mardi 19 mai 2015

ஓரெதுகை வெண்பா!




ஓரெதுகை வெண்பா!

அஞ்சாத செஞ்சியவள்! பிஞ்சிளம் வஞ்சியவள்!
எஞ்சாத மஞ்சுமவள்! பஞ்சமிலாத் - தஞ்சையவள்!
பஞ்சியை மிஞ்சியவள்! மஞ்சத்தில் விஞ்சியவள்!
கெஞ்சியே தஞ்சமிடும் நெஞ்சு!

கட்டழகு கொட்டமிடும்! தொட்டுமனம் வட்டமிடும்!
மொட்டழகு கட்டியெனைச் சட்டமிடும்! - பட்டழகே!
சுட்டுவிழி முட்டியெனை வெட்டவரும்! எட்டியுள
வட்டநிலாத் தட்டோ? உன் பொட்டு!

கட்டிக்கொள் சிட்டென்னை! கட்டழகுப் பெட்டகமே
ஒட்டிக்கொள் பொட்டென்னை! கட்டரும்பே! - தட்டாமல்
முட்டிக்கொள் சட்டென்று! சட்டத்தால் திட்டத்தால்
வட்டி..கொள் பட்டென்று தொட்டு!

lundi 11 mai 2015

அழகின் சிரிப்பு - பகுதி 3



அழகின் சிரிப்பு - பகுதி 3
(காலையழகு, மாலையழகு, சோலையழகு, சாலையழகு)
தலைமைக் கவிதை

நிறைவு கவிதை

காலை அழகு!

எழுகின்ற பொற்கதிர்கள் எழுதும் கோலம்!
     ஏற்றமுடன் குரல்கொடுக்கும் சேவல்! நெஞ்சம் 
தொழுகின்ற திருக்கோயில் பாடல்! தோட்டத்
     தொழுவத்தில் பால்கொடுக்கும் பசுக்கள்! காளை
உழுகின்ற வயல்நாடிச் செல்லும் காட்சி!
     ஒற்றுமையாய்க் கரைகின்ற காகம்! துள்ளி
விழுகின்ற அணில்பிள்ளை! வீசும் காற்று!
     வியன்காலை எத்திசையும் அழகே காட்டும்!

தலைகுளித்துக் குழல்முடியும் காதல் கன்னி!
     தம்மீது பனிமுத்தைத் தாங்கும் புற்கள்!
கலைவிரித்து வைத்ததுபோல் மலர்ந்த காடு!
     கை..குழைத்துத் தருகின்ற கூழு! பச்சை
இலைவிரித்து வரவேற்கும் வாழைத் தோப்பு!
     இன்பூட்டும் கிளிப்பேச்சு! குருவிக் கூட்டம்!
வலைவிரித்து நம்மனத்தைக் கொள்ளை கொள்ளும்!
     விலைகொடுக்க முடியாத அழகே காலை!

மாலை அழகு

பொன்மஞ்சள் முகம்காட்டிக் காதல் பெண்போல்
     புகழ்ப்பரிதி உடல்மறைக்கும்! புவியே மாறும்!
இன்கொஞ்சும் பொழுதென்று பறவைக் கூட்டம்
     இணைதேடிக் கூடடையும்! உழைத்து வந்த
வன்நெஞ்ச மறவர்களின் எண்ணம் எல்லாம்
     வான்மதியின் மேலிருக்கும்! காதல் பொங்கும்!
நன்னெஞ்ச வீட்டுக்குள் செல்வச் செல்வி
     நல்லாட்சி விளக்கெரியும் அழகே மாலை!

மதுகொடுத்து மகிழ்வுற்ற மலர்கள் எல்லாம்
     மனம்மயங்கிச் சாய்ந்திருக்கும்! கொடிகள் கொண்ட
புதுமொட்டு மணமல்லி பெண்ணின் கூந்தல்
     பேயடைய தவமிருக்கும்! குளத்தில் அல்லி
பொதுச்சொத்து வான்மதியை உறவாய் எண்ணிப்
     புன்னகையால் தன்னகத்தைத் திறந்து காட்டும்!
எதுகொடுத்தும் எழில்மங்கை இதயம் புக்க
     இளையவரை விழிப்பூட்டி இனிக்கும் மாலை!

சோலை அழகு!

