vendredi 10 mai 2024

பாவலர் அன்பரசி

 

அமுதச் செல்வி அன்பரசி

பிறந்தநாள் வாழ்த்து

 

அமுதில் பிறந்த செல்வியென

       அகத்தில் சிறந்த அன்பரசி!

குமுதில் அமர்ந்த நங்கையெனக்

       குணத்தில் உயர்ந்த பண்பரசி!

சிமிழின் செம்மைப் பெண்ணரசி!

       சீர்சேர் புலமைப் பண்ணரசி!

தமிழில் சிறந்த பாட்டரசன்

       தந்தேன் கோடிப் பல்லாண்டு!

 

மொழியின் பற்றும், நன்னெறியை

       முழங்கும் பற்றும், நற்றவத்தார்

வழியின் பற்றும், யாப்பருளும்

       மரபின் பற்றும், இயற்கைதரும்

எழிலின் பற்றும், எந்நாளும்

       இறைவன் பற்றும், அன்பென்னும்

பொழிலின் பற்றும் அகமலர்ந்து

       பொலிந்து வாழ்க அன்பரசி!

 

தேடித் தேடி நுால்கற்றும்

       திறனுக் கென்றும் உரமிட்டும்

ஓடி யோடித் தொண்டாற்றி

       ஒளிரும் வண்ணம் உளமுற்றும்

ஆடி யாடிக் களிக்கின்ற

       அழகு குழந்தை பணியுற்றும்

பாடிப் பாடிப் புகழுற்றும்

       பாரில் வாழ்க அன்பரசி!

 

கம்பன் காதல் கமழ்ந்திடுமே!

       கவிதைக் காதல் கனிந்திடுமே!

இம்மண் வாழும் செடிமீதும்

       இனிய காதல் தொடர்ந்திடுமே!

அம்மன் அழகில் மனமுருகி

       அருளாங் காதல் மலர்ந்திடுமே!

செம்பொன் இதய அன்பரசி

       செழித்து வாழ்க பல்லாண்டு!

 

பாட்டின் அரசன் பயிலரங்கிற்

       பாடங் கற்றும் பண்கற்றும்

காட்டின் வளமாய் எழுத்தாக்கங்

       கணித்தே எழுதுங் கலைகற்றும்

வீட்டின் பெருமைச் சீர்கற்றும்

       வெற்றி சூடும் வழிகற்றும்

நாட்டின் மேன்மை நிலைகற்று்

       நன்றே வாழ்க அன்பரசி! [83]

 

23.03.2024

dimanche 5 mai 2024

சிறப்புப் பாயிரம் - ஆற்றலரசு

 

பாவலர்மணி ஆற்றலரசு எழுதிய

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சிறப்புப் பாயிரம்

 

மலர்ந்த முகவை மதிநல மண்ணில்

நலஞ்சேர் குடியில் நற்றமிழ் காக்கச்

சத்தி பெயரைத் தாங்கி வளர்ந்து

பத்தி யோடு பசுந்தமிழ் நாடி

ஆற்ற லரசென அரும்பேர் ஏற்றார்!

போற்றம் வண்ணம் புரிந்தார் தொண்டு!

பெருஞ்சித் திரனார் திருமனை சேர்ந்து

கருத்தில் தென்மொழிக் காதல் கொண்டார்!

கூவிக் கூவிக் கொள்கை முழக்கம்

மேவிய இதழை விற்றுச் சுழன்றார்!

காலைக் கிழக்குக் கன்னல் தெற்கு

மாலை மேற்கு வண்ண வடக்கு

வங்கத் தமிழ்க்கடல் வள்ளுவப் பெருங்கடல்  

தங்கக் கேரளம் தண்கரு நாடகம்

கருணை யாந்திரம் காணும் எல்லையாய் 

உரிய தமிழகம் உற்ற தலைநகர்ச்

சென்னை புகுந்து செம்மை யடைந்து 

முன்னைத் தமிழை முழங்கி வாழ்ந்தார்!

இளங்கோ தேவர் ஈடில் கம்பர்

உளஞ்சேர் விருத்தம் உவந்த யாப்பில்

விருத்த மாயிரம் வியக்கும் பெயரில்

பொருத்த மாகப் புனைந்தார் பாக்கள்!

நாட்டின் நிலையை நல்லோர் நெறியை

வாட்டும் நிலையைக் காட்டும் இந்நுால்!

