vendredi 29 novembre 2013

கொஞ்சுந் தமிழ்

கொஞ்சுந் தமிழ்

மயக்கும் இன்ப மதுவே வாராய்!
மணக்கும் வண்ண மலரே வாராய்!
வியக்கும் இனிய தமிழே வாராய்!
வெற்றி நிலைக்க விரைந்தே வாராய்!

படிக்கப் படிக்கப் படரும் தமிழே!
பாடப் பாடச் சுடரும் தமிழே!
குடிக்கக் குடிக்கச் சுரக்கும் தமிழே!
குன்றாச் சுவையைக் கொடுக்கும் தமிழே!

என்னை யாளும் வண்ணத் தமிழே
என்றன் நாவில் இருக்க வாராய்!
உன்னைப் போற்றி உள்ளம் மகிழ
உன்றன் அருளை உவந்து தாராய்!

10.06.1980 

jeudi 28 novembre 2013

தும்பிக்கை யால்எனைத் தூக்கு!




தும்பிக்கை யால்எனைத் தூக்கு!
 
வெற்றி விநாயகனே! வேழ முகத்தவனே!
முற்றி வரும்வினையை முற்றும் முடிப்பவனே!
பற்றிக் கிடக்கும் பழியகல உன்னடியை
ஒற்றிக் கிடக்க உதவு!

எம்பிக் குதிக்கும் இருவினைகள்! நூல்முடியில்
தும்பி துடிக்கும் பெருந்துன்பம்! - செம்பொருளே!
நம்பி..கை ஏத்துகிறேன்! அம்பிகை மைந்தனே
தும்பிக்கை யால்எனைத் தூக்கு!

அம்மி கிடக்கும் அசையாமல்! ஆடியே
கும்மி அடிக்கும் கொடுந்துயரம்! - அம்மம்மா!
நம்பிக்கை வைத்தேன் நகர்ந்தன தீவினைகள்
தும்பிக்கை என்றன் துணை!

10.09.2010 
 

mercredi 27 novembre 2013

பாவாணர் (தாயும் சேயும்)

மொழிஞாயிறு 
ஞா. தேவநேயப் பாவாணா்

மொழிபலவும் உணர்ந்தவராய் இருந்த தாலே
       முத்தமிழே உயர்ந்ததெனும் முடிவைக் கண்டார்!
பழிபலவும் தன்முன்னர்ச் சூழ்ந்திட் டாலும்
       பைந்தமிழின் சீருரைக்கத் தயங்க மாட்டார்!
வழிபலவும் வாழ்வதற்கே இருந்திட் டாலும்
       மதிமயக்கும் வேற்றுமொழி பேச மாட்டார்!
இழிவுபல சிறுமதியார் செய்திட் டாலும்
       எழில்தமிழைக் காத்திடவே தவற மாட்டார்!

முந்துதமிழ் மூவேந்தர் முறையாய்க் காத்த
       முத்தமிழ்தாம் மொழிகளிலே மூத்த தாகும்!
செந்தமிழில் வடசொற்கள் சேரு மாயின்
       சிறப்பான நம்மொழியும் சிதைந்து போகும்!
அந்தமிழர் துயில்வதனால் ஆங்கி லந்தான்
       அருந்தமிழை விரைவாக விழுங்கக் கூடும்!
நந்தமிழர் இவையுணர்ந்து நாட்டத் தோடு
       நற்றமிழைப் போற்றிடவே வேண்டும் என்றார்!

செந்தமிழின் வேர்ச்சொல்லைச் சீராய் ஆய்ந்து
       சிறப்பான ஆய்வுரைகள் செய்[து] உயர்ந்தார்!
சிந்தைமகிழ் புதுமைகளைச் செப்பி நின்று
       சிறுமதியோர் சூழ்ச்சிக்கு வேட்டு வைத்தார்!
நந்தமிழே ஆரியத்தின் மூல மென்று
       நறுக்காகத் தெளிவுறவே எடுத்து ரைத்தார்!
வந்துபுகா(து) அயற்சொற்கள் அவர்ப டைப்பில்
       வண்டமிழை உயிரெனவே கொண்ட தாலே!