தேனொழுகும் கவியெழுதத் தென்றல் வீசும்!
     தேவியெழில் முகமாகப் பூக்கள் பேசும்!
ஊனுருகும் வண்ணத்தில் குயில்கள் பாடும்!
     உலாவந்து வண்டினங்கள் மதுவுண் டாடும்!
வானொழுகும் ஒளிர்கதிர்கள் செடியைச் தொட்டு
     வளங்கேட்டுக் கை..குலுக்கும்! துள்ளி ஓடும்
மானிருக்கும்! மயிலிருக்கும்! அழகை ஏந்தி
     மனமிருக்கும் மலர்ச்சோலை அழகின் ஊற்று!

புல்..மெத்தை போலிருக்கும்! புறா இருக்கும்!
     புதருக்குள் முயலிருக்கும்! அமர்ந்து பேசக்
கல்லிருக்கும்! காதலர்கள் மறைவாயச்; சென்று
     கதையெழுத இடமிருக்கும்! கனி இருக்கும்!
பல்லிருக்கும் வடிவாக வழி இருக்கும்!
     பன்மலர்கள் படந்திருக்கும்! கம்பன் பாட்டின்
சொல்லிருக்கும் அமுதாகச் சொக்கச் செய்யும்
     சோலையெழில் புலவர்களின் கவிதை ஊற்று!

சாலை அழகு!

நேர்வழியில் வாழ்கின்ற வாழ்வே சோலை!
     நேர்க்கோட்டில் அமைந்ததுதான் அழகு சாலை!
சீர்நெறியில் கவிபடைக்கும் புதுவை மண்ணில்
     செல்..பாதை சொக்கட்டான் கோட்டை ஒக்கும்!
பார்மொழியில் தமிழைப்போல் இனிமை இல்லை!
     பாரீச்போல் பாதையெழில் எங்கும் இல்லை!
ஓர்மொழியில் உரைக்கின்றேன்! வீதி கொண்ட
     ஒளிவிளக்காய் நாட்டுக்கு நன்மை செய்வீர்!

பாதையிலே ஓடேந்தும் வறியர்! தாலி
     பறிக்கின்ற பெருங்கொடியர்! வேலி ஓரம்
போதையிலே உருளுகின்ற குடியர்! நாற்றப்
     பொருள்குப்பை கொட்டுகின்ற பொடியர்! மேலாம்
கீதையிலே இருக்கின்ற நெறியைக் கற்றும்
     கீழ்மையிலே நடக்கின்ற வெறியர் இன்றி
வாதையிலே செல்லாத ஆட்சி கண்டால்
     சாலையெலாம் சோலையென மணக்கும் என்பேன்!

கவிஞர் சரோசாவின் கன்னல் கவிகள்
புவியிற் பெறுமே புகழ்!
அணியாய் அழகூட்டும்! ஆரமுதை சூட்டும்!
தணிகா அளித்த தமிழ்!

மலர்வாணி பாக்கள் மணம்வீசக் கண்டேன்
நிலம்மீதில் வாழ்க நிலைத்து!

நற்கவி வாணராம் நம்தேவ ராசரின்
பொற்கவி வெல்க பொலிந்து!

நாய்நக்கித் தன்னன்பைக் காட்டும் என்று
     நல்லுரையை நன்களித்தீர்! என்னை எந்தப்
பேய்நக்கும் பாக்கியமும் வாழ்வில் என்றும்
     பிடியளவும் கிடைக்கவில்லை! தமிழாம் இன்பத்
தாய்நக்கிக் கொடுத்திட்ட அமுதை உண்டேன்!
     தமிழரங்கில் தலைமைபெற்றேன்! அறியா இந்தச்
சேய்நக்கிக் கொடுக்கின்ற கவிகள் தம்மைச்
     செவிநக்கிச் சுவைப்போரை வணங்கு கின்றேன்!

மதுகொடுக்கும் சுவையறியேன்! ஒருநாள் கூட
     மதிமயங்கும் நிலையறியேன்! வாழ்வில் இன்பம்
அதுகொடுக்கும் இதுகொடுக்கும் என்றே எண்ணி
     அலைகின்ற கலையறியேன்! மகிழ்ச்சி வேண்டி
பொதுக்கொடுகும் மனைநாடிப் புழுவை போன்று
     புரல்கின்ற பொழுதறியேன்! தமிழைப் போன்று
எதுகொடுக்கும் சுவையென்று வாழ்ந்து விட்டேன்!
     இவ்வுலகின் பாட்டரசாய் ஆட்சி கொண்டேன்!

