mercredi 29 novembre 2023

விருத்த மேடை - 98

 


விருத்த மேடை - 98

 

சந்தக் கலிவிருத்தம் - 15

 

தந்த+தந்ததன+தந்தன +தானா

[3+5+4+4 சந்த மாத்திரை]

 

நஞ்சு மஞ்சு[ம்]விழி நாகியர் நாண

வஞ்சி யஞ்சுமிடை மங்கைய[ர்] வானத்[து]

அஞ்சொ லின்சுவைய ரம்பைய ராடிப்

பஞ்ச மஞ்சிவணு மின்னிசை பாட

 

[கம்பன், யுத்த. இராவணன் வானரத்தானை - 4]

 

தந்த+தந்ததன+தந்தன +தானா என்ற அமைப்புடைய பாடல் இது. முதற்சீர் 3 மாத்திரை. இரண்டாம் சீர் 5 மாத்திரை. முன்றாம் சீரும் நான்காம் சீரும் 4 மத்திரை.

 

முதல் சீராகத் தான, தாந்த, தனன என்பனவும் வரும். இரண்டாம் சீராகத் தானதன  என்பதுவும் வரும். மூன்றாம் சீராகத் தானன என்பதும் வரும். இறுதிச் சீராகத் தான, தந்த, தந்தா என்பனவும் இவை இறுதியில் ஒற்றுப்பெற்றனவும் வரும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.

 

சின்ன கண்களடி சிந்தனை கூடும்!  

என்ன இன்பமடி என்மன மாடும்!

சொன்ன சொற்களடி தொன்மொழி சூடும்!

கன்ன லிட்டதடி கற்பனை யூறும்!  

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

29.11.2023

 

lundi 27 novembre 2023

ஆசைக் கடலில்

 


ஆசைக் கடலில்....

 

ஆசைக் கடலில் நீந்துகிற

       ஆட்டம் போதும்! செந்தமிழாம்

ஓசைக் கடலில் மனமுழுகி

       ஒளிரச் செய்வாய் திருமாலே!

மீசை முறுக்கி வீண்சண்டை

       வினைகள் போதும்! உள்ளொன்றிப்

பூசை அறையில் தவநெறியைப்

       புரியச் செய்வாய் திருமாலே!

 

அகத்தை யுடைத்தே எண்ணங்கள்

       அலைதல் போதும்! பற்றற்றுச்

சுகத்தைக் காணும் நல்லமைதி

       சூழச் செய்வாய் திருமாலே!

முகத்தைப் பார்த்தே உயிர்சொக்கி

       முணங்கல் போதும்! கவிபாடிச்

செகத்தை வெல்லும் உயர்புலமை

       செழிக்கச் செய்வாய் திருமாலே!

 

அதையும் இதையும் அடைந்திடவே

       ஆடல் போதும்! பழியான

எதையும் புரியா நெஞ்சத்தை

       எனக்குக் தருவாய் திருமாலே!

சதையும் எலும்பும் அழகென்று

       சாற்றல் போதும்! மண்ணுக்குள்

புதையும் முன்னே ஞானவொளி

       பொலியச் செய்வாய் திருமாலே!

 

மண்ணும் பொன்னும் பெரிதென்ற

       மயக்கம் போதும்! வண்டமிழின்

பண்ணும் பாட்டும் வாழ்வென்று

       பணியச் செய்வாய் திருமாலே!

பெண்ணும் கண்ணும் போதையெனப்

       பிதற்றல் போதும்! மேலுள்ள

விண்ணும் என்னுள் ஆட்பட்டு

       மின்னச் செய்வாய் திருமாலே!

 

நான்றான் நான்றான் என்றெண்ணி

       நவிலல் போதும்! தற்பெருமை

ஏன்றான் ஏன்றான் தெளிவுற்றே

       இயங்கச் செய்வாய் திருமாலே!

வான்றான் வான்றான் காதலென

       வாழ்தல் போதும்! இறையொளிதான்

தேன்றான் தேன்றான் சுவையூறித்

       திளைக்கச் செய்வாய் திருமாலே!

 

பொய்யே புழுத்துப் புரளுகிற

       புன்மை போதும்! எந்நாளும்

மெய்யே பூத்து மணக்கின்ற

       மேன்மை செய்வாய் திருமாலே!