அயலார் நாட்டில் அருந்தமிழ் ஓதும்

இயலிசைப் புலவன் இன்கவி யரசன்

பாரதி தாசன் பாநலங் கேட்கப்

பேரொளித் தமிழின் பெருமை யாவும்

வளரும் பாவலர் மகிழ்ந்து கற்க

ஒளிரும் புகழை உலகில் ஏற்க

ஈரா யிரத்தை இணையும் ஐம்பதும்

ஓரைந்தும் உற்ற உயர்குறள் ஆண்டில்

முகநுால் உலகில் முன்னே நிற்கும்

மிகுபா வரங்கில் விளைந்த இன்னுால்

அன்னைத் தமிழின் அழகியல் மரபைப்

பின்னை வருவோர் பேணும் பொருட்டுப்

பூத்த தென்பேன்! புலமை பொங்கிக்

கூத்திடு மென்பேன்! காத்தல் கடனே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

05.05.2024

தொழிலாளர் திருநாள்

 

தொழிலாளர் திருநாள் சிந்தனை?

 

காடும் மேடும் வயலாக்கிக்

       கடமை புரிந்த நல்லுழவர்

பாடு பட்டும் பசியேனோ?

       பஞ்சம் வாட்டும் நிலையேனோ?

வீடு காட்டும் மனையாக

       விளையும் வயலை யாக்குவதோ?

நாடும் நாளை உணவின்றி

       நலிந்து குன்றும் உணருகவே!

 

ஒருநாள் கூலிப் பணிசெய்ய

       ஊரில் இல்லை தொழிலாளர்!

வருநாள் தோறும் ஏமாற்றி

       வருவாய் ஈட்டிப் பொய்பேசித்

திருநாள் போலே வாழ்கின்றார்!

       திருடர் வெள்ளை உடைகொண்டார்!

தெருநாய் கூட உணவிற்குத்

       திரிந்து திரிந்து வந்திடுமே!

      

ஊரை நன்றே ஏமாற்றி

       உருவை வளர்க்கும் மனிதர்கள்!

யாரை நாடி நான்சொல்ல

       இனிய மே..நாள் வாழ்த்துக்கள்“!

பாரை மாற்ற யார்வருவார்?

       பசுமை வாழ்வை யார்தருவார்?

கூரை பிய்த்துக் கொட்டுவதாய்க்

       குந்தி வானம் பார்க்கின்றார்!

 

வேலை செய்ய ஆளில்லை!

       வேர்வை சிந்த மனமில்லை!

காலை யாட்டி வீட்டுக்குள்

       கனவு காணும் சோம்பேறி!

சாலை யெங்கும் தரகர்கள்

       சாயம் பூசி நடித்திடுவார்!

காலை யென்ன? இரவென்ன?
       காசே கடவுள் ஆனதடா!

 

காலம் முழுதும் உழைக்காமல்

       கள்ளர் நன்றே வாழ்கின்றார்!

ஞாலம் உழைப்பை மறுப்பதுமேன்?

       நல்லோர் நெறியை வெறுப்பதுமேன்?

பாலம் போடப் பத்தாண்டு!

       பாதை போடப் பத்தாண்டு!

சாலஞ் காட்டித் திரிகின்றார்!

       தமிழர் விழித்தல் எந்நாளோ?

 

ஈயும் உழைக்கும் பூமேலே!

       எறும்பும் உழைக்கும் மண்மேலே!

மேயுங் காளை நன்றாக

       விரைந்தே உழைக்கும் வயல்மேலே!

வாயும் பேசா வாற்குரங்கு

       வந்து வித்தை செய்கிறது!

நாயும் உழைக்கும் வீட்டுக்கு

       நாமேன் உழைக்க மறுக்கின்றோம்?

 

கைக்கண் மாற்றுங் தொழில்பெருகிக்

       காலங் கோல மாறியதே!

மைக்கண் உள்ள கருப்பாக

       மண்டை யிருண்டு போனதுவே!

பைக்கண் பணத்தைக் கண்டவுடன்

       பற்கள் இளித்து வாலாட்டும்!

தைக்கண் கண்ட பசுமையினைத்

       தரணி பெறுதல் எந்நாளோ?

 

கடனே வங்கி உண்ணுவதோ?

       கால்கை பிடித்து வாழுவதோ?

திடமே யின்றிக் கொழுப்பேறித்

       திருத்த மின்றிக் கிடப்பதுவோ?

