தொழிலாளர் திருநாள் வாழ்த்து!
பாட்டின் அரங்க உழவர்களே!
பகலும் இரவும் பைந்தமிழைத்
தீட்டும் வன்மை மறவர்களே!
செந்தேன் மொழிசேர் மறத்திகளே!
நாட்டின் நிலையை மாற்றிடவே
நன்றே கவிகள் படைத்திடவீர்!
காட்டின் வளத்தைப் பாட்டுக்குள்
சூட்டும் புலவன் வாழ்த்துகிறேன்!
காட்டு மேட்டை ஏர்..எழுதும்!
கவிதை யேட்டைக் கோல்..எழுதும்!
வாட்டும் சூட்டைப் போக்கிடவே
வளர்ந்த மரங்கள் நிழல்..எழுதும்!
கூட்டுப் புரியும் கொள்ளையரைக்
குழிக்குள் போடத் தமிழ்..எழுதும்!
மீட்டும் இனிமை வேண்டுமெனில்
வேர்வைப் பூக்கள் பூக்கட்டும்!
கன்னல் தமிழே முதலாகும்!
கவிதை நம்மின் தொழிலாகும்!
இன்னல் புரியும் கொடுநரியை
இன்றே விரட்டல் கடனாகும்!
தின்னல் ஒன்றே தொழிலாகத்
திரிவோர் உலகுக் கிழிவாகும்!
உன்னல் யாவும் மொழிநலமே!
உழைப்போர் திருநாள் வாழ்த்துக்கள்!
உன்னல் - நினைத்தல்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
01.5.2024