jeudi 30 mai 2019

கண்ணன் என் காதலன்!


கண்ணன் என் காதலன்!
  
1.
பரிமே லழகா! பரம்பொருளே! பாடும்
வரிமேல் அமர்வாய் மகிழ்ந்து!
 
2.
பரிமேல் வருபவனே! பாவலன்..என் சொற்கள்
அரிமேல் தருவாய் அணிந்து!
 
3.
ஆற்றில் குளிப்பவனே! ஆயனே! செந்தமிழ்
ஊற்றில் குளிப்பாய் உவந்து!
 
4.
கண்ணழகு கள்ளா! கவிஞன்..என் நெஞ்சத்துள்
பண்ணழகு ஈவாய் பழுத்து!
 
5.
கரிமனம் நீங்கிக் கலையுற்றேன்! கண்ணா!
விரிமனம் தந்தாய் விழைந்து!
 
6.
காதல் பெருகுதடா! கண்ணா! இசைக்கின்ற
ஊதல் மணக்கும் உளத்து!
 
7.
பாற்கடலில் வாழும் பரம்பொருளே! என்னினிய
நுாற்கடலில் வாழ..நீ நோக்கு!
 
8.
ஓங்கி அளந்தவனே! உன்றன் அடிதொழுதேன்!
தாங்கி அருள்வாய் தமிழ்!
 
9.
பள்ளியுறு மாயவனே! பாடும் கவியமுதை
அள்ளியிடு! நீயே அரண்!
 
10.
பாடி வருகின்றேன் பார்த்திபனே! உன்னருளை
நாடி வருகின்றேன் நல்கு!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.05.2019

சிலேடை வெண்பாசிலேடை வெண்பா

நாட்டுக்கொடியும் வெற்றிலைக்கொடியும்

 
கோல்பற்றும்! கூட்டமுறும்! கோல வணக்கமுறும்!
தோள்பற்றும்! காற்றில் துணிந்தாடும்! - சூல்காணும்!
செம்மையுறும் சீர்காட்டும்! நம்நாட்டு நற்கொடியும்
அம்மையுறும் வெற்றிலையும் ஆம்!
 
நாட்டுக்கொடி
 
கோலில் ஏற்றப்படும். மேல் ஏற்றும்பொழுது மக்கள் கூடி நின்று நாட்டுப்பண் பாடி வணங்குவர். நம் தோள்களில் ஏந்திச் செல்வோம். காற்றில் அழகாய் அசைந்து பறக்கும். மலை உச்சியில் பறந்து சூல்கொண்ட மேகத்தைத் தழுவும். [மழையில் நனையும்]. அதன் வண்ணம், சின்னம் நாட்டின் சிறப்பை உணர்த்தும்.
 
வெற்றிலைக்கொடி
 
கோலைச் சுற்றி வளரும். நிகழ்வுகளில் கூடி அமர்ந்து வெற்றிலை போடுவார். இறைவனுக்குப் படைக்கப்படும். அடிக்கிக் கட்டப்பட்டுத் தோள்களில் துாக்கி வருவார். காற்றில் அசைந்து ஆடும். பெண்ணுக்கு நடக்கும் சூல் நிகழ்வில் இடம்பெறும். வெற்றிலை போட்டவர் நாக்குச் சிவப்பு நிறத்தை ஏற்கும்.
 
எனவே, நாட்டின் கொடியும், அன்னையர் விரும்பும் வெற்றிலையும் நிகராகும்.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.05.2019

vendredi 24 mai 2019

சிலேடை வெண்பா
சிலேடை வெண்பா
 
கலிப்பாவும் கண்ணனும்
 
பத்துருவும், பண்ணிசையும், பாக்கடலும், பாடுதலும்,
சிற்றுருவும், சீருடைய பேருருவும், - கொச்சகமும்,
பற்றுடையோர் பற்றலும், உற்ற கலிநிகராய்ப்
பொற்புடைய கண்ணனைப் போற்று!
 
