mercredi 12 septembre 2012

ஞானப் பெண்ணே!





ஞானப் பெண்ணே!
 
இன்பாவில் பலநாள்கள் ஊறி ஊறி
     இருக்கின்ற எழுத்துக்கள்! சொற்கள்! வண்ண
பொன்காவில் பொலிந்தாடும் மலர்கள் போன்று
     பொருண்ணெறிகள்! அமுதேந்தும் நற்சந் தங்கள்!
வன்...கோ...வில் அரண்மனையில் தங்கம் வைரம்
     வைத்துள்ள கருவூல அணிகள் கொண்டாய்!
என்னாவில் நடைபயின்று தமிழே வாராய்!
     என்னுயிரில் வாழ்கின்ற ஞானப் பெண்ணே!

பற்றுடனே இருப்பதுபோல் நடித்து! காலம்
     பார்த்துநமைக் கால்வாரும் நபரை எல்லாம்
முற்றுடனே நீக்கிவிடு! பகைவர் கட்டும்
           முற்றுகையைத் தூளாக்கு வீரம் நல்கும்!
கற்(று)உடனே நெஞ்சத்துள் நிலைத்து நிற்கும்
     கமழ்கின்ற மதிசூடு! பாடும் பாவை
பெற்றுடனே மகிழ்ந்தாட தமிழே வாராய்!
     பெரும்புலமை தருகின்ற ஞானப் பெண்ணே!!

சாதியெனும் சகதியினை உடலில் பூசிச்
     சந்தனமாய் எண்ணுவதோ. வாழ்வைக் காக்கும்
நீதியெனும் தேவதையின் கண்ணைக் கட்டி
     நிலம்பொய்ம்மை ஏந்துவNதூ? வடலூர் வள்ளல்
சோதியெனும் திருப்பாட்டைத் தந்த போதும்
     துயர்க்கடலில் முழுகுவதோ? முன்பி றந்து
ஆதியெனும் புகழ்ஏந்திம் தமிழே வாராய்!
     அறிவொளியை அளிக்கின்ற ஞானப் பெண்ணே!

பகைநாடித் துதிபாடிப் போற்றிப் போற்றிப்
     பழிநாடி வாழ்கின்ற தமிழர்! என்றும்
தொகைநாடித் தொண்டாற்றி இழிவை ஏற்றே
     துயர்நாடி வழிகின்ற தமிழர்! எங்கும்
புகைநாடிப் பொய்நாடி ஊதி ஊதிப்
     பெல்லாத வினையாற்றும் தமிழர் மாற
தகைநாடித் தமிழ்பாட தமிழே வாராய்!
     தன்மானம் தருகின்ற ஞானப் பெண்ணே!

8 commentaires:

  1. நல்ல கவிதை ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருந்தமிழ்ப் பெண்ணின் அழகை வடித்தால்
      பெருந்சுவை ஊறும் பெருத்து!

      Supprimer
  2. எங்கும் புகை நாடி, பொய் நாடி ஊதி பொல்லாத வினையாற்றும் தமிழர் மாற.....

    அருமை! அருமை!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொய்வாரிப் பூசுகின்ற பொல்லாப் பிறவிகள்
      மெய்மாறி வந்த விலங்கு!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      ஞானத் தமிழறிவை நாளும் வளா்த்திட்டால்
      வானம் வணங்கும் வளைந்து!

      Supprimer

  4. தமிழ்ஞானப் பெண்ணழகைத் தந்தகவி கண்டேன்!
    அமிழ்தாக அள்ளிநான் உண்டேன்! - குமிழ்சூழ்
    உலகெங்கும் ஓங்கு தமிழ்பரவச் செய்வோம்!
    நலமெங்கும் நண்ணும் வளர்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எல்லாம் தமிழென்றே எண்ணி உயிர்வாழ்ந்தேன்!
      பொல்லாப் பகைவரைப் போய்ஒழித்தேன்! - மல்லாடும்
      வன்மறவா் என்நண்பா்! வண்டமிழைக் காப்பவரே
      என்உறவா் என்பேன் இனி!

      Supprimer