முத்தமிழ்ச்சீர் இயலிசைசேர் நாட கத்தை
       மூவேந்தர் வளர்த்திட்டார் அந்த நாளில்!
முத்தான செந்தமிழாம் நந்தம் தாயை
       முறையாகக் கல்லாதார் தமிழர் ஆகார்!
சொத்தாகும் தமிழ்நூலைக் கற்றுங் கூடச்
       சொல்வேறு செயல்வேறாய்த் திரிகின் றாரே
'செத்தாலும் தமிழ்பேசிச் சாவீர்' என்றே
       சீறிவரும் சொல்லெடுத்துச் சாடி னாரே!

தம்நலத்தைப் பாராமல் கண்துஞ் சாமல்
       தமிழ்மொழியின் உயர்வுக்கே பாடு பட்டார்!
நம்பெயரை நாம்வாழும் ஊரின் பேரை
       நற்றமிழில் கண்டிடவே விருப்பப் பட்டார்!
பம்பரமாய்த் தமிழ்த்தொண்டு துணிச்ச லோடு
       பாரினிலே புரிந்தவரை மறக்கப் போமோ?
செம்மொழியாம் நம்மொழியைக் காலப் போக்கில்
       சிதைக்கவந்த பிறமொழியைத் துரத்திட் டாரே!

தாய்மொழியின் உணர்வொடு,தாய் நாட்டுப் பற்றும்,
       தந்நலமே இல்லாத வாழ்வுங் கொண்டு
தூய்மையதாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகத்
       தொடர்ந்துபல நற்பணிகள் புரிந்து நின்றார்!
வாய்மறையாம் குறளுக்குப் புதிய தாக
       வளமான உரைகண்டு மகிழ்ந்து போனார்!
சேய்பிறக்கத் தாய்மகிழுந் தன்மை போன்று
       செந்தமிழ்த்தாய் மகிழ்ந்தனள்பா வாண ராலே!

(தாய் - தமிழ், சேய் - பாவாணர், 
23-03-2002 அன்று புதுவை நற்றமிழ் இதழ் நடத்திய 
பாவாணர் நூற்றாண்டு விழா மலருக்கு எழுதிய பாக்கள்)

lundi 25 novembre 2013

தமிழ்ச்தேசியத் தலைவா்




தமிழ்ச்தேசியத் தலைவா்

எடுப்பு

தமிழொளி பாயுது கதிர்போலே! – எம்
தலைவனின் மறமொளிர் மதியாலே!

தொடுப்பு

அழகொளிர் தமிழே! செம்மொழியே! – புக
ழார்பிரபா கரனின் கண்ணொளியே!

முடிப்புகள்

நான்பெரிது! நீபெரிது! இனிப்போதும்! – நம்
நாடுபெரி தெனக்கொண்டால் புகழ்மோதும்!
வான்பெரிது! கடல்பெரிது! கவியோதும்! – வளர்
வண்டமிழின் சுவைபெரிது! இணையேதும்?

தமிழென இனித்திடும் வன்மறவன்! – பெற்ற
தாயென அணைத்திடும் அன்பிறைவன்!
இமையெனக் காத்திடும் நற்றலைவன்! – உயிர்
இனமென வாழ்ந்திடும் பொன்னிலவன்!

சிங்களப் பேய்களை ஓட்டினனே! – தன்
சிந்தையில் பெருங்கனல் மூட்டினனே!
பொங்கிடும் புகழ்வழி தீட்டினனே! – புவிக்குப்
பூந்தமிழ் வீரத்தைக் காட்டினனே!

நிகரிலா நெஞ்சனைப் பாடுகிறோம்! – எம்
நினைவெலாம் தலைவனைச் சூடுகிறோம்!
அகமெலாம் ஈழமே...! ஆடுகிறோம்! – வீரம்
ஆர்த்தெழப் புலிநடை போடுகிறோம்!

