பாட்டரசரின் பெருந்தேர் ஓவியக்கவிதை
இத்தேரின் வடிவமைப்பு என்னால் உருவாக்கப்பட்டதாகும். முன்னோர் வடிவமைத்த தேர்கள் பதினாறையும் விட இத்தேர் பெரியதாகும். இத்தேரின் உயரம் இருபத்தைந்து கட்டங்களைக் கொண்டது. தேரின் சக்கரங்கள் இரண்டு குறட்பாக்களில் அமைந்துள்ளன. இரண்டு குறட்பாவின் ஈற்றெழுத்தும், தேர்ப்பாடலின் முதலெழுத்தும் ஈற்றெழுத்தும் ஒன்றி அமைகின்றன.
இரண்டு சக்கரங்களில் அமைந்த குறள்வெண்பாக்கள், சக்கரத்தின் நடுவில் தொடங்கி உள்வட்டத்தைச் சுற்றிப் பின் மேல் வட்டத்தைச் சுற்றித் தேரின் தொடக்கவெழுத்தில் [பு] நிறைவுறும்.
கலிவெண்பாவில் அமைந்த தேரின் பாடல் தேரின் அடியில் தொடங்கி இடவலமாகச் சுற்றிச்சுற்றி மேலேறி உச்சியிலிருந்து இறங்கினால் நிறைவுறும்.
தேரின் மேற்றட்டில் அமைந்த குறட்பாவில் என்னுடைய வேண்டுகோள் உள்ளதைக் காண்க.
கலிவெண்பா
புதுப்பார் படைக்கப் புனை..பண்! தமிழே!
முதுமை கமழு மரபே! - புதுமை
வழியே! படரும் வளமே! மதுர
மொழியே! உலகின் முதலே! - பொழிலே!
உயர்வை யளிக்கு மொளியே! இறையே!
வியத்திருவே! வெல்லு மறமே! - இயற்கை
யெழிலே! மிகுபசுமை யின்பமே! தாயே!
அழகே! அமுதே! அருளே! - பழமையைக்
காத்திடும் வாழ்வே! தொழுங்கலையே! வேரடர்ந்து
பூத்த கொடியே! புகழே!கண் - கோத்தினிக்கும்
மாண்பே! நனிபொற்பே! வண்ணக் கவிவெற்பே!
கேண்மை யுழவே! செழுமையே! - மேன்மையே!
வான்மழையே! சிந்தை மணக்குந் தகையே..நீ
தேன்கல மே!பண்ணே நல்கியென் - னுான்வாழ்
மலர்மணமே! புண்ணியமே! ஓத வுளமே
நலமே மிகுமே! பெரும்பேர் - நிலமே!
கதிரே! கவிவனமே! பாகுறுமின் யாழே!
நதியே! நயமே! கலைநற்கா வே!இன்பஞ்
சேர்..தாயே! தா.. சாத னம்!வழங்கும் கண்ணிமையால்
சீர்மைமனம்! தேறிட வை!நன் மதுவே!
புதுவைமண் சாற்றும் புலமை - பொதுமை
பதிய மொழிக படைப்பு!
சக்கரத்தில் அமைந்த குறள்
1.
பொன்னின் புதுப்பொலி வே!பூந்தேன் காரிகையே!
கன்னித் தமிழே..நீ காப்பு!
2.
தங்கத் தமிழே! தவமொழியே! செங்காந்தல்
பொங்கும் புகழே!நீ காப்பு!
தேரின் மேற்றட்டில் அமைந்த குறள்
கனிந்த தமிழே! கனக மணியே!
இனமே மகிழ வெழு!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.08.2019