முடமே யுள்ளம் அடைவதுவோ?

       முடங்கி முடங்கி இருப்பதுவோ?

புடமே போட்டால் பொன்னொளிரும்!

       புவியே உழைப்பால் பொலிவுபெறும்!

 

உழைப்பே யின்றி உயர்வடைய

       உறங்கிக் கிடக்கும் உலகம்..கேள்!

அழைப்பே யின்றிக் காற்றுவரும்!

       அழகாய் முளைத்து நாற்றுவரும்!

பிழைப்பே யின்றிக் கல்லாகப்

       பிறப்பைக் கழித்தல் பேரிழிவு!

விழைப்பே யின்றித் துாங்காதே!

       வீணே யாகி ஏங்காதே!

 

பணத்தை யீட்டும் தொழிலாகப்

       பாரில் ஆகும் அரசியலே!

மணத்தை வீசி வலையிடுவார்!

       வாக்குக் கேட்டுப் பொருள்தருவார்!

குணத்தை இழந்த மனிதர்கள்

       கொள்கை யின்றித் தாவிடுவார்!

பிணத்தை யெரிக்கும் சுடுகாட்டில்

       பெருகிச் சுழலும் கையூட்டே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

01.5.2024

 

செகவான் சிறப்புப் பாயிரம்

 

கவிஞர் செகவான் படைத்த  

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சிறப்புப் பாயிரம்

 

கொடிமீன் பறக்குங் கூடற் றமிழால்

அடித்..தேன் சுரக்கும் அருமைக் கவிஞர்!

உழவுத் தொழிலை உயிராய்ப் போற்றி

ஒழுகும் குடியில் உதித்த சீலர்! 

வில்லி புத்துார்க் கல்விக் கூடம்

அள்ளி யளித்த அமுதப் பாடம்

தந்த திறனால் தகைசேர் பணியால்

முந்து புகழில் முகிழ்த்த வீரர்!

கண்துறை மருத்துவங் கற்றுச் சிறந்து

பண்துறை யாப்பைப் பாடிப் பயின்று

பாவலர் மணியாய்ப் பட்டம் பெற்று

நாவலர் போற்றும் நற்புகழ் பெற்றார்!

பாட்டின் அரசன் பாரதி தாசன்

காட்டிய நெறியில் தீட்டிய கவிகள்

விருத்த மாயிரம் வியன்பெயர் சூடிப்

பொருத்த மாகப் பொலியும் இந்நுால்!

ஈடில் கம்பன் எழுதிய வழியில் 

சூடிய படையல்! தொன்மைப் புதையல்!

மன்னர் வாழ்வை மரத்தின் வாழ்வைத்

தன்னுள் கொண்டு  தழைத்த சுவடி
ஆண்ட தமிழின் அழகைக் கூறும்!

நீண்ட மரத்தின் நிலையைச் சொல்லும்!

ஆசான் கேட்க அளித்த ஏடு

வாச மலராய் மணத்தை வழங்கும்!

பாவலர் பயிலும் பைந்தமிழ் அரங்கில்

காவலர் பலர்முன் களமே யேறி

யாப்பின் நுட்பம் யாவும் மீட்டித்

தோப்பின் கனியாய்ச் சுவையைக் கூட்டிக்

கற்றோர் வாழ்த்தக் கனிந்த யாக்கம்!

பற்றுடன் மொழியைப் பாது காக்கும்!  

இருமுறை ஆயிரம் இணையும் ஐம்பது

ஒருமுறை ஐந்தாம் ஒண்குறள் ஆண்டில்

பாரதம் என்னும் பழம்பெரு நாட்டில்

தேருலாச் செல்லும் செந்தமிழ்த் தாயின்

முகமே இமயம்! முக்கடல் சூழும்!

அகமே அறத்தின் ஆலய மாகும்!

மரபைக் கற்கும் மாணவர்க் கெல்லாம்

உரமே யாகி உயர்வைக் கொடுக்கச்

செகவான் என்ற செம்பெயர் புனைந்தே  

அகவான் ஒளிர அளித்தார் நுாலே!

கவி.சு. செல்வக் கடுங்கோ வாழியார்

புவியே போற்றும் புலமை பொலிகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் - பிரான்சு,

உலகத் தமிழ்ச் சிறகம்,

தொல்காப்பியர் கழகம் - பிரான்சு,

பாவலர் பயிலரங்கம் - பிரான்சு.

01.05.2024