நீடுபுகழ் நெடுந்தமிழின் அழகைச் சூடி
     நெஞ்சினிக்கக் கவிதந்த கவிஞர் வாழி!
காடுகமழ் மணமுடைய கவிகள் கேட்டுக்
     கையொளியைத் தந்திட்ட அன்பர் வாழி!
பாடுபுகழ்த் தமிழொளிரப் பாட்ட ரங்கைப்
     படைத்திட்ட மன்றத்தார் வாழி! வாழி!!
நாடுபுகழ் பாரதிநான் நன்றி சொன்னேன்!
     நலமோடும் வளமோடும் வாழி! வாழி!!

03.05.2015

vendredi 8 mai 2015

அழகின் சிரிப்பு - பகுதி 2



அழகின் சிரிப்பு - பகுதி 2
(காலையழகு, மாலையழகு, சோலையழகு, சாலையழகு)
தலைமைக் கவிதை

கவிஞர்களைக் கவிபாட அழைத்தல்

காலை அழகு

காலை யழகைப் பாடிடவே
     கவிஞர் சரோசா வருகின்றார்!
சோலை மலராய் இவர்பாக்கள்
     சொக்கச் செய்யும் நம்நெஞ்சை!
மேலை நாட்டில் தமிழ்பரப்பும்
     வேலை இவரின் முதல்வேலை!
ஆலை போன்று தமிழ்நெய்தே
     அவையை அசத்திப் பாடுகவே!

தேனாறு பாய்தோடும்! தீஞ்சோலை பூத்தாடும்!
     தெம்மாங்கு வண்டு பாடும்!
         தென்னாட்டுச் சீரேந்திச் செம்மாந்த நடையேந்திச்
              செய்கின்ற கவிதை ஆடும்!

மானாடும்! மயிலாடும்! மைனாக்கள் பலவாடும்!
     மனங்கொண்ட துன்பம் ஓடும்!
         மதுவூறும் கனியாடும்! மயக்கத்தைத் தந்தாடும்!
              மங்காத மாட்சி சூடும்!

கானாடும் புள்கூட்டம்! கவிபாடும் குயில்கூட்டம்!
     காலைக்கு வாழ்த்து கூறும்!
         கதிரென்னும் தேரோட்டிக் கவிழ்ந்துள்ள இருளோட்டிக்
              கடனாற்றப் பாதை போடும்!

ஊனூறும் வண்ணத்தில் உயிரூறும் எண்ணத்தில்
     உயர்காலை அழகைச் சொல்க!
         நானூறி உண்கின்ற மீனூறும் குழம்பாக
              நன்கீந்து சரோசா வெல்க!

பாடும் கவி.சரோசா வருகவே! - நெஞ்சம்
சூடும் தமிழ்..ரோசா தருகவே!

மாலை அழகு

மயக்கும் மாலை எழில்பாட
     மணக்கும் கவிஞர் வருகின்றார்!
வியக்கும் வண்ணம் இவர்பாட்டில்
     வேகம் இருக்கும் உணர்ந்திடுவீர்!
இயக்கும் இறையின் சீரேந்தி!
     இன்பத் தமிழின் இன்பேந்தி!
தயக்கம் இன்றித் துணிவேந்தி!
     தணிகா வருக அவையினிலே!

கவிதைக்குள் கணக்குகளைப் போட்டு - இவர்
     கட்டிவரும் எழுத்துக்குள் இருக்கும்அதிர் வேட்டு!
         கருத்தாக இருக்குமிவர் பாட்டு - அது
              காரமுடன் சமைத்திட்ட தமிழ்மொழியின் கூட்டு!

சுவையெழுகும் சந்தங்கள் கேட்டு - தூய
     மூளைக்குள் சிறையிட்டுப் போட்டிடுவார் பூட்டு!
         அவைமகிழ மாலையெழில் மீட்டு - தமிழ்
              அருளேந்தி அமுதேந்தி ஆழ்துயரை ஓட்டு!

தணிகா வந்திடுக அவையில் - கவியை
அணியாய்த் தந்திடுக சுவையில்!

சோலை அழகு

சோலை அழகைப் பாடிடவே
     துணிந்து வந்தார் மலர்வாணி!
மாலை வணங்கும் இவர்நெஞ்சம்
     வளமாய் விளையும் தமிழ்க்காணி!
பாலை நிகர்த்த பாக்களையே
     படைக்கும் இவரின் எழுத்தாணி!
சேலை மின்னும் அழகாகச்
     செலுத்த வருக கவித்தோணி!

கற்கண்டுக் கவிகொண்டு கருத்தோடு வருகின்றார்
     கவி.வாணி தாசன் பெயர்த்தி!
         கனியென்ன? கரும்பென்ன? கமழ்கின்ற மலரென்ன?
              கவிபாடித் தருவார் அசத்தி!

சொற்கொண்டு தருகின்ற சுடர்ச்சோலை அழகெல்லாம்
     சுரந்தூறும் தமிழை உயர்த்தி!
         சுகங்காணச் சுவைகாணத் தமிழன்னை நலங்காணத்
              துணிவோடு உழைக்கும் மறத்தி!

நற்றொண்டு புரிகின்ற நம்கம்பன் கழகத்தில்
     நறும்பாட்டுக் கற்கும் பயிற்சி!
         நல்லாற்றல் நனிமேவ நாடெங்கும் தமிழ்மேவ
              நலம்மேவும் உன்றன் முயற்சி!

விற்கொண்டு பகைசாய்த்து நிற்கின்ற திருராமன்
     வியன்தாள்கள் ஊட்டும் வளர்ச்சி!
         விழிகொண்ட தமிழேந்திப் பொழிற்கொண்ட அழகேந்தி
              விளையாடு பூக்கும் மலர்ச்சி!

இளையகவி மலர்வாணி வருகவே! - இனி
இனியகவி நலம்வாரித் தருகவே!

சாலை அழகு

நாட்டில் உள்ள சாலையெழில்
     நன்றே நவில வருகின்றார்
பாட்டில் வல்ல தேவராசர்!
     பசுமைத் தமிழின் சீர்நேசர்!
ஏட்டில் உள்ள இலக்கணத்தை
     என்றும் மறவா திவர்நெஞ்சம்!
காட்டில் மணக்கும் மல்லிகையாய்க்
     கட்டும் கவியுள் தமிழ்..கொஞ்சும்!

நல்ல தமிழ்க்காடு - நம்
தேவராசு கொண்டமனக் கூடு!
வல்ல தமிழ்நாடு - அதன்
வளமெண்ணித் துள்ளிவிளை யாடு!

வெல்லும் குறள்ஏடு - உன்
விழியாக ஏந்தியதைப் பாடு!
சொல்லும் கவி..பீடு - சுவை
சுரக்கின்ற தமிழுக்கே தீடு!

சாலை அழகெண்ணி - இவர்
சமைத்திடுவார் செந்தமிழைப் பின்னி!
சோலை எழில்நண்ணி - இவர்
சூட்டும்பா இளமையொளிர் கன்னி!

ஓடி வரும்பொன்னி - போன்றே
ஓங்கிவரும் உயர்அணிகள் மின்னி!
கோடிப் புகழ்..வன்னி - கொள்கைக்
கோலமொழி தரித்திடுக சென்னி!

கவிஞர் தேவராசு எழுக - இங்குக்
கவியாம் தேன்மழை பொழிக!

[தொடரும்]

lundi 4 mai 2015

அழகின் சிாிப்பு - பகுதி 1



அழகின் சிரிப்பு
(காலையழகு, மாலையழகு, சோலையழகு, சாலையழகு)

தலைமைக் கவிதை

தமிழ் வணக்கம்

மரம்ஆடும்! மலர்ஆடும்! குரங்கைப் போன்று
     மனம்ஆடும்! மதுவருந்தி வண்டும் ஆடும்!
கரம்ஆடும்! கால்ஆடும்! கருத்தும் ஆடும்!
     காற்றாடி போல்வானில் காதல் ஆடும்!
சிரம்ஆடும்! சிலம்பாடும்! சீர்கள் ஆடும்!
     சில்லென்று மயிலாடும்! என்றன் நெஞ்சுள்
வரமாடும் வண்டமிழே விரைந்து வாராய்!
     வளமாடும் வன்கவிகள் நன்றே தாராய்!

இறை வணக்கம்!

நீருண்ட மேகங்கள் நிறைந்தே ஆடும்!
     நெடுமாளின் புட்கொடியும் நெகிழ்ந்தே ஆடும்!
சீருண்ட அடியவர்தம் சிந்தை என்றும்
     திருமாலின் திருவடியில் திளைத்தே ஆடும்!
கூருண்ட விழியழகும், கொஞ்சும் கோதை
     குடிகொண்ட மார்பழகும் கொண்ட தேவே!
தாருண்ட மணமாகத் தமிழுண் டாடத்
     தயாநிதியே! வேங்கடவா! விரைந்தே வாராய்!

