கலித்துறை மேடை - 10
கலிமண்டிலத்துறை
அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவது. இப்பாடலில் யாதோர் அடியை எடுத்து முதல் நடு கடையாக உச்சரிப்பினும் ஓசையும் பொருளும் மாறுபடாது அமையும்.
கண்ணே! மணியே! கவிதை தருவாய் களித்திடவே!
விண்ணே! நிலவே! மிளிரு மழகே! வியனருளே!
மண்ணே மணக்கும் மலரே! மயக்கு மதுக்குடமே!
பெண்ணே துதிக்கும் பெருமை யுடைய பெருந்தவமே!
[பாட்டரசர்] 25.12.2023
மேலுள்ள கட்டளைக் கலித்துறையின் அடிகளை இடம் மாற்றிப் படித்தாலும் யாப்பும் பொருளும் அமையும். இவ்வாறு அடிமறியாக அமையும் கலித்துறைகளைக் கலிமண்டிலத் துறை என்று வழங்குவார்.
ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.5 ஆம் சீர்களில் மோனை.
முதல் நான்கு சீர்களில் வெண்டளை அமைந்திருக்கும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டாளை அமைய வேண்டியதில்லை
ஐந்தாம் சீர் விளங்காயாக அமைய வேண்டும்.
முதல் நான்கு சீர்களில் ஈரசை சீர்களும், மாங்காய்ச் சீர்களும் வரும். முதல் நான்கு சீர்களில் விளங்காய்ச் சீர் வராது.
பாடல் ஏகாரத்தில் முடிய வேண்டும்.
நேரசையில் தொடங்கினால் ஓரடியில் 16 எழுத்துக்களும் நிரையசையில் தொடங்கினால் 17 எழுத்துக்களும் பெறும்.
மேற்கண்ட கலிமண்டிலத் துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
24.03.2024