வெண்பா மேடை - 91
பொருள் பின்வரும்நிலை யணி வெண்பா!
நனிமண மல்லிகையின் நன்மணம் தோற்கும்!
பனிமணக் கூர்விழி பார்வை - எனைத்தாக்கும்!
நெஞ்சம் உறுவலி நீண்டு கழிதுன்பம்
விஞ்சுமே சால விரிந்து!
கண்தீட்டும் காவியமும், கையெழுதும் ஓவியமும்
பண்கட்டும் நன்னெஞ்சும் பாழ்படுத்தும்! - பெண்மணியே!
நான்வடிக்கும் பாப்படித்து நன்மடலை நீபடைத்துத்
தேன்குடிக்கும் வாழ்வைச் செதுக்கு!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
ஒரு செய்யுளில் ஒரு சொல் பலமுறை ஒரே பொருளில் பயின்றுவருவது சொற்பொருட்பின்வரு நிலையணி எனப்படும்.
ஒரு செய்யுளில் ஒரு சொல் பலமுறை வேறு வேறு பொருளில் பயின்றுவருவது சொற்பின் வருநிலையணி எனப்படும்.
ஒரு செய்யுளில் பல சொற்கள் ஒரு பொருளில் பயின்றுவருவது பொருட்பின்வருநிலை யணி எனப்படும்.
மேற்கண்ட முதல் வெண்பாவில் நனி, கூர், உறு, கழி, சால ஆகிய சொற்கள் மிகுதி என்ற ஒரு பொருள்மேல் நின்றனவாதலின் பொருள் பின்வரும்நிலை யணியைப் பெற்றது.
இரண்டாம் வெண்பாவில் தீட்டுதல், கட்டுதல், வடித்தால், படைத்தல், செதுக்குதல் ஆகிய சொற்கள் எழுதுதல் என்னும் ஒரு பொருள்மேல் வந்தனவாதலின் பொருள் பின்வரும்நிலை யணியைப் பெற்றது.
இவ்வாறு பல சொற்கள் ஒரு பொருளில் வருமாறு, விரும்பிய பொருளில் ஒரு வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து பொருள்பின்வருநிலை யணி வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
30.07.2018