samedi 24 octobre 2020
மாறன் பிறந்தான்
பேரன் புகழ்மாறனுக்குத் தாத்தாவின் வாழ்த்துப்பா
மாறன் பிறந்தான்
[கண்ணன் பிறந்தான் என்ற மெட்டு]
மாறன் பிறந்தான் - புகழ்
மாறன் பிறந்தான் - இன்ப
மாமழை பொழியுதடி...
வீரன் பிறந்தான் - தமிழ்
வீரன் பிறந்தான் - இந்த
மேதினி மகிழுதடி...
[மாறன்]
காலை அழகோ - புதுச்
சோலை அழகோ
மாலை மணமோ - அறச்
சாலைக் குணமோ
ஆடும் மயிலோ - தமிழ்
பாடும் குயிலோ - நெஞ்சம்
சூடும் மலரோ - இங்கே
ஈடும் உளதோ?
தேனைக் குடித்தேன் - இன்ப
வானைப் படித்தேன் - பாடி
மானை வடித்தேன் - கண்ணில்
மீனைப் பிடித்தேன்!
[மாறன்]
பாலின் சுவையோ - கவி
நுாலின் சுவையோ?
வேலின் படையோ - திரு
மாலின் நடையோ?
வீசும் குளிரோ - கொஞ்சிப்
பேசும் தளிரோ? - மெல்லக்
கூசுஞ் சிலிர்ப்போ - வண்ணம்
பூசுங் களிப்போ?
காலைப் பிடித்தேன் - அவன்
கையைப் பிடித்தேன்! - வெற்றித்
தோளை வியந்தேன் - இந்த
நாளை மறந்தேன்!
[மாறன்]
வான மழையோ - தமிழ்க்
கான மழையோ?
ஞானக் கருவோ - இன
மான வுருவோ?
கற்றுச் சிறப்பான் - புகழ்
பெற்று நிலைப்பான் - கலை
முற்றும் அளிப்பான் - அருள்
உற்றுக் களிப்பான்!
கொஞ்சுங் குரல்..தேன் - பேரன்
பிஞ்சி விரல்..தேன் - மாறன்
நெஞ்சம் மலர்த்..தேன் - தினம்
தஞ்சம் அடைந்தேன்!
[மாறன்]
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
24.10.2020
vendredi 23 octobre 2020
வெண்பா மேடை - 194
வெண்பா
மேடை - 194
இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னும்செத்து விட்டானோ? - முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரம்அவ னுக்கன்னாய்!
நெஞ்சமே யஞ்சாதே நீ!
[ஓளவையார்
தனிப்பாடல்கள்]
பொல்லார் புழுத்திடலாம்! பொய்யார் கொழுத்திடலாம்!
அல்லார் நிலைமை அழுத்திடலாம்! - தொல்லுலகை
வஞ்சமே கூடி வதைத்திடலாம்! போர்தொடுக்க
நெஞ்சமே யஞ்சாதே நீ!
அல் - இருள்
அல்லார் - இருள் ஆழ்கின்ற
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
" நெஞ்சமே யஞ்சாதே நீ" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
23.10.2020
samedi 17 octobre 2020
புகழ்மாறன் வெல்வே!
என்மகளுக்கு ஆண்மகன் புகழ்மாறன் பிறந்துள்ளான்!
கொள்ளுத் தாத்தாவின் வாழ்த்துப்பா!
புகழ்மாறன் வெல்வே!
எடுப்பு
மாறன் வந்து பிறந்தான் - புகழ்
மாறன் வந்து பிறந்தான்!
[மாறன்]
தொடுப்பு
பேறுகள் பதினாறும் மணக்கத் - தமிழ்ப்
பேரிசை தேனாக இனிக்க...
[மாறன்]
முடிப்பு
கல்விக் கலையுற்றுக் கமழ்வான் - பெருங்
கருணை மனமுற்று மகிழ்வான்!
வெல்வம் நிலைபெற்றுத் திகழ்வான் - நறுஞ்
செம்மைக் குறள்கற்றுப் புகல்வான்!
[மாறன்]
அன்பொடு வாழும்முறை அறிவான் - நல்ல
அருளொடு வளரும்நெறி புரிவான்!
பண்பொடு மலரும்வழி பொழிவான்! - இங்குப்
பணிவொடு தமிழின்புகழ் மொழிவான்!
[மாறன்]
கலைமாமணி
கவிஞர் தே. சனார்த்தனன்
புதுவை - 4
வெண்பா மேடை - 193
கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான்
பொற்கையான் ஆனகதை போதாதோ? - நற்கமல
மன்றலே வாரி மணிவா சலையசைக்கத்
தென்றலே ஏன்வந்தாய் செப்பு?
[கம்பன்
தனிப்பாடல்கள்]
போலித் துறவியரும், பொல்லாத ஆட்சியரும்,
கூலிக் கொலையரும், கொள்ளையரும், - கேலியரும்,
மன்றிலே ஆடுகிறார்! மானம் தனையிழந்து
தென்றலே ஏன்வந்தாய் செப்பு?
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
"தென்றலே ஏன்வந்தாய் செப்பு" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
17.10.2020
mercredi 14 octobre 2020
பாவலர்மணி
வணக்கம்
பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றிபெற்ற பாவலர் இராம. வேல்முருகன் அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.
நல்ல மனமுடையார்! நற்றமிழ்ப் பற்றுடையார்!
வல்ல கவிதை வளமுடையார்! - தொல்லுலகில்
சீர்ப்பா வலர்மணியார்! செவ்வேல் முருகனார்!
சேர்ப்பார் புகழைத் தினம்!
பாவலர்மணி பட்டம் பெற்ற இராம. வேல்முருகன் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன். பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
15.10.2020
vendredi 9 octobre 2020
வெண்பா மேடை - 192
வெண்பா மேடை - 192
வில்லம்பும் சொல்லம்பும் மேதகவே யானாலும்
வில்லம்பில் சொல்லம்பே வீறுடைத்து! - வில்லம்பு
பட்டிருவிற் றென்னை,என் பாட்டம்பு நின்குலத்தைச்
சுட்டெரிக்கும் என்றே துணி!
[கம்பன் தனிப்பாடல்கள்]
முன்வினை என்ன? முடியாச் சுமையென்ன?
பின்வினை என்ன? பெரும்பாவத் - துன்பென்ன?
கட்டுடைக்கும் நோயென்ன? கண்ணன் திருவடிகள்
சுட்டெரிக்கும் என்றே துணி!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
"சுட்டெரிக்கும் என்றே துணி" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழக
samedi 3 octobre 2020
வெண்பா மேடை - 191
வெண்பா மேடை - 191
உருகி உடலுருகி உள்ளீரல் பற்றி
எரிவ[து] அவியாதென் செய்வேன் - வரியரவ
நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே யிட்ட நெருப்பு!
[கம்பரின் மகன் அம்பிகாபதி]
சீர்மேவும் செந்தமிழின் செம்மை யறியாமல்
கார்மேவும் ஆட்சியினர் கட்டுகின்ற - தேர்வுமுறை
பிஞ்சிலே கொல்லும் பிணியாகும்! வஞ்சகமாய்
நெஞ்சிலே யிட்ட நெருப்பு!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
"நெஞ்சிலே யிட்ட நெருப்பு" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
02.10.2020