கலிப்பா
 
பத்துவகைப்படும் [1.கலிவெண்பா, 2.வெண்கலிப்பா, 3.மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, 4.பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 5.சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 6.தரவிணைக் கொச்சகக் கலிப்பா, 7.தரவு கொச்சகக் கலிப்பா, 8.நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா, 9.அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, 10. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா]. இசைப்பா வகையைச் சாரும் [தாழிசையைப் பெறும்]. அம்போதரங்கம் என்ற உறுப்பை ஏற்கும் [தரங்கம் என்றால் அலை. கடல் அலைகள் கரையை அடைகையில் சுருங்குவதுபோல் இவ்வுறுப்பும் முதலில் அளவடிகளாலும், பின் சிந்தடி குறளடிகளாலும் குறைந்து வருவதால் அம்போதரங்கம் என்ற பெயர் பெற்றது]. போற்றும் மரபைக் கொள்ளும். பேரெண், சிற்றெண் என்ற உறுப்புகளைப் காணும். கொச்சகக் கலிப்பாவில் ஐந்து வகைகள் உள்ளன. வல்ல தமிழ்ப்புலமை கொண்டோர் இவ்வகையைச் சிறப்பாகப் பாடுவா்.
 
கண்ணன்
 
பத்துத் தோற்றரவை உடையவன். புல்லாங்குழல் வாணன். [பா - பாம்பு] பாற்கடலில் பாம்பணையில் துயில்பவன். ஆழ்வார்களால் போற்றிப் பாடப்பட்டவன், அடியார்களால் புகழ்ந்து பாடப்படுபவன். வாமனனாய் வந்தவன், நெடியவனாய் உலகை அளந்தவன். [கொச்சகம் - சேலை மடிப்பு] பாஞ்சாலிக்குச் சேலை அளித்துக் காத்தவன். பெண்ணுருக் கொண்டு சேலை அணிந்தவன். தன்னைச் சரணடைந்த அடியார்களைப் பற்றிக் காப்பவன்.
 
எனவே, தமிழன்னை உற்ற கலிப்பாவிற்குப் பொற்புடைய கண்ணனை ஒப்பாகப் போற்றுக.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
24.05.2019

jeudi 23 mai 2019

சிலேடை வெண்பாசிலேடை வெண்பா
 
ஆண்மயிலும் பெண்விழியும்
 
கண்ணழகு காதலிடும்! காரழகு தோகையிடும்!
மண்ணழகுச் சோலையுறும்! வண்ணமிகும்! - தண்டமுறும்!
பண்ணழகுச் சந்தமிடும்! பார்..கொத்தும்! பொன்மயிலை
வண்டழகுக் கண்ணை வழங்கு!
 
ஆண்மயில்
 
தோகையின் மீது ஆசையுறுவோம். மழைதரும் கார்மேகத்தைக் கண்டு தோகை விரித்தாடும். மண்ணுக்கு அழகு தருகின்ற மலர்ச்சோலையில் வாழும். வண்ணம் பல கொண்டிருக்கும். வணங்கப்படும் உயர்வை பெற்றது. புலவர்களின் பாடல்களுக்குக் கருப்பொருளாகும்.[திருப்புகழ்]. உணவைக் கொத்தித் தின்னும்.
 
பெண்விழி
 
காதலை விளைக்கும். தோகை, மை ஏற்கும். மலர்க்கண் என்ற உவமையை கொள்ளும். பல வண்ணங்கள் பூசப்பட்டு அழகேந்தும். [காதல் வண்ணங்கள் நல்கும்] இமைகளை மூடி இறைவனை ஆழ்ந்து தொழும். காதல் பாடல்களுக்குக் கருவாகும். பார்வையால் தாக்கும். [வேல்விழி, அம்புவிழி]
 
எனவே, பொன்னழகு ஆண்மயிலும் வண்டழகுப் பெண்விழியும் ஒன்றென வழங்கு.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
23.05.2019

mercredi 22 mai 2019

சிலேடை வெண்பா
சிலேடை வெண்பா
 
வஞ்சிப்பாவும் சோலையும்
 
பூவுறும்! துாங்கலுறும்! பொங்கும் புலமையுறும்!
நாவுறும் நற்கனிகள்! நீழலுறும்! - ஏவுறும்!
காய்தாங்கும்! மாவேலி காணும்! பொழிலுக்குத்
தாய்தாங்கும் வஞ்சி சமம்!
 
