samedi 28 mars 2020

இரு சொல் எழிலணி வெண்பா


வெண்பா மேடை - 160
 
இரு சொல் எழிலணி வெண்பா
 
இரண்டு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது இரு சொல் எழிலணி வெண்பாவாகும்.
 
ஓங்கி அளந்ததெது? ஓதுகுறள் பேரழகாய்த்
தாங்கும் அளவெது தங்கமே! - வீங்குபுகழ்ச்
சீரூட்டும்! செம்மைச் செழிப்பூட்டும் ஈரடியே!
பேரூட்டும் போற்றிப் பிடி!
 
கருத்துரை
 
'ஓங்கி உலகலளந்த உத்தமன் பேர்பாடி' எனக் கோதையின் திருப்பாவை உரைக்கும். ஓங்கி உலகத்தை அளந்தது திருமாலின் ஈரடி. குறள்வெண்பா ஈரடி. நெடியவனின் திருவடியையும், திருக்குறளையும் போற்றிக் கைபிடித்தால் சீர் பெருகும், வாழ்வு செழிக்கும். பேர் மேவும்.
 
இரு சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.03.2020


dimanche 22 mars 2020

நொண்டிச் சிந்து

சிந்துப்பா மேடை - 6
 
நொண்டிச் சிந்து
 
பெயர் விளக்கம்
 
நொண்டுதல், ஒரு காலும் மற்றொரு காலும் நீளம் குறைந்தும் கூடியும் இருப்பதால் உண்டாவது. அடி வைக்கும் அளவிலும் கூடுதல் குறைதல் உண்டாகும். நொண்டிச் சிந்தின் ஓரடியில் முதல் அரையடி இரண்டாம் அரையடியைவிடக் குறைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது என்றுரைபார். இக்கருத்துச் சரியன்று. இப்பாடலின் ஓரடியின் இரண்டு அரையடிகளும் சமமான இசைப்பா அசைகளைக் கொண்டவை. ஒவ்வொரு சீரும் நான்கு அசைகளைப் பெற்று இரண்டு அரையடிகளும் சமமாக நடக்கும்.
 
களவாடியதனால் தண்டனையாகக் கால்வாங்கப்பட்டு, நொண்டியாகிப் போன கள்வனின் கதையை நொண்டி நாடகம் என்ற பெயரில் சென்ற நுாற்றாண்டுகளில் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் நொண்டியானவன் பாடும் பாடல் நொண்டிச் சிந்து எனப் பெயர் பெற்றது.
 
சிந்துப் பாக்களில் அமைந்திருக்கின்ற சீர்களில் உள்ள உயிர்க்குறில்[அ] , உயிர்நெடில்[ஆ], மெய்யோடு கூடிய குறில்[க], நெடில்[கா] ஆகிய ஒவ்வோர் உயிரும் ஓரசையாகும்.
 
கலைமகளே!
 
1.
அருங்கவி புலவனை யே... - அவனியில்
அலையுறப் புரிவதேன் கலைமக ளே...
பெருஞ்சுவை கனியினை யே... - தரைதனில்
பிழிந்திடும் பழியுமேன் மொழிமக ளே...
 
2.
கொடியவர் உறவினை யே... - மனமுறக்
கொடுத்ததும் துயருற விடுத்தது மேன்...
அடியவர் அருளமு தே... - அருமகன்
அடைநலம் உறுதடை படைத்தது மேன்...
 
3.
கடைநிலை நபர்களை யே... - உயர்வெனக்
கருதுவ தோ.மனம் உருகுவ தோ...
தடைநிலை செயல்களை யே... - மகிழ்வெனத்
தரிப்பது வோ.துயர் விரிப்பது வோ...
 
4.
நறுமலர் வனத்திடை யே... - ..சிறு
நரிபல புகுந்தடம் புரிவது வோ...
திருமலர் மனத்தவ ளே... - .உன்னருள்
திகழொளி எனையுற அகமிலை யோ...
 
5.
நிலமுறு வா.ன்மழை யால்... - வளமுறு
நிலையுறு மே.புவி கலையுறு மே...
நலமுறு கவிமழை யால்... - எனதுயிர்
நனைந்திட வே.அருள் புனைந்திடு வாய்...
 
6.
இனமொளிர் செயலா.ற் றி... - .நாளும்
எழுமனம் இருளதில் முழுகுவ தோ...
மனமொளிர் கவிமக ளே... - .உன்மகன்
மதியொளி குறையுற விதியுள தோ...
 
7.
பணியொளிர் புலவனு ளம்... - சிறுநொடி
பாழ்நிலை அடைவது சூழ்நிலை யோ...
அணியொளிர் தமிழ்மக ளே... - .உன்மொழி
அகமுறும் எனக்கினி நிகரிலை யே!
 
