lundi 19 janvier 2015

நுால் வெளியீடு

புதுக்கோட்டையில்
பட்டுக்கோட்டை மக்கள் இயக்கம் நடத்தும்
இலக்கியத் திருவிழாவில் என்னுடைய
"ஏக்கம் நுாறு" " கனிவிருத்தம்"  
ஆகிய கவிதை நுால்கள் வெளியிடப்படுகின்றன. 
வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்

 
 
 

jeudi 15 janvier 2015

பொங்கல் திருநாளே பொங்கு!பொங்கல் திருநாளே பொங்கு!

1.
எல்லோரும் இன்புற்று வாழ்கவே! அன்பொளிரும்
சொல்லோடு மன்பதை சுற்றுகவே! - நல்லமுதாம்
சங்கத் தமிழ்மணக்கச் சந்தக் கவியினிக்கப்
பொங்கல் திருநாளே பொங்கு!

2.
ஒற்றுமை ஓங்கி ஒளிருகவே! நல்லொழுக்கம்
பற்றுனைப் பற்றிப் படருகவே! - நற்றுணையாய்த்
திங்கள் தரும்நலமாய்த் தென்றல் கமழ்மணமாய்ப்
பொங்கல் திருநாளே பொங்கு!

3.
உழைப்பே உயர்வுதரும்! உண்மையொளி யூட்டும்!
இழைப்பே பொலிவுதரும்! எங்கும் - குழையாமல்
தங்க மனமேந்தித் தந்த வளமேந்திப்
பொங்கல் திருநாளே பொங்கு!

4.
மாண்பெனும் சோலை மலருகவே! வண்டமிழ்
ஆண்டெனத் தைமகளை வேண்டுகவே! - பூண்டொளிரும்
மங்கை அணியழகாய் மாலை மதியழகாய்ப்
பொங்கல் திருநாளே பொங்கு!

5.
செய்யும் தொழிலையே தெய்வமென எண்ணிடுக!
உய்யும் வழியுணர்க! ஒண்டமிழ் - நெய்கின்ற
வங்கக் கடல்புதுவை வாழும் புலமையெனப்
பொங்கல் திருநாளே பொங்கு!

6.
துணிவே துணையெனக் கொண்டிடுக! நெஞ்சுள்
பணிவே உயர்வுதரும் பண்பாம்! - பணிசிறக்க!
செங்கதிர் முற்றிச் செழித்துள்ள பொன்னிலமாய்ப்
பொங்கல் திருநாளே பொங்கு!

7.
ஒழுக்கம் உயிரினும் ஓம்பிடுக! கற்றோர்
பழக்கம் பயனுறுக! பாரே - செழித்தாட
மங்கலம் நல்கும் மலர்த்தமிழ் வாய்மறையைப்
பொங்கல் திருநாளே பொங்கு!

8.
அன்பொன்றே இவ்வுலகை ஆட்படுத்தும்! பேராற்றல்
ஒன்றென்றே ஓதி  உணர்வுறுக ! - நன்றாடித்
தொங்கும் மனக்குரங்கைத் தங்கும் வழிகாட்டிக்
பொங்கல் திருநாளே பொங்கு!

9.
கடமையும் கண்ணியமும் நற்கட்டுப் பாடும்
உடமையாய்ப் பெற்றே ஒளிர்க! - குடியோங்கித்
தங்கி மகிழ்விருக்கத் தாள இசையொலிக்கப்
பொங்கல் திருநாளே பொங்கு!

10.
எண்ணமே வாழ்வாகும்! என்றென்றும் உண்மையொளிர்
வண்ணமே ஆன்ம வளமாகும்! - மண்ணுலகம்
எங்கும் இனிமையுற ஏற்ற நெறிகளைப்
பொங்கல் திருநாளே பொங்கு!

samedi 3 janvier 2015

தயக்கம் ஏனடி?
தயக்கம் ஏனடி?

1.
கோடிமலர் முத்தங்கள் கொட்டிக் கொடுத்திடவே
வாடி அருகே வளைந்து!

2.
பாடிக் களிக்கும் பறவைபோல் இன்பத்தைச்
சூடிக் களிப்போம் சுவைத்து!

3.
தேடியெனை வந்தவளைத் தேனுண்டும் வண்டாக
நாடி பெறுவேன் நலம்!

4.
ஓடி விளையாடி ஒன்றாய் உயிர்கலந்து  
ஆடிக் குடிப்போம் அமுது!

5.
சூடிவரும் மல்லிகை சொக்குப் பொடிபோட்டுக்
கூடியுறச் செய்யும் குளிர்ந்து!

6.
மாடி அறைதேடி வந்தவளே! வானமுதைத்
தாடி எனக்குத் தழைத்து!

7.
நாடி துடிக்குதடி! நண்ணும் உணா்வலைக்கு
மூடி உளதோ மொழி!

8.
மோடி எடுப்பதுபோல் முற்றுமெனைச் சாய்த்தவளே!
வாடி வதங்குகிறேன் வா!

9.
ஆடி வருகுதடி! ஆசை பெருகுதடி!
ஏடி தயக்கம் இனி!

10.
சாடி மதுவருந்தத் தத்தி மனம்ஏங்கித்
தாடி வளரும் தழைத்து!

02.01.2015

jeudi 1 janvier 2015

பொலிக.. பொலிக.. புத்தாண்டே!
பொலிக.. பொலிக.. புத்தாண்டே!

அன்பு மழைபொழிந்து பண்புப் பயிர்விளைந்து
என்றும் இனிமை இசையளித்து - இன்பமுடன்
முத்தாண்டு பூக்கும் முழுமதிபோல் வந்திங்குப்
புத்தாண்டு பூக்கும் பொலிந்து!

எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால்
தங்கும் வளங்கள் தழைக்கட்டும்! - பொங்குதமிழ்
இன்னெறியை எந்நாடும் ஏற்கட்டும்! சன்மார்க்கப்
பொன்னெறியைப் போற்றிப் புகழ்ந்து!

மனிதம் மலர்ந்து மணம்வீச!
     மகிழ்ந்தே உலகோர் தமிழ்பேச!
புனிதம் பூத்துப் புகழ்மேவ!
     பொறுமை! பொதுமை அரசாள!
கனியும் தேனும் கலந்துாறும்
     கம்பன் கவிபோல் வாழ்வொளிர!
நினைவும் கனவும் நிறைவேற
     நெகிழ்ந்து வருக புத்தாண்டே!

உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்!
     உயிர்கள் யாவும் களிக்கட்டும்!
தண்மை தழைத்துச் செழிக்கட்டும்!
     தமிழ்போல் இனிமை கொழிக்கட்டும்!
பெண்மை பேணும் நல்லறங்கள்
     பெருகும் புகழை வடிக்கட்டும்!
வெண்மைப் பனிபோல் தெளிவேந்தி
     விரைந்தே வருக புத்தாண்டே

01.01.2015