mercredi 12 septembre 2012

நல்லதமிழ் [ பகுதி - 6 ]




தொலைப்பேசி - தொலைபேசி

தொலைபேசி என்பது சரி. தொலைபேசி - தொலைக் கண் பேசுகருவி, மனைக்கண் புகு விழா, இவை போலும் ஏழாம் வேற்றுமைத் தொகையில் வருமொழி வினையாயவிடத்து இயல்பாகும்.

பயிர் - பயறு - பருப்பு

பயிர், பயறு, பருப்பு இவற்றில் எது சரி? மூன்றும் சரியே. பயிர் - விளைபொருள். பயறு, பருப்பு - ஒரு வகைத் தானியம்.

அவைகள் - அவை

அவைகள் அவைகளை என்று எழுத வேண்டாம். அவை அவற்றை என்று எழுதுக. (அவை, அவற்றை என்று சொன்னாலே பன்மையைக் குறிக்கும்) எல்லா மடல்களைக் கொண்டு வா என்பது பிழை. எல்லா மடல்களையும் கொண்டு வா என்பதே சரி. அனைத்துக் கடைகள் அடைக்கப்பட்டன என்பது பிழை. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன என்பதே சரி.

ஏழ்மை - ஏழைமை

வறுமை என்ற பொருளில் ஏழ்மை என்பது பிழையாகும். ஏழைமை என்பதே சரியாகும். ஏழைமை - ஏழைத்தன்மையைக் குறிக்கும்.

நூலைக் கோர்த்து - நூலைக் கோத்து

ஊசியில் நூலைக் கோர்த்துக் கொடு என்பது பிழை. ஊசியில் நூலைக் கோத்துக் கொடு என்பதே சரி. கோறுகிறேன் என்பது பிழை. கோருகிறேன் என்பதே சரி. அதுவல்ல என்பது பிழை. அதுவன்று என்பதே சரி.

தேனீர் - தேநீர்

தேன் 10 நீர் ஸ்ரீ தேனீர் என்று வரும். தேயிலையில் தயாரிக்கும் நீரைத் தேநீர் என்று எழுத வேண்டும். வயிறாற உண்டான், வாயாற வாழ்த்தினார் என்பன பிழை. வயிறார உண்டான், வாயார வாழ்த்தினார் என்பனவே சரி.

ஒவ்வொரு பையன்களும் - ஒவ்வொரு பையனும்

ஒவ்வொரு பையன்களும் என்பது பிழை. ஒவ்வொரு பையனும் என்பதே சரி. பாலோ அல்லது தேநீரோ குடிப்பேன் எனல் வேண்டாம். பாலோ தேநீரோ குடிப்பேன் என்றோ, பால் அல்லது தேநீர் குடிப்பேன் என்றோ கூறுக.

புகழ்தமிழ் - புகழ்த்தமிழ்

மேலுள்ள இரண்டு சொற்களும் சரியானவையே. புகழ்த்தமிழ் - புகழை உடைய தமிழ் ( இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.) புகழ்தமிழ் வினைத்தொகையாகும். (வினைத்தொகையில் வல்லினம் மிகாது)

எல்லாரும் - எல்லோரும்

இவ்விரு சொற்களும் சரியானவையே. '', ஆகலும் செய்யுளில் உரித்தே'' என்னும் இலக்கணப்படி, செய்யுளில் நல்லான் என்னும் சொல்லில் உள்ள '''' '''' மாறி நல்லோன் என வந்தது. செய்யுள்மரபு உரைநடையிலும், பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுவிட்டதால் எல்லாரும் என்பது எல்லோரும் என மறுவடிவம் நிலைத்துவிட்டது.

அவரைத் தொடர்பு கொள் - அவரோடு தொடர்பு கொள்

அவரைத் தொடர்பு கொள் என்பது பிழை. அவரோடு தொடர்பு கொள் என்பதே சரி. இங்கே பழங்கள் கிடையாது என்பது பிழை. இங்கே பழங்கள் கிடையா என்பது சரி. இளநீர் கிடைக்க மாட்டேன் என்பது பிழை. இளநீர் கிடைக்கிறதில்லை என்பதே சரி. வேலையை எடுத்துக் கொள் என்பது தமிழ் மரபன்று. வேலையை ஒப்புக் கொள் என்பதே தமிழ் மரபு.

கணவன் மற்றும் மனைவி - கணவன் மனைவியர்

கணவன் மற்றும் மனைவி எனபது தமிழ் மரபன்று. கணவன் மனைவியர்,  கணவனும் மனைவியும் என்பனவே தமிழ் மரபு. தாய் தகப்பன்கள் என்பது பிழை. தாய் தகப்பன்மார் என்பதே சரி.
                                                                                                                                           (தொடரும்)

2 commentaires:


  1. நற்றேன் சுவைசுரக்கும் நல்ல பதிவினைக்
    கற்றால் களிப்புறுவார்! காத்திடுவார்! - கற்காமல்
    என்ன எதுதென்றே ஏதும் அறியாமல்
    இன்னும் எழுதுவதோ இங்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்றுக் கவிபாடு! கன்னல் தமிழ்ஓங்கும்!
      முற்றும் சுவையூறும்! முத்தமிழ் - விற்றுப்
      பிழைப்பார்! விரும்பிப் பிழைவிளைப்பார்! நஞ்சியினைக்
      குழைப்பார்! அழிவார் குலைந்து!

      Supprimer