8.
ஆ.சையின் சுழற்சியி லே... - .என்னுயிர்
அடிமுதல் முடிவரை துடிப்பது வோ...
ஓ.சையின் இசைமக ளே... - .உன்னருள்
ஓங்கிட உளமுறும் தீங்கறு மே...
9.
கற்பொளி அருளிடு வாய்... - கலையொளி
கவினுற எனதுளம் தவழ்ந்திடு வாய்...
பொற்பொளி புலமையி னால்... - ..என்றும்
புகழொளி வீ.சிடும் தகைதரு வாய்!
 
10.
உன்.னடி தொழுதிடு வேன்... - ..இன்ப
உயர்தமிழ் உவப்புற நயந்தருள் வாய்...
பொன்.னடி சுடர்மக ளே... - ..என்றன்
புலமுறும் உணர்வினில் வலம்வரு வாய்...
 
[பாட்டரசர்]
 
நொண்டிச் சிந்து என்னும் நாட்டுப்புறப் பாடல்வகையில் பத்துக் கண்ணிகள் பாடியுள்ளேன். ஓரடியில் எட்டுச் சீர்கள் இருக்கும். மேலுள்ள முதல் கண்ணியில் 'அருங்கவி' என்பது முதல் 'கலைமகளே' என்பது வரையில் ஓரடி. 'பெருஞ்சுவை' என்பது முதல் 'மொழிமகளே' என்பது வரை இரண்டாம் அடி.
 
இரண்டு எண்சீரடிகள் ஓர் எதுகையால் தொடுக்கப்பட்டிருக்கும்.
 
ஒவ்வோர் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்திருக்கும்.
 
நான்மை என்னும் தாளநடையுடன். [ஒவ்வொரு சீரிலும் நான்கு அசைகள் இருக்கும்]
 
நான்காம் சீரில் தனிச்சொல் அமையும்.
 
மூன்றாம் சீரிலும், எட்டாம் சீரிலும் ஒரே உயிர் இருக்கும், அவ்வுயிர் அளபெடுத்து நீண்டு ஒலிக்கும். [அளபெடுக்கும் ஒவ்வோர் எழுத்தும் ஓரசையாகும்]
 
பாடும்போது இசை நீளும் இடங்களைப் புள்ளியிட்டுக் காட்டப்படும். எழுதும்போது இப்புள்ளிகள் இடுவதில்லை. கற்போர் உணரும் பொருட்டு மேலுள்ள பாடலில் அசை நீளும் இடங்களில் புள்ளியிட்டுள்ளேன்.
 
இலக்கணம்
 
எண்சீர் அடிகள் இரண்டோர் எதுகையாய்,
ஐந்தாம் சீர்தொறும் மோனை அமைந்து,
நான்மை நடையுடன், நாலாஞ் சீரில்
தனிச்சொல் தழுவி இனித்திட நடப்பது.
நொண்டிச் சிந்தென நுவலப் படுமே.
   
நாலசைத் தனிச்சொல் நடுவே மடுத்தலும்,
ஐந்தாஞ் சீரிலும் ஏழாம் சீரிலும்
எதுகை பெறுதலும் எழில்மிகத் தருமே.
  
[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப் பாவியல் - 35. 36]
  
நொண்டிச் சிந்துகளில் நாலாம் சீராக நடுவே வரும் தனிச்சொல் நான்கு உயிர்ளைப் பெற்றுவருவதும், ஒவ்வோரடியின் ஐந்தாம் சீரிலும், ஏழாம் சீரிலும் எதுகை பெற்றுவருவதும் அப்பாடலுக்கு மிகுந்த அழகை அளிக்கும்.
   
இன்றைய நொண்டிச் சிந்துக்களில் தனிச்சொற்கள் பெரும்பாலும் ஈரசைச் சொற்களாக உள்ளன. ஓரசைச் சொற்கள் அருகி வருகின்றன.
 
அத்தின புரமுண் டாம் - இவ்
வவனியி லேயதற் கிணையிலை யாம்!
பத்தியில் வீதிக ளாம் - வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்!
முத்தொளிர் மாடங்க ளாம் - எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்!
நத்தியல் வாவிக ளாம் - அங்கு
நாடும்இ ரதிநிகர் தேவிக ளாம்!
 
[மகாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம் - 7]
 
இதில் 'வெள்ளை', 'எங்கும்', 'அங்கு' என ஈரசைச்சொற்கள் பெரும்பாலும் தனிச்சொல்லாக உள்ளன. 'இவ்' என்னும் ஓரசைச்சொல் அருகி வந்தது.
 
விரும்பிய பொருளில் 'நொண்டிச் சிந்துவில்' இரண்டு கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
21.03.2020.

lundi 9 mars 2020

ஆனந்தக் களிப்பு

பண்ணிசைப் பைந்தமிழே!
 
நற்குறள் பாதையை நாடு - தம்பி
  நாற்றிசை போற்றிட நன்னடை போடு!
பொற்புடைச் சீரினைப் பாடு - பொல்லாப்
  பொய்மையைப் போக்கிடப் போரிடக் கூடு!
சொற்றிறம் பூத்துளம் ஆடு - மேடை
  சொக்கிடக் சொக்கிடத் தேன்கவி சூடு!
பற்பல பூக்களின் காடு - தமிழ்
  பண்மது வூறிடும் பார்இலை ஈடு!
 
நம்மொழி செம்மொழி யாகும் - தம்பி
  நாடிநாம் கற்றிட நல்லறம் மேவும்!
இம்மெனும் முன்கவி தோன்றும் - மனம்
  ஏந்திநாம் ஏத்திடப் பன்னலம் ஊன்றும்!
அம்மனின் பேரருள் பூக்கும் - என்றும்
  ஆயிரம் ஆயிரம் தொன்மையைக் காக்கும்!
அம்மணி சூடியே மின்னும் - தமிழ்
  ஆடெழில் நாட்டியம் பீடெலாம் பின்னும்!
 
முன்மொழி நம்மொழி சாற்று - தம்பி
  முத்தொளிர் முத்தமிழ் மூச்சுறும் காற்று!
பொன்மொழி நம்மொழி ஓது - இந்தப்
  பூமியில் எங்கினும் ஈடிணை யேது?
வன்மொழி மார்புற ஓங்கும்! - மலர்
  மென்மொழிச் சீருற மேதினி ஏங்கும்!
நன்னெறி பூத்திடும் காடு - தமிழ்
  நல்வழி காத்திடும் நற்றவ வீடு!
 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
09.03.2020.

dimanche 1 mars 2020

நொண்டிச் சிந்து


திருமலைச் செல்வன்
[நொண்டிச் சிந்து]
 
1.
திருமலை அருள்பெற வே - செம்மை
செழித்திடும் நெறியினில் கொழித்திடு வாய்!
பெருமலை அழகனை யே - உள்ளம்
பிணைந்திட அறமெனும் அணையுறு வாய்!
 
2.
அமுதினை அருந்திட வே - திருமால்
அடிகளை மனமதில் பதித்திடு வாய்!
குமுதினை நிகர்த்தது வே - நல்லகம்
குளிர்ந்திட அணிந்திடு மிளிர்ந்திடு வாய்!
 
3.
பொழில்கமழ் கனிமலை யே - எங்கும்
புகழொலி பரவிடும் நிகரிலை யே!
எழில்கமழ் மனமுற வே - என்றும்
இசைத்திடு! வினையுறும் வசையறு மே!
 
4.
பொறிவண்டு சுழன்றிடு மே - மலரில்
பொழுதெலாம் சுவைமது ஒழுகிடு மே!
நெறிகொண்டு நெகிழ்ந்திடு மே - நெஞ்சம்
நிறைகொண்டு திருப்பதம் உறைந்திடு மே!
 
5.
குளிர்காற்றுத் தழுவிடு மே - வாழ்வின்
குணமோங்கக் குறைநீங்க மணமிடு மே!
ஒளிர்முத்துச் சரமிடு மே - உற்ற
உயிரோங்க உறவோங்கப் பயனிடு மே!
 
6.
பொன்னொளி மின்னிடு மே - கண்டு
புரைமனப் பிழையற மறையுறு மே!
இன்னொலி செவியுறு மே - வேயின்
இசையொலி காற்றுறும் திசையுறு மே!
 
7.
தேருலாக் காட்சியி லே - உள்ளம்
திளைத்திடு மே!இன்பம் விளைத்திடு மே!
சீருலா மாட்சியி லே - வாழ்வு
சிறந்திடு மே!செவ்வான் திறந்திடு மே!
 
8.
ஒருநொடிப் பார்வையி லே - மாயோன்
உருவெழில் உயர்வினை அருளிடு மே!
திருவடி உறவினி லே - உயிர்கள்
கருவடி நிலையற உருகிடு மே!
 
9.
சங்குடன் சக்கர மும் - கைகள்
தாங்கிடப் பழவினை நீங்கிடு மே!
இங்குயிர்த் துாய்மையி னால் - நன்மை
தேங்கிடத் திருவருள் ஓங்கிடு மே!
 
10.
நெடியவன் நினைவினி லே - ஒன்றி
நிலையுற நிம்மதி தலையுறு மே!
கொடியவர் பகையறு மே - தொண்டர்
குலமுறும் பெருவரம் குலவிடு மே!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
01.03.2020.