வஞ்சிப்பா
 
பூச்சீர்களைப் பெறும். துாங்கலோசையை ஏற்கும். இருசீர்களிலும் முச்சீர்களிலும் அமைவதால் புலமை பெருகும். கனிச்சீர்கள் காக்கும் [வஞ்சி உரிச்சீர் கனியாகும்]. நிழல் சீர்களைக் கொள்ளும். ஏகாரத்தில் நிறைவுறும். காய்ச்சீர்களைத் போற்றும். அடியின் ஈற்றில் மாச்சீர் வருவதில்லை. [மாவுக்கு வேலியிடும்]
 
சோலை
 
பூக்களைப் பூத்தாடும். தொங்குகின்ற விழுதுகளைப் பெற்றிருக்கும். உறங்கி ஓய்வெடுக்க இடமளிக்கும். கவிபாடப் புலமையை வழங்கும். காய் கனிகளைக் கொண்டிருக்கும். குளிர்ந்த நிழலைக் கொடுக்கும். அம்புடன் வேடர்கள் வருவார்கள். நீண்ட வேலியை ஏற்றிருக்கும்.
 
எனவே, பூமித்தாய் தாங்கும் சோலைக்குப் பூந்தமிழ்த்தாய் தாங்கும் வஞ்சிப்பா சமமாகும்.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
20.05.2019

சிலேடை வெண்பா
சிலேடை வெண்பா
 
ஆசிரியப்பாவும் வானும்
 
எல்லை இதற்கில்லை! ஏந்தும் இயற்கையெழில்!
தொல்லை இருப்பாகும்! ஒள்ளொளியை - நல்கும்பேர்
உற்றிடும்! மேன்மைத்தாள் பெற்றிடும்! ஓங்கிடும்வான்
கற்றிடும் ஆசிரியம் காண்!
 
தொல்லை - பழமை
 
ஆசிரியப்பா
 
அடி வரையறை இல்லை. முதலில் பிறந்த இயற்சீர்களைப் பெற்றுவரும். பழமைப் பாவகையாகும். [சங்க நுால்கள் பல ஆசிரியப்பாவால் அமைந்துள்ளன]. ஆசிரியர் அறிவொளியை அளிப்பவர். ஆசிரியர் என்ற பெயருடன் பா இணைந்து பெயர் அமைந்துள்ளது. [வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவலால் ஒளிவீசும் பெயரை ஏற்றுள்ளது] [தாள் - அடி] அனைத்து அடிகளையும் பெற்றுவரும். [பெரும்பான்மை அளவடியைப் பெற்றுவரும் இப்பாவில் நெடிலடியும், கழிநெடிலடியும் வருவதுண்டு]
 
வானம்
 
எல்லா இல்லை. இயற்கையழகால் ஓங்கி ஒளிர்வது. என்றும் இருப்பது. கதிரவனின் கதிர்களால் மிளிர்வது. திருமாலின் ஒரு திருவடி மண்ணை அளந்தது. மற்றொரு திருவடி விண்ணை அளந்து.
 
எனவே, நாம் கற்கின்ற ஆசிரியப்பாவும் ஓங்கி ஒளிரும் வானமும் நிகரெனக் காண்க.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
22.05.2019

lundi 20 mai 2019

சிலேடை வெண்பா
சிலேடை வெண்பா
 
வெண்பாவும் கள்ளும்
 
வெண்மையினால், ஏறுகின்ற மேன்மையினால், கட்டலினால்,
தண்மையினால், போதையினால், சாற்றலினால், - உண்மையினால்
கூடலினால், கூத்தாடிக் குன்றலினால், வெண்பா..கள்
பாடலினால் இங்கிணையாம் பார்!
 
வெண்பா
 
பெயரால் வெண்மையைப் பெற்றது, அன்றுமுதல் இன்றுவரை யாப்புலகில் முதன்மை கொண்டது, தண்டமிழின் வெண்டளையால் பின்னப்படுவது, கற்றோரை மயக்கமுறச் செய்வது, [சாற்றல் - செப்பல்] செப்பலோசையை உடையது, நீதிநெறி நுால்களை உற்றது, தமிழ்க்கூடலில் ஓங்கி ஒலிப்பது, நாடகத்தில் இடம்பெறுவது, ஈற்றடி குன்றுவது, திறனுடைய புலவோர் பாடுவது.
 
கள்ளு
 
வெள்ளைநிறங் கொண்டது. மரமேறி இறக்குவது. பாளையைக் கட்டிச் சுரப்பது. குளிர்ச்சி தருவது. போதை தருவது. மனத்தில் உள்ள உண்மையை மயக்கத்தில் பேசச்செய்யும். குடிக்கக் கூடுவார். குடித்துக் கூத்திடுவார். நிலை குன்றுவார். கத்திப் பாடுவார்.
 
எனவே வெண்பாவை, கள்ளை இங்கிணையாக உரைத்துள்ளேன். படித்துப்பார்.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
19.05.2019

samedi 18 mai 2019

சிலேடை வெண்பாசிலேடை வெண்பா
 
நாயும் பூட்டும்
 
வன்வாயில் பற்றும்! மனைகாக்கும்! மேல்தொங்கும்!
நன்வாயில் நன்கேகும்! கோல்கொள்ளும்! - தன்கழுத்தில்
சங்கிலி தானணியும்! கூடேற்கும்! கை..இழுக்கும்!
இங்குநாய் பூட்டுக்[கு] இணை!
 
நாய்
 
வாயினால் கௌவும், வீட்டினைக் காக்கும். நம்முடைய மார்பில் கால்களை வைத்துத் தொங்கும். இல்லத்தின் வாசலில் இருக்கும். கோலைத் துாக்கி எறிந்தால் வாயால் கௌவி எடுத்துவரும். கழுத்தில் சங்கிலி பிணைக்கப்பட்டிருக்கும். கூண்டில் படுத்திருக்கும். வாரினால் கட்டி இழுத்துச் சொல்வார்.
 
பூட்டு
 
வாயால் பற்றிப் பூட்டும். வீட்டினைக் காக்கும். வீட்டின் வாயில் கதவில் தொங்கும். திறவுகோல் ஏற்கும். இரும்புச் சங்கிலியால் பிணைத்திருக்கும். பல வடிவக் கூட்டினைப் பெற்றிருக்கும். [சிறிய கூடுகளைப் பூட்டவும் பயன்படும்] பூட்டிவிட்டு இழுத்துப் பார்ப்பார்.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
17.05.2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
 
வினைத்தொகையும் ஊழ்வினையும்
 
முக்காலம் மூட்டுவதால், முந்திவினை தீட்டுவதால்,
எக்காலம் எந்தமிழ் ஏற்றுவதால் - தொக்குவதால்,
சேர்ந்து வருவதனால் சீரார் வினைத்தொகையும்
ஓர்ந்து பழவினையும் ஒப்பு!
 
வினைத்தொகை
 
காலம் காட்டும், வினைகொள்ளும், தமிழிலக்கண நுால்கள் எடுத்துரைக்கும். கால இடைநிலை மறைந்துவரும். இரு சொற்கள் சேர்ந்து வரும்.
 
ஊழ்வினை
 
முக்காலத்திலும் செய்த வினை சூழும். முந்திவந்து வாட்டும். தமிழிலக்கிய நுால்கள் எடுத்துரைக்கும் [ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்] அறிய முடியாவண்ணம் மறைந்திருக்கும். செய்த வினையெல்லாம் சேர்ந்து தாக்கும்.
 
ஆராய்ந்து பார்த்தால் சீருடைய தமிழிலக்கணம் சொல்லும் வினைத்தொகைக்கு ஊழ்வினை ஒப்பாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
17.05.2019

jeudi 16 mai 2019

சிலேடை வெண்பா

சிலேடை வெண்பா
 
புகைபோக்கியும் வெண்சுருட்டும்
 
தீயேற்கும்! காற்றேற்கும்! செய்தொழிலால் வந்தேகும்!
வாயேற்கும் துன்புகையை! மாசேற்கும்! - நோயேற்கும்!
நன்றே குழாய்ஏற்கும்! வெண்சுருட்டும் போக்கியும்
ஒன்றே எனவிங்[கு] உணர்!
 
புகைபோக்கி
 
நெருப்பால் வரும் புகையை வெளியேற்றுகிறது. புகை காற்றில் கலக்கிறது. தொழிற்சாலையில் உள்ளது. வாயின் வழியாகத் துன்புகையை வெளியேற்றுகிறது. வான்வெளியின் துாய்மை கொடுக்கிறது. நோய் பரவ இடந்தருகிறது. குழாய் வடிவத்தை ஏற்றிருக்கும்.
 
வெண்சுருட்டு [சிகரெட்]
 
நெருப்பால் பற்றவைக்கப்படும். புகை காற்றில் கலக்கும். வாயின் வழியாகப் புகைக்காற்று உடலுக்குள் செல்லும். தொழிற்சாலையில் உருவாக்கப்படுகிறது. தொழிற்சாலையில் ஓய்வு நேரத்தில் தொழிலாளர் பயன்படுத்துகின்றனர். துயர்தரும் புகை வாய்வழியாக உள்ளே செல்லும். நோய் தரும். குழாய் வடிவத்தை ஏற்றிருக்கும்.
 
எனவே, புகைபோக்கியும் வெண்சுருட்டும் ஒன்றென உணர்க.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
16.05.2019

mercredi 15 mai 2019

விருத்த மேடை - 37


விருத்த மேடை - 37
 
அறுசீர் விருத்தம் - 37
[விளம் + விளம் + விளம் + விளம் + மா + தேமா]
 
தந்தைதாய் மக்களே சுற்றமென்[று] உற்றவர்
   பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக்
   கருதி னாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய்
   ஆயன் ஆய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய்
   மருவு நெஞ்சே!
 
[பெரிய திருமொழி 9-7-1. திருமங்கையாழ்வார்]
 
பூமி இழந்திடேல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
 
நாட்டினைத் தாயினை நற்றமிழ் மொழியினை
   நன்றே காப்போம்!
ஏட்டினை எழுத்தினை எழில்தரும் எண்ணினை
   ஏற்றே ஆய்வோம்!
பாட்டினைப் பண்ணினைப் பாங்குறும் பண்பினைப்
   படைத்தே ஆள்வோம்!
வீட்டினை வெளியினை வியப்புறும் அழகினை
   விளைத்தே வாழ்வோம்!
 
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
 
ஓரடியில் முதல் நான்கு சீர்கள் விளச்சீர்களாகவும், ஐந்தாம் சீர் மாச்சீராகவும், ஆறாம் சீர் தேமாச்சீராகவும் வரவேண்டும். இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
 
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
   
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.05.2019

dimanche 12 mai 2019

சிலேடை வெண்பாசிலேடை வெண்பா
 
சித்தரும் கொக்கும்
 
ஒருகால் உறுதவத்தால், ஒண்ணிறத்தால், ஒன்றி
வருங்கால் உறுதிறத்தால், வாழும் - அருங்காட்டால்
நீர்நிலை கொள்ளுறவால் நீள்கொக்கும் சித்தரும்
ஓர்நிலை ஆவார் உணர்!
 
சித்தா்
 
ஒருகாலில் நின்றுறும் தவமுடையார். துாய வெண்ணெஞ்சுடையார். மனத்தை அடக்கி நல்வழியில் செல்லும் நெறியுடையார். காடுகளில் வாழும் அருளுடையார். நீரில் பள்ளிகொண்ட திருமாலிடம் உறவுடையார்.
 
கொக்கு
 
ஒரு காலால் நின்றிருக்கும். வெள்ளை நிறத்தைப் பெற்றிருக்கும். மீனுக்காய் மனமொன்றிக் காத்திருக்கும். பெரிய மீன் வருங்கால் கொத்திப் பிடிக்கும். வயற்காட்டில் வாழும். ஏரி, குளம் ஆகிய இடங்களில் இருக்கும்.
  
எனவே, நீண்ட கழுத்துடைய கொக்கும், மெய் மெலிந்திருக்கும் சித்தரும் ஒன்றாவார் என்றே உணர்க.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
12.05.2019

vendredi 10 mai 2019

சிலேடை வெண்பாசிலேடை வெண்பா
 
வெண்ணிலவும் ஆம்பலும்
 
விண்காணும்! தண்குளத்தில் மேல்காணும்! பாவலரின்
பண்காணும்! பால்போல வெண்காணும்! - பெண்காணும்!
மண்காணும் மாலையிலே! பின்வாடும்! வான்மதியைக்
கண்காணும் அல்லியெனக் கண்டு!
 
வெண்ணிலவு
 
விண்ணில் தோன்றும். நீர்நிலைகளில் அதன் பிம்பம் தெரியும். பாவலரின் பாட்டுக்குக் கருவாகும். பால்போல் வெண்மை நிறம் கொள்ளும். பெண்ணின் முகத்துக்கு உவமையாகும். மக்கள் கண்டு மகிழ மாலையில் தோன்றும். பின்வரும் நாள்களில் வடிவம் குன்றித் தேய்பிறை ஆகும்.
 
