Affichage des articles dont le libellé est நாட்டுக்கு உழைத்தோர். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est நாட்டுக்கு உழைத்தோர். Afficher tous les articles

mardi 4 février 2020

அண்ணா என்றால் தமிழென்பேன்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

அண்ணா என்றால் தமிழென்பேன்!
  
'ஒன்றே குலமாம்' நன்னெறியை
   உள்ளம் ஏற்றால் துயரேது?
'ஒன்றே இறையாம்' பொன்னெறியை
   உலகம் ஏற்றால் பகையேது?
நன்றே அண்ணா உரைத்தவழி
   நாடும் மண்ணில் குறையேது?
வென்றே வாழ உரமூட்டும்
   விந்தைத் தலைவன் மொழிகாப்போம்!
  
ஏழை சிரிப்பில் விண்ணிறைவன்
   இருப்பான்! குடிசை வாழ்மக்கள்
ஊழைப் போக்கும் உள்ளத்துள்
   ஒளிர்வான்! என்றன் இதயமெனும்
பேழைக் குள்ளே புகழ்அண்ணா
   பேரைத் தீட்டிக் காத்திடுவேன்!
தாழை போன்று மணம்வீசும்
   தமிழைப் பாடிக் கூத்திடுவேