samedi 22 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 6 ]


ஏக்கம் நுாறு [பகுதி - 6]


வரும்பாதை பூத்தாடும்! பறவைக் கூட்டம்
     வசந்தத்தை இசைத்தாடும்! மயில்கள் மின்னும்
அருந்தோகை விரித்தாடும்! வெள்ளை அன்னம்
     அகங்கருத்து மறைந்தோடும்! மரங்கள் யாவும்
பெரும்போதை கொண்டாடும்! பட்டாம் பூச்சி
     பெருமையுடன் பறந்தாடும்! அன்பை அள்ளித்
தருங்கோதை தண்ணழகை உயிர்கள் காணத்
     தவமிருந்து கண்கோடி வரமாய்க் கேட்கும்! 26

பேருந்தில் அவளுடன்  அமா்ந்து கொண்டு
     பேசுவது பேரின்பம்! மெல்லக் காதல்
சீருந்து மலா்க்கொடியை ஏந்திச் செல்லும்!
     சில்லென்றே உடல்கூசும்! உரசும் தோள்கள்!
கூருந்து வேகமென இதயக் சுடு
     குருவிகளின் இறக்கைகளைக் கட்டிப் பாயும்!
காருந்து வான்மேவும்! கோடிப் பூக்கள்
     கமழ்கின்ற கவியுந்து துள்ளும் என்னுள்! 27

வாரணிந்த குவிமார்பு! கவிஞன் என்னைக்
     கூரணிந்து குத்துவதேன்? பெண்மை போற்றும்
சீரணிந்த செழும்பாவை ஊடல் கொண்டு
     சித்திரமாய்ச் சிணுங்குவதேன்?  ஒளிரும் தங்கத்
தேரணிந்த பெருந்தேவி பேசும் சொற்கள்
     தேனணிந்து மயக்குவதேன்? என்றன் வாழ்வு
பேரணிந்து சிறந்தோங்கப் பேணும் பெண்ணே!
     காரணிந்த குழல்மாதே! கண்ணே பாராய்! 28

கை..தொட்ட பொழுதினிலே கவிதை பூக்கும்!
     கண்தொட்ட உன்னழகு கவலை நீக்கும்!
தை..தொட்ட திருநாளாய்த் தழைக்கும்! இன்பத்
     தமிழ்.. தொட்ட சால்புகளை விளைக்கும்! அன்பே!
மை.. தொட்ட மலா்விழிகள் மனத்தைக் கவ்வ
     மையிட்ட மந்திரமோ? என்றன் நெஞ்சப்
பை..தொட்ட பார்வையினை மண்டைக் கூட்டில்
     பத்திரமாய் வைத்துள்ளேன்! உயிரின் சொத்து! 29

பொங்கிவரும் உன்னழகு புலவன் நெஞ்சைப்
     பொடிப்பொடியாய் ஆக்குதடி! வளமை இன்றி
மங்கிவரும் வயற்றோட்டம் உன்கால் பட்டு
     மறுமலா்ச்சி காணுதடி! என்றன் வாழ்வு
தொங்கிவரும்! துவண்டுவரும்! ஏக்கம் கோடி
     தொடா்ந்துவரும்! துாயவளே! காதல் எண்ணம்
தங்கிவரும் பொற்கோயில்! பூந்தேன் ஊற்று!
     தவழ்ந்துவரும் தண்ணிலவும் எனக்கு நீயே! 30
                                      (தொடரும்) 

6 commentaires:

  1. பொங்கி வரும் வரிகளை ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      திண்டுக்கல் தனபாலன் தினமும் வந்தே
      தீட்டுகின்ற கருத்துக்கு நன்றி! நன்றி!!
      குண்டுக்கல் போலிருக்கும் நபரைக் கூடக்
      குதித்தாட வைத்திடுமே என்றன் பாடல்!
      கண்டுச்சொல் தான்தொடுத்து வாழ்த்து கூறும்
      கண்ணியத்தை வாழ்த்துகிறேன்! தொடா்க நாளும்!
      நண்டுப்பல் காரா்களும் உன்னைப் பார்த்தால்
      நாவினிக்கப் பேசுகின்ற கலையைக் கற்பார்!

      Supprimer
  2. கவிதைகளின் வருணனையும் கற்பனையும் மிக அருமை

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      வாழ்த்துக்கு நன்றி! வருகை வளமுட்டும்!
      சூழ்விக்கும் சொற்கள் சுடா்ந்து

      Supprimer

  3. ஏக்கம் பெருக்கெடுத்து என்னைத் தினம்வாட்டும்!
    பூக்கும் உணா்வுகள் புல்லாிக்கும்! - காத்துவக்கும்
    கம்பன் விருத்ததெனக் காதல் விருத்தத்தை
    இம்மண் எழிலாக இங்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. இம்மண் உளவரையில் இன்பத் தமிழிருக்கும்!
      எம்மின் கவியிருக்கும் என்றுரைத்தீர்! - அன்பொழுகும்
      சொல்லில் அகமகிழ்ந்து சொக்குகிறேன்! என்கவிதை
      இல்லில் திருவிழா இன்று!

      Supprimer