ஆம்பல் [அல்லி]
 
வானோக்கிப் பூக்கும். நீர்நிலைகளில் தோன்றும். பாவலரின் பாட்டுக்குக் கருவாகும். பால்போல் வெண்மை நிறம் கொள்ளும். பெண்ணின் முகத்துக்கு உவமையாகும். மக்கள் கண்டு மகிழ மாலையில் மலரும். காலையில் வாடும்.
 
வெண்ணிலவும் ஆம்பலும் ஒன்றென என் கண்கள் காண்கின்றன.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
10.05.2019

jeudi 9 mai 2019

சிலேடை வெண்பாசிலேடை வெண்பா
 
முத்தமிழும் ஈபெல் கோபுரமும்
 
ஓங்கியே மின்னும்! உலகே வியப்பெய்தும்!
தாங்கியே மின்னும் தகையெழிலை! - வீங்கியே
வான்புகழ் மின்னும்! வளமின்னும்! முப்பகுப்பால்
தான்புகழ் மின்னும்! தனிஈபெல் - தேன்றமிழ்
ஒன்றென மின்னும் உயர்ந்து!
 
முத்தமிழ்
 
உயர்தனிச் செம்மொழியாய் மின்னும். உலகம் தமிழ்மொழியின் தொன்மையைக் கண்டு வியப்படையும். அன்பழகை, அருளழகை, அறிவழகைத் தாங்கியே மின்னும். விரிந்த புகழேந்தி மின்னும். வாழ்க்கை வளங்களை நல்கியே மின்னும். இயல் இசை நாடகமென முத்தமிழாய் மேன்மை மின்னும்.
 
ஈபெல் கோபுரமும் [Tour Eiffel]

நீண்ட உயரத்தைப் பெற்று மின்னும். உலகம் இதைக் கண்டு வியப்படையும். மிக்க அழகேந்தி மின்னும். உயர்ந்த புகழேந்தி மின்னும். பார்வையாளர்களிடம் பொருளீட்டி நாடோங்க மின்னும். முன்று தளங்களைப் பெற்றோங்கிப் பெருமை மின்னும்.
 
எனவே, முத்தமிழும் ஈபெல் கோபுரமும் ஒன்றென மின்னும் உயர்ந்து.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
09.05.2019

mercredi 8 mai 2019

சிலேடை வெண்பாசிலேடை வெண்பா
 
மதுவும் மாதுவும்
 
நித்தம் மயக்குவதால், நெஞ்சேறி வாட்டுவதால்,
புத்தி இழந்து புலம்புவதால், - புத்துலகைக்
காட்டுவதால், கண்ணுறக்கம் மூட்டுவதால், பொங்கிமணங்
கூட்டுவதால் மாதுமது கூப்பு!
 
மது
 
மயக்கம் தரும். உடலை வருத்தும். போதையால் அறிவை இழக்கச் செய்யும். புலம்ப வைக்கும். இவ்வுலகை மறக்கச் செய்து புத்துலகில் மிதக்கச் செய்யும். துாக்கமளிக்கும். பொங்கி மணம் மூட்டும்.
 
மாது
 
மயக்கத்தைத் தருவாள். காதல் கொடுத்து நெஞ்சத்தை வாட்டுவாள். ஒருதலைக் காதலால் அறிவை இழக்கச் செய்வாள். தனியே புலம்ப வைப்பாள். உயிரோடு இணைந்து இவ்வுலகை மறக்கச் செய்து புத்துலகைக் காட்டுவாள். படுக்கையில் சேர்ந்து உறங்குவாள். சமையல் செய்து மணங்கொடுப்பாள்.
 
எனவே மாதும் மதுவும் கூப்பும் இருகைகள் போன்று இணையாவர்..
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
08.05.2019

சிலேடை வெண்பாசிலேடை வெண்பா
 
கடலும் விண்ணும்!
 
நீருண்டு! நீண்ட நிலையுண்டு! கோளுண்டு!
போருண்டு! போகும் பொறியுண்டு! - காருண்டு!
நீல நிறமுண்டு! மீனுண்டு! சூடுண்டு!
காலக் குளிருண்டு! காலையெழும் - கோலமுண்டு!
விண்ணில் கடலில் விளம்பு!
 
கோள் - பாம்பு, செவ்வாய், புதன் ஆகிய கோள்கள்.
 
