நண்பர்களின் வலைப்பூக்களில்
என்
கவிப்பூக்கள்
வணக்கம்!
வாட்டி வதைக்கின்ற நாட்டு நிலைமையினை
ஓட்டி அழித்தல் உயர்வு!
----------------------------------------------------------------------------------------------
வணக்கம்
உள்ளம் தெளிய உரைத்த கதைபடித்தேன்
அள்ளும் உணர்வை அணைத்து!
----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
நற்கணித மேதைக்குக் கட்டிய இப்படைப்புப்
பொற்கோயில் கொண்ட பொலிவென்பேன்! - சொற்சோ்
கரந்தைச் செயகுமார் கன்னல் தமிழ்கற்ற
பரந்த அறிவின் பயன்!
----------------------------------------------------------------------------------------------
வணக்கம்
கம்பன் வடித்த கவிதைகளைக்
கற்றால் தமிழின் சுவையறிவார்!
நம்பன் இராமன் மொழியழகும்
நங்கை சீதை விழியழகும்
நம்முள் தங்கிக் கமழ்ந்திட்டால்
நற்றேன் பாயும் வாழ்வினிலே!
எம்மண் கொண்ட மாண்புகளை
இயம்பும் சீதை பெருங்கதையே!
----------------------------------------------------------------------------------------------
மிண்டும் வணக்கம்
ரசம் என்பது தமிழ்ச்சொல் அன்று எனவே
கம்பன் சுவையென்றால் கம்பன் வளமென்றால்
நம்மொழி ஓங்குமே நன்கு!
----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
தமிழ் அல்லாத சொற்களை நீக்குதலும்
புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குதலும்
தமிழ் காப்போர் கடமை!
பழமை எனயெண்ணி அப்படியே ஆளுதல் சிறப்பன்று!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் என்ற நிலையை
உருவாக்கவேண்டம்!
எந்த நிலையிலும் பிரஞ்சுக் காரர்கள் ஆங்கிலம் கலந்து
எழுதவோ பேசவோ மாட்டார்கள்!
எல்லா மொழியும் கலந்து வளர்ந்துள்ள ஆங்கில மொழியிலும் தனித்த ஆங்கில
இலக்கியப் போக்கு உண்டு!
தனித்தமிழ் போற்றும் தமிழர்தம் நூலைப்
அணிந்து மகிழும் அகம்!
----------------------------------------------------------------------------------------------
வணக்கம்
சாதி சமய சழக்குகளைச்
சாற்றும் உலகைத் தூளாக்கு!
மோதி மிதித்துப் பகைவர்களை
முன்னைத் தமிழின் துயர்போக்கு!
போதி மரத்து நற்புத்தன்
புகன்ற அன்பை வழியாக்கு!
நீதி ஏந்திக் கமழ்தென்றல்
நிலத்தில் வீச மகிழ்கின்றேன்!
----------------------------------------------------------------------------------------------
வணக்கம்
முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
போட்டியில் வென்று பொலிகின்றீர்! வாழ்த்துகளைப்
பாட்டில் படைக்கின்ற பாரதிநான்! - நாட்டமுடன்
சொன்னேன் புகழ்வெண்பா! சூடிச் சரவாணி
இன்றேன் தமிழை இயம்பு!
----------------------------------------------------------------------------------------------
புலவர் அவர்களுக்கு வணக்கம்
சந்தம் ஒலித்திடச் சாற்றிய பாட்டினில்
சிந்தை மயங்கும் செழித்து!
----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
பிறப்பின் நிலையைச் சிறப்புடன் சென்னீர்
பறந்து மகிழ்ந்தேன் படித்து!
----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
தன்னைப் போற்றும் தமிழ்மைந்தன்
தமிழைப் போற்ற மறந்ததுமேன்?
பொன்னைப் பொருளைத் தேடுகிறான்!
புகழைக் குழியில் மூடுகிறான்!
தென்னை மரத்து வேரினிலே
தீயை மூட்டி எரிப்பதுவோ?
அன்னைத் தமிழின் பற்றேந்தி
அளித்த பதிவை வணங்குகிறேன்!
23.02.2013