கேட்டலும்
கிளத்தலும்
பல்
+திறம் = பற்றிறம் என்று புணருமா? இலக்கணக் இலக்கியக் குறிப்புடன் விளக்கம் அளிக்கவும்.
கவிமாமணி
சேலம் பாலா
--------------------------------------------------------------------------------------------------------------------------
பல,
சில என்னும் சொற்கள் நிலைமொழியாக அமையும்போது இந்தச் சொற்களின் ஈற்றிலுள்ள அகரம் கெட்டும்
புணர்வதுண்டு. பல, சில என்னும் சொற்களின் ஈற்றில் நிற்கும் அகரம் மறைந்துவிட, எஞ்சி
நிற்கும் 'லகர' மெய்யுடன் வருமொழி முதலில் உள்ள ஒலி வந்து சேரும். இப்படிச் சேரும்போது,
சில சமயங்களில் இயல்பாகவும், சில சமயங்களில் விகாரப்பட்டும் புணரும்.
பல்கலைக்
கழகம், பல்பொருள் அங்காடி என்னும் தொடர்களில் நிலைமொழியாகிய பல என்னும் சொல் அகரம்
கெட்டுப் பல் என்று நின்ற போதிலும் பல என்னும்
பொருளே தருகின்றது. பல் என்னும் சொல்லின் முன்
வல்லினம் வந்து புணரும்போது பெரும்பாலும் இயல்பாகவே புணரும்.
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் [திருப்பாவை - 18]
பாடகமே
என்றனைய பல்கலனும் யாமணிவோம் [திருப்பாவை - 27]
பல்கால்,
பல்கலன் என்று இயல்பாக உள்ளதை இலக்கியங்களில் கண்டு தெளிவுறலாம்.
அல்வழியில்
தனிக்குற்றெழுத்தின் பின் நின்ற ல்,ள், என்னும் மெய்கள், வருமொழியில் தகரம் என்ற வல்லினம் வர ஆய்தமாகத் திரிதலையும் பெறும்.
குறில்வழி
'லள' த்'த' அணையின், ஆய்தம்
ஆகவும்
பெறுாஉம் அல்வழி யானே [ நன்னுால் 228]
பல்+துளி
= பஃறுளி
பல்+தொடை
= பஃறொடை
பல்+தாழிசை
= பஃறாழிசை
சில்+தாழிசை
= சிஃறாழிசை
அல்+திணை
= அஃறிணை என்று வருவனபோல்
பல்+திறம்
= பஃறிறம் என்று புணர்ந்து எழுதுவதே இலக்கிய மரபாகும்.
பல
+ மலர் = பலமலர் என்று புணர்வதே பெரும்பான்மை
எனினும் சொல்லின் ஈற்றில் உள்ள அகரம் கெட்டு எஞ்சி நிற்கும் பல் என்னும் சொல்லுடன் மலர் என்னும் சொல் வந்து சேரும்போது பன்மலர் என்று
புணர்வதே இலக்கிய வழக்காகும். இவ்வாறே பலமுறை என்பது பன்முறை என்றும் பலமொழி என்பது
பன்மொழி என்றும் திரிவதைக் காணலாம். நிலைமொழி ஈற்றில் 'லகரமெய்' நிற்கும்போது வருமொழி
முதலில் மகரமெய் வந்தால் 'லகரமெய்' 'றன்னகர'
மெய்யாகத் திரியும் என்னும் விதிக்கேற்ப இவை
புணர்ந்துள்ளன. பல + நாள் = பன்னாள் என்றும்
சில + நாள் = சின்னாள் என்றும் புணரும். இக்கால
வழக்கில் பலமுறை, பலமொழி, பலநாள், சிலநாள் என்று வழங்குவதே பெரும்பான்மையாகும்.
பல என்னும் சொல் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் அமையும்போது நான்கு வகையாகப் புணரும்.
பலசில
எனும்இவை, தம்முன் தாம்வரின்
இயல்பும்
மிகலும், அகரம் ஏக
லகரம்
றகரம் ஆகலும், பிறவரின்
அகரம்
விகற்பம் ஆகலும் உளபிற [நன்னுால் - 170]
1.
பல, சில என்ற இரண்டு சொற்களும் தமக்கு முன் தாம் வரின் இயல்பாகும்.
பல
+ பல = பலபல
சில
+ சில = சிலசில
2.
மிக்கு வரும்.
பல
+ பல = பலப்பல
சில
+ சில = சிலச்சில
3.
ஈற்றில் உள்ள அ என்பது கெட்டு ல் என்பது ற் ஆகத் திரியும்
பல
+ பல = பற்பல
சில
+ சில = சிற்சில
4. இவற்றிற்கு முன் வேறு சொற்கள் வரின் அ உன்ற எழுத்து நீங்கலும் நிற்றலும் பெறும்.
பல
+ கலை = பலகலை, பல்கலை
சில
+ நாள் = சிலநாள், சின்னாள்
பல
+ ஆயம் = பலவாயம், பல்லாயம்
சில
+ வளை = சிலவளை, சில்வளை
பிற
என்றதால், பல்பல, சில்சில என அ கெட்டு ற் ஆகாமல் வருதலும் உண்டு. பல்லபல, சில்லசில என
மிகுந்து வருவதும் உண்டு. செய்யுட்கண் ஒரோவழிப் பல என்பதன் முன்னர்ச் சில என்பது வந்துழி
இறுதி அகரம் நீண்டு ஓர் அகரமும் மகர ஒற்றும் பெற்று முடிதலும் உண்டு. [பலாஅம் சிலாஅம்]
அகரமின்றி வருதலும் உண்டு [பலாம்சிலாம்] பலசில
என்னும் பொருளுடையது.
இலக்கண
நுால்களில் பல சில குறித்து வந்துள்ள நுாற்பாக்கள்
தொடரல்
இறுதி தம்முன் தாம்வரின்
லகரம்
றகரவெற்று ஆதலும் உரித்தே [தொல் - 214]
வல்லெழுத்து
இயற்கை உறழத் தோன்றம் [தொல் - 215]
பலசில
எனும்இவை, தம்முன் தாம்வரின்
இயல்பும்
மிகலும், அகரம் ஏக
லகரம்
றகரம் ஆகலும், பிறவரின்
அகரம்
விகற்பம் ஆகலும் உளபிற [ இலக்கண விளக்கம் - 88]
சிலபல
தம்மொடு சேர்புளி இயல்பும்
முதல்மெய்க்
கடைமெய் மிகலும் ஈறுபோய்
லறவ்
ஆதலும் லா ஆதலுமாம்
பிறவரின்
அகரம் நிற்றலும் கெடலுமாம் [தொன்னுால் விளக்கம் - 31]
பலசில
எனும்இவை, தம்முன் தாம்வரின்
இயல்பும்
மிகலும், அகரம் ஏக
லகரம்
றகரம் ஆகலும், பிறவரின்
அகரம்
விகற்பம் ஆகலும் உளபிற [ முத்துவீரியம் -
244]
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன்
கழகம் பிரான்சு
உலகத்
தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.01.2018