தமிழ்த்தேசியத் தலைவா் பொன்விழா மலா் 2004

dimanche 24 novembre 2013

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 18




நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்


வணக்கம்!

கம்பன் கவியே கவியென்று தேனளித்தீா்!
அம்மன் சிலையாய் அழகளித்தீா்! - எம்மனம்
பொங்கி விளைக்கும் புகழ்வெண்பா! உன்னிடத்தில்
தங்கிக் தழைக்கும் தமிழ்!

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முனைவா் இர.வாசு தேவன் மொழிகேட்(டு)
அனைவரும் ஆடி மகிழ்வா்! - புனைந்த
தமிழ்மன்ற மின்வலை கண்டேன்! தழைக்கும்
அமுத மழையில் அகம்

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அரிய கருத்தினை அள்ளி வழங்கிப்
பெரிய மகிழ்வைப் பிணைத்தீா்! - உரியநல்
ஆற்றல் உயா்க! அழகு வலையுலகு
போற்றல் உயா்க பொலிந்து!

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தரமான ஆக்கம்! தமிழ்மணம் தட்டி
உரமாகச் செய்தேன் உவந்து!

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அன்புடன் வந்து கருத்தளித்தீா்! என்வணக்கம்
இன்புடன் நன்றி இசைத்து!

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

காதல் சுவையில் களித்தாடி நற்கருத்தை
ஈதல் புரிந்தீா் இனித்து

29.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

தங்கப்பா தந்த தனிப்புகழ்த் தண்டமிழ்
சங்கப்பா ஒத்த தகைமையது! - பொங்கும்பா
பாடும் புலவன் பணிகின்றேன்! பேராசான்
சூடும் புலமை சுடா்ந்து!

30.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

ஆங்கில ஆண்டினை வேண்டி! - தந்த
அருங்கவி அமுதுறை தோண்டி!
தீங்கிலா வாழ்வினைக் காட்டி! - நல்
திறமுறும் வழியினை ஊட்டி!
பாங்குறும் பயனுறும் பாக்கள்! - இன்
பாமகள் சூடிடும் பூக்கள்!
ஈங்கிவா் புலவனின் வேந்து! - மனமே
இவா்கவிக் கடலிலே நீந்து!

31.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தண்டலை மயில்கள் என்று
     தனிப்புகழ்க் கம்பன் சொல்வான்!
சுண்டலைப் போன்றே வாசம்
     சுடச்சுட வீசும் சொற்கள்!
வண்டலை வண்ணம், நெஞ்சை
     வடித்துள கவிதை ஈா்க்கும்!
வெண்டளைக் கவிஞன் யானும்
     வேண்டியே வாழ்த்து கின்றேன்!

31.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முன்னோர் மொழிந்த நன்னெறியில்
     முளைத்துப் புத்தாண்[டு] உயரட்டும்!
தன்னேர் இல்லாத் தண்டமிழைத்
     தரணி தாங்கித் தழைக்கட்டும்!
பொன்னோ் பூட்டி விளைத்ததுபோல்
     புவியே பூத்துப் பொலியட்டும்!
இன்னோர் வலைக்குச் செல்கின்றேன்!
     பின்னோர் பதிவில் சந்திப்போம்!

01.01.2013

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கவிதைத் தாகம் தீராமல்
     கவிஞன் நெஞ்சம் போராடும்!
புவியைப் புரட்டும் ஓரடியைப்
     புனையும் ஆற்றல் வாய்க்காதோ?
செவியைச் சோ்ந்த தமிழ்ச்சொற்கள்
     சிரித்தே என்னை மயக்கிடுமே!
சுவையை நிரப்பிக் கவி..தந்தேன்!
     தொடரும் ஆண்டின் வாழ்த்துக்கள்!

01.01.2013

--------------------------------------------------------------------------------------------------------