசைகளைக் கொண்டிசைக்கும். மேலுள்ள பாடலில் 7 சீரின் ஈறு நான்கு அசைகள் நீண்டு ஒலித்து 7, 8 ஆம் சீர்கள் ஒவ்வொன்றும் நான்கு அசைகளைப் பெறும். 11 ஆம் சீரின் ஈறு ஆறு அசைகள் அளபெடுத்து நீண்டிசைக்கும்.

1,5 ஆம் சீர்கள் எதுகை பெற்றுவரும் [வாழை - ஏழை]

1, 3 ஆம் சீர்களில் மோனை பெறவேண்டும் [வாழை - வயிரம்]

5, 9 ஆம் சீர்கள் மோனை பெறவேண்டும் [ஏழை - இரங்கலை]

அசை பிரித்தல்

வா/ழை/ய/டி  யுன்/கூந்/தல்/வ  யி//ர/ம/டி பற்/கா/வி/o

ஏ/ழை/ய/டி  நா/னு/னக்/கு  மா/னே/o/o - o/o/இன்/னும்

இரங்/க/லை/யோ  உன்/ம/ன/து  தே/னே/o/o  o/o/o/o

1.

ஒத்தையடிப் பாதையிலே உன்னதேடி நானும்வரேன்

கொத்துமலர் ஆடுதடி வண்டு - கூடிக்

கோலநடை போடுதடி நண்டு

2.

துள்ளிவரும்  சின்னமுயல் சொல்லுதடி உன்னழகை,

கள்ளியினைத் தேடுதடி நெஞ்சம் - வண்ணக் 

காலழகைப் பாடுதடி மஞ்சம்!

 3.

பின்னுகின்ற சடையாகக் பின்னுகிறாய் என்னுயிரை

மின்னுகின்ற கண்ணழகைக் காட்டி - இன்ப

மீட்டுகின்ற பண்ணழகை யூட்டி

4.

துள்ளிவரும் காளைமனம் சுற்றுமடி உன்னழகை

அள்ளிவரும் ஆசைபல கோடி -  கண்ணே

ஆடி..வரும் மாதமினி வாடி

 5.

பம்பிறைக்கும் நீர்வயலைப் பார்த்துமனம் ஏங்குதடி

வம்பிறைக்கும் உன்செயலை யெண்ணி - நற்றேன்

வாயிறைக்கும் சீர்க்கணக்குப் பண்ணி

6.

அந்தமலை இந்தமலை எந்தமலை ஈடாமோ

சந்தமலைப் பாட்டழகுப் பெண்ணே - மாயத்

தந்திரங்கள் காட்டுமெழில் கண்ணே

7.

முன்னழகு பின்னழகு முட்டுதடி எப்பொழுதும்

என்னழகு என்னழகு ஐயோ - கண்டு
என்றனுயிர் ஆடும்..தையோ தையோ

8.

ஆத்தங்கரைத் தோப்பருகே ஐஞ்சுகாணி நன்வயலில்

நாத்துநட வேண்டுமடி இன்று - ஏக்கம்

நாளுமெனைத் துாண்டுமடி வென்று!

 9.

கட்டுக்குழல் பூமணக்கும்! கம்மாங்கரை தான்மணக்கும்

கட்டழகி காரிகையுன் வரவு - கண்டு

கண்விழித்துப் போகுமடி இரவு

 10.

தாவணியில் உன்னழகு தங்கமணிப் பேரழகு

பாவணியில் நான்புனைந்து தாரேன் - அந்தப்

பட்டுநிலா இன்றுயிலை வாரேன்

மேலும் விளக்கம் பெறக் காணொளியைக் காணவும்
Paavalar Payilarangam - [you Tube]

விரும்பிய பொருளில் இவ்வகைத் தெம்மாங்கில் இரு கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்,

கம்பன் கழகம், பிரான்சு,

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

18.04.2021