dimanche 2 septembre 2012

குளிர்தமிழ் நிலையம் மு.வ




எடுப்பு

சிந்தனைச் செல்வர் முனைவர் மு.! - அவர்
சீரினைச் செப்பத் தமிழே நீ..வா!
                                                                                                (சிந்தனைச்)
தொடுப்பு

வந்தனை செய்வோம்! குயிலே கூவாய்! - அவர்
வண்டமிழ் உண்போம் இனிக்கும் பாவாய்!
                                                                                                (சிந்தனைச்)
முடிப்பு

மாணவர் மனங்களில் மகிழ்வுற வாழ்பவர்! - என்றும்
மாண்புடைக் குறள்வழி மணமுற ஆள்பவர்!
தேனமர் இயற்கையைத் தெளிவுற ஆய்ந்தவர்! - இன்பத்
தென்மொழித் தொன்மையுள் திறமுறத் தோய்ந்தவர்!
                                                                                                (சிந்தனைச்)

தமிழரின் அருமையைத் தழைத்திடக் காட்டினார்! - நன்றே
தன்மொழிப் பெருமையைச் சிறந்திடத் தீட்டினார்!
அமிழ்தென இனிமையை அருந்திடச் சூட்டினார்! - வென்றே
ஆய்வினில் புதுமையை அழகுடன் பூட்டினார்!
                                                                                                (சிந்தனைச்)

படித்திடப் படித்திடப் பயன்பல விளையுமே! - மு.
படைத்தவை நமதினப் பகைவரைக் களையுமே!
குடித்திடக் குடித்திட மனமகிழ்ந் தலையுமே! - மு.
கொடுத்தவை கொழித்திடும் குளிர்தமிழ் நிலையமே!
                                                                                                (சிந்தனைச்)

2 commentaires:


  1. மொழியறிஞர் மு.வ. மொழிந்தசொல் ஏற்று
    வழியறிந்து வாழ்ந்தால் வளமோங்கும்! - விழியிருந்தும்
    வீழ்கின்றோம்! வெல்லுதமிழ் மேன்மையைக் காக்காமல்
    தாழ்கின்றோம் மாண்பைத் தகா்த்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கொட்டிக் கிடக்கின்ற கோல மணிக்குவியல்!
      கட்டிக் கிடக்கின்ற கற்கண்டு! - வெட்டி
      எடுக்கின்ற பொன்னொக்கும்! இன்.மு.வ. நுால்கள்!
      கொடுக்கின்ற பற்றினைக் கொள்!

      Supprimer