dimanche 10 avril 2022

மயூர இயல் வெண்பா

 


வெண்பா மேடை - 218

  

ஈற்றடியும் எனைய அடிகளும் எழுத்து ஒத்து வருவது சமநடை வெண்பா. ஈற்றடி எழுத்து மிக்கு, ஏனைய அடிகளின் எழுத்துக் குறைந்து ஒவ்வாது வருவது மயூர வெண்பா. எழுத்தெண்ணிகையில் புள்ளியும் ஆய்தமும், குற்றுகரமும் நீக்கிக் கணக்கிட வேண்டும்.


கனிந்து கமழ்ந்து கவிதை பொழிந்து - 9

நினைந்து நினைந்து நெகிழ்ந்து - தினமும் - 9

வழியைத் தடுத்து வகுத்து வதைத்து - 9

விழியிரண்டுங் கொல்லுமெனை மீட்டு! - 10

 

[பாட்டரசர்]

 

மேலுள்ள வெண்பாவில் ஈற்றடி 10 எழுத்துக்களைப் பெற்று, முதல் மூன்றடிகள் எழுத்து குறைந்து வந்தன.


'மயூர இயல் வெண்பா' ஒன்று எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

10.04.2022

samedi 2 avril 2022

எண்சீர் விருத்தம் - 16

 

விருத்த மேடை - 63

 

எண்சீர் விருத்தம் - 16

 

எழு மா +  ஒரு காய்

 

சிந்தைக் குள்ளே விந்தை புரியும்

   சின்ன பெண்ணே! வண்ணப் பேரழகே!

சந்தம் சிந்தும் சொந்தத் தமிழே!

   தங்கம் மின்னும் அங்கம் கொண்டவளே!

எந்தப் பொழுதும் வந்த கனவும்

   இளமை பொங்க வளமை கூட்டுதடி!

இந்த அழகைத் தந்த இறையை

   என்றும் தொழுது நன்றி உரைத்திடுவேன்!

 

[பாட்டரசர்]

 

இந்தப் பாடல் நான் புதியதாக உருவாக்கிய வாய்பாடாகும்.  ஓரடியில் ஏழு மாச்சீர்களும் ஒரு காய்ச்சீரும் வரும். ஒவ்வோர் அரையடியும் பொழிப்பெதுகை பெறும்.[சிந்தை -விந்தை] [சின்ன-வண்ண]  ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகையை ஏற்கும்

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
24.03.2022

எண்சீர் விருத்தம் - 17

 


விருத்த மேடை - 64

 

எண்சீர் விருத்தம் - 17

 

எழு மா +  ஒரு காய்

 

சுற்றிச் சுற்றிச் சுழலு நினைவாற்

   துாக்க மின்றித் துவளு மென்னுயிரே!

முற்றி முற்றி முட்டும் விதியால்  

   மூச்சுக் குள்ளே மோதுந் துயரலையே!

பற்றிப் பற்றி யுண்ணும் புழுவாய்ப்

   பாவ மேறிப் பாதை தடையுறுமே!

ஒற்றி யொற்றி யுற்ற பழிகள்

   ஓதி யோதி நின்றால் விட்டிடுமோ?

 

[பாட்டரசர்]

 

ஓரடியில் ஏழு மாச்சீர்களும் ஒரு காய்ச்சீரும் வரவேண்டும். ஒன்றைந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகையை ஏற்க வேண்டும் 

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
02.04.2022


தொல்காப்பியர் கழகம், பிரான்சு
02.04.2022