அய்யே யென்று பிறர்சொல்லும்

       அல்லல் போதும்! விளைந்தோங்கும்

செய்யே போன்று நலமீயச்

       செம்மை செய்வாய் திருமாலே!

 

அறிவே யின்றி வினையாற்றி

       அழிதல் போதும்! நல்லோரின்

நெறியே உணர்ந்து கைப்பற்றி

       நிறைவைத் தருவாய் திருமாலே!

வெறியே கொண்டு தள்ளாடும்

       வேட்கை போதும்! உடலுற்ற

பொறியே யடங்கி தவமோங்கும்

       புத்தி தருவாய் திருமாலே!

 

கள்ளம் நிறைந்து வாழ்ந்திட்ட

       காலம் போதும்! மெய்ந்நெறியே

உள்ளம் நிறைந்து மிளிர்கின்ற

       உயர்வைத் தருவாய் திருமாலே!

துள்ளும் இளமைப் பருவத்தின்

       துன்பம் போதும்! சிந்தைனையுள்

பள்ளம் குள்ளம் இல்லாமல்

       பசுமை தருவாய் திருமாலே!

 

நம்பி வந்தோர்க் கின்னலிடும்

       நாசம் போதும்! எம்மக்கள்

தம்பி நீயே என்றோதும்

       தன்மை தருவாய் திருமாலே!

தும்பி வாலில் நுாலிட்ட

       துன்பம் போதும்! இனிவாழ்வில்

இம்மி பாவம் இல்லாமல்

       இயங்கச் செய்வாய் திருமாலே!

 

புறமே பேசித் திரிகின்ற

       போக்குப் போதும்! தமிழ்தந்த

அறமே பேசி யொளிர்கின்ற

       அழகே தருவாய் திருமாலே!

திறமே பேசி உழல்கின்ற

       செய்கை போதும்! வரிப்புலியின்

மறமே பேசி வெல்கின்ற

       வன்மை தருவாய் திருமாலே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

27.11.2023

 

samedi 18 novembre 2023

காதலிலே அவள் குழந்தை

 



காதலிலே அவள் குழந்தை

.

காதலிலே - அவள்

குழந்தை!

.

கையில் இருப்பாள்!

மடியில் கிடப்பாள்!

மெல்ல சிரிப்பாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

கழுத்தைக்

கட்டிப் பிடிப்பாள்!

மார்பில்

ஒட்டிக் கிடப்பாள்!

சுவையைக்

கொட்டிக் கொடுப்பாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

கெஞ்சுவாள்!

கொஞ்சுவாள்!

விஞ்சுவாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

என்..கை

கோத்து நடப்பாள்!

புன்னகை

பூத்து மணப்பாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

உப்பு மூட்டை சுமப்பேன் - என்

உயிருள் அவளைச் சுமப்பேன்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

சிணுங்கு மொழியாள் - எனை

விழுங்கு விழியால்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

அடம் பிடிப்பாள் - ஆசை

வடம் பிடிப்பாள் - நெஞ்சுள்

இடம் பிடிப்பாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

கண்ணழகும்

கழுத்தழகும்

எனை மயக்கும்!

.

மூக்கழகும்

முடியழகும்

எனை இயக்கும்!

.

காலழகும்

கையழகும்

கவி கொடுக்கும்!

.

பல்லழகும்

சொல்லழகும்

மலர் படைக்கும்!

.

தோளழகும்

துணியழகும்

போதை விளைக்கும்!

.

தொடையழகும்

நடையழகும்

துயர் துடைக்கும்!

.

தொட்டவிடம்

பட்டவிடம்

இன்பம் தழைக்கும்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

சொல்லிய வண்ணம்

நடப்பாள் - பாடம்

படிப்பாள்! - வந்து

கடிப்பாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

வரவால்

குலஞ்செழிக்கும்!

வடிவால்

உளங்கொழிக்கும்!

காதலிலே - அவள்

குழந்தை

.

பார்க்கப் பார்க்கப்

படரும் இனிமை!

பாவை எழிலைப்

பாடும் என் புலமை!

.

கிள்ளுவாள்

தொல்லை பண்ணுவாள்!

அள்ளிக் கொள்ளுவேன்!

பள்ளி கொள்ளுவேன்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
18.11.2023