கடல்
 
நீரிருக்கும். நீண்டு விரிந்திருக்கும். பாம்புகள் வாழும். கடலில் போர்கள் நடக்கும். கப்பலும், விசைப்படகுகளும் போகும். பேரிருள் மேவும். நீலநிறங் கொள்ளும். மீன்கள் வாழும். மேற்பரப்பு, சூரிய வெப்பத்தால் சூடேறும். அதன் ஆழத்திலும் மழைக்காலத்திலும் குளிரும். காலையில் பரிதி எழும் காட்சியைக் காணலாம்.
 
விண்
 
நீர் சுமந்த மேகம் நிறைந்திருக்கும். நீண்டு விரிந்திருக்கும். செவ்வாய், புதன் ஆகிய கோள்கள் சுற்றி வரும். வானில் போர் நடக்கும். மின்பொறிகள் செல்லும். பேரிருள் மேவும். நீலநிறங் கொள்ளும். விண்மீன்கள் இருக்கும். காலையில் சூரிய வெப்பம் விரிந்தோங்கும். இரவிலும் மழைக்காலத்திலும் குளிர் நிறைந்தோங்கும். காலையில் எழுகதிர் படர்ந்து அழகேந்தும்!
 
எனவே, ஆழ்கடலும் விரிவானும் ஒப்பாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
07.05.2019

samedi 4 mai 2019

சிலேடை வெண்பாசிலேடை வெண்பா
 
செருப்பும் இடுப்பு வாரும்
 
அடியேந்தும்! வண்ண அழகேந்தும்! மாட்டப்
பிடியேந்தும்! பின்னலெழில் பேணும்! - உடற்காக்கும்!
தோலேந்தும்! முள்ளேந்தும்! வாலேந்தும் வாரணியும்
காலேந்தும் தேய்செருப்பும் காண்!
 
செருப்பு
 
காலடியை ஏந்தும், கண்களைக் கவரும் அழகிய வண்ணத்தை உடையது. கால் விரல்களை மாட்டப் பிடியிருக்கும், அல்லது கொக்கி இருக்கும். மேல் வார்கள் பின்னல்களைப் பெற்றிருக்கும். வெப்பத்திலிருந்து கால்களைக் காக்கும். தோலால் செய்யப்படும். செருப்படியில் முட்கள் குத்தி இருக்கும்.
 
இடுப்பு வாரணி
 
அடிக்க உதவும். கண்களைக் கவரும் அழகிய வண்ணத்தை உடையது. இடுப்பில் அணியக் கொக்கியைப் பெற்றிருக்கும். பின்னல்களைப் பெற்றிருக்கும். உடல் அணியும் உடையைக் காக்கும். தோலால் செய்யப்படும். மேலே முட்களையும் கொண்டிருக்கும்.
 
எனவே, வால்போல் நீண்டுள்ள வாரணியும், செருப்பும் ஒப்பாகும்.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
04.05.2019

mercredi 1 mai 2019

விருத்த மேடை - 36


விருத்த மேடை - 36
 
அறுசீர் விருத்தம் - 36
[மா + மா + மா + மா + மா + காய்]
 
கிடந்த நம்பி குடந்தை மேவிக்
  கேழ லாயுலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி
  எறிஞர் அரணழிய
கடந்த நம்பி கடியா ரிலங்கை
  உலகை யீரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில்
  நமோ..நா ராயணமே!
 
[பெரிய திருமொழி - திருமங்கையாழ்வார்]
 
என்னுயிர்ப் பெண்ணே!
 
பாடும் பெண்ணே! பார்வைக் குள்ளே
  சுற்றும் பம்பரமாய்
ஆடும் பெண்ணே! அகத்துக் குள்ளே
  திகட்டா ஆரமுதாய்
ஓடும் பெண்ணே! உணர்வுக் குள்ளே
  ஓங்கும் உயிர்உரமாய்க்
கூடும் பெண்ணே! குணத்துக் குள்ளே
  நீ..தான் கோபுரமே!
 
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
 
ஓரடியில் முதல் ஐந்து சீர்கள் மாச்சீர்களாகவும், ஆறாம் சீர் காய்ச்சீராகவும் வரவேண்டும். இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியிலும் முதல்இரு சீர்கள் சேர்ந்து முதல் எழுத்தைத் தவிர மற்ற எழுத்துக்கள் ஒன்றி வரவேண்டும். ஒன்று, மூன்று, ஆறாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
 
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
   
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.05.2019