அவையடக்கம்

வம்பருக்கும் கொம்பருக்கும் அடங்க மாட்டேன்!
     பணம்வாரிக் கொடுத்தாலும் மடங்க மாட்டேன்!
கும்பருக்கும் கோதையர்க்கும் பணிய மாட்டேன்!
     கொடுங்கோபக் காரருக்கும் குனிய மாட்டேன்!
உம்பருக்கும் செல்வருக்கும் கவிதை பாடி
     ஊன்வாழப் பொருள்நாடித் திரிய மாட்டேன்!
கம்பருக்கும் கண்ணனுக்கும் அடங்கும் நெஞ்சன்
     கவிகேட்கும் உங்கள்முன் அடங்கு கின்றேன்!

வொரெயால் தமிழ்க் கலாச்சார மன்றம்

ஓங்குதமிழ்ச் சங்கமத்தை உள்ளம் ஏந்தி
     உழைத்திட்ட அன்பர்களை வணங்கு கின்றேன்!
தாங்குதமிழ்த் தலைகொண்ட இலங்கை வேந்தன்
     தன்னலமே இல்லாத கிருட்ண ராசு
தேங்குதமிழ்ச் சீர்பரவப் பணிகள் செய்தார்!
     தேசபிதா காந்திக்குப் படிமம் வைத்தார்!
வீங்குதமிழ் நெஞ்சுடனே பத்தாம் ஆண்டின்
     வெற்றிக்கு உழைத்தவரைப் போற்று கின்றேன்!

பாவேந்தர் தமிழ்அழகின் சிரிப்பைப் பாடிப்
     பாவலர்தம் உள்ளத்துள் குடி புகுந்தார்!
மாவேந்தர் அந்நாளில் தமிழ்த்தாய் கொண்ட
     மாண்பழகின் சிரிப்போங்க ஆட்சி செய்தார்!
நாவேந்தர் இந்நாளில் தமிழின் தொன்மை
     நலமழகின் சிரிப்புரைத்து நற்பேர் பெற்றார்!
பூவேந்தும் சிரிப்பழகாய்ப் புவியில் யானும்
     புகழேந்தும் புலமையினைப் போற்றி வாழ்வேன்!

விடியலுறும் சிரிப்பழகைச் செவ்வான் காட்டும்!
     விழிகளுறும் சிரிப்பழகைக் காதல் தீட்டும்!
செடிகளுறும் சிரிப்பழகைப் பூக்கள் சூட்டும்!
     செந்தமிழின் சிரிப்பழகைப் பாக்கள் மீட்டும்!
வெடிகளும் சிரிப்பழகை வானில் மேவும்
     விந்தைமிகு மத்தாப்புச் சரங்கள் கூட்டும்!
குடிகளுறும் சிரிப்பழகைச் செங்கோல் நாட்டும்!
     குழந்தைகளின் சிரிப்பழகே அழகின் உச்சம்!

குளத்துக்கு மரையழகு! செங்கண் கொண்ட
     குயிலுக்குக் குரலழகு! குவிந்த செல்வ
வளத்திற்குக் கொடையழகு! தோன்றி யுள்ள
     வாழ்வுக்குப் புகழ்அழகு! வாய்த்த நம்மின்
உளத்திற்கு நல்லொழுக்கம் அழகு! எந்த
     உலகுக்கும் ஒற்றுமையே அழகு! கோயில்
தளத்திற்குச் சிற்பங்கள் அழகு! ஈடில்
     தமிழுக்குத் தொன்மரபே அழகாம் என்பேன்!

கண்ணுக்கு அவள்..அழகு! இன்பம் ஊட்டும்
     கவிதைக்கு நான்..அழகு! பசுமை பொங்கும்
மண்ணுக்கு வயலழகு! தோகை மின்னும்
     மயிலுக்கு நடமழகு! மயக்கும் மாலை
விண்ணுக்கு நிலவழகு! வெற்றி பெற்ற
     வீரர்க்கு நடையழகு! இளமை பூத்த
பெண்ணுக்கு இடுப்பழகு! மொழிகள் தம்முள்
     பெருந்தமிழே பேரழகு வாய்த்த தென்பேன்!

பொற்குழம்பைத் தடவுமொளி அழகு! பூத்த
     பூவழகு! புறாவழகு! அன்பை இட்டு
நற்குழப்பை ஊட்டும்தாய் அழகு! அன்ன
     நடை..அழகு! நல்லார்நட்பு அழகு! நன்றே
முற்றுடம்பைப் பெற்றகனி அழகு! துள்ளும்
     முயல்அழகு! கயல்அழகு! தமிழை நாளும்
கற்றுடம்பை வளர்த்திட்டால் வாழ்க்கைப் பாதை
     கண்கவரும் சோலையென அழகை மேவும்! 

[தொடரும்]