முதலியார்பேட்டைச்
சீனிவாசப் பெருமாள் பதிகம்
1.
சீர்மேவும் வன்னியரின் செல்வத் திருமாலே!
கார்மேனி வண்ணனே! கண்ணனே! - பார்மேவும்
திங்கள் திகழொளியே! செம்பொருளே! வாழ்வினில்
தங்கும் நலங்களைத் தா!
2.
தாமோ தரனே! தனிப்புகழ் பெற்றிலங்கும்
மாமோ கனனே! மலர்முகனே! - காமோதும்
தென்றல் தருஞ்சுகமே! தென்னவனே! என்றெனுக்கு
உன்றன் உறவே உறவு!
3.
உறவானாய்! கொண்ட உயிரானாய்! என்றும்
அறமானாய்! அன்பானாய்! ஆக்கும் - திறமானாய்!
தீட்டும் தமிழானாய்! தேடிவரும் நீரானாய்!
சூட்டுமணி யானாய்ச் சுடர்ந்து!
4.
சுடராழி கண்டேன்! திருச்சங்கம் கண்டேன்!
இடராழி நீக்குமெழில் கண்டேன்! - தொடராழி
என்னும் பிறப்பகலக் கண்டேன்! இன்மையெலாம்
ஒன்னும் நிலைகண்டேன் ஓர்ந்து!
5.
ஓது மறையே! உலகளந்த பெம்மானே!
மாதுறை மார்பனே! மாயவனே! - சூதுமனம்
ஏன்எனக்குச் சொல்லரசே! எந்நாளும் துாயமனத்
தேன்எனக்கு ஈவாய்த் தெளிந்து!
6.
தெளிந்த இசையோடு தேன்தமிழில் பாட!
விளைந்த பசுமைவளம் மேவ! - வளைந்தாடும்
வேய்க்குழல் மாமணியே! வெல்லும் திறனுடைய
தாய்த்தமிழ் ஊட்டும் தழைத்து!
7.
ஊட்டும் குவிமுலைபோல் ஊறும் அருளாளா!
வாட்டும் துயர்போக்கும் மாண்பாளா! - காட்டு
மலர்மணமாய் வீசும் மணவாளா! என்றன்
உளம்நிறைந்த சொல்லாய் ஒளிர்!
8.
சொற்சிறக்க என்றும் சுடர்பனுவல் சீர்நுாலைக்
கற்றுக் களித்திடக் கண்காட்டு! - நற்றவனே!
நாரா யணனே! நறுஞ்சீனி வாசனே!
தீராய் வினைகளைத் தீய்த்து!
9.
வினைகளைத் தீய்த்து விழைந்தெனைக் காத்து
நினைவினை மேலுயர்த்தி நிற்பாய்! - பினைந்துள்ள
பொல்லாப் பிணிநீங்கப் பொன்னொளிர் தாள்காட்டும்!
எல்லாமும் ஆனாய் எனக்கு!
10.
எல்லா உயிர்க்கும் இனிமை தருகின்ற
வெல்லும் திருமாலே வேண்டுகிறேன்! - நல்லுயா்
அப்பனும் அம்மையும் ஆனவனே! உன்புகழைச்
செப்பச் சிறக்குமாம் சீர்!
30.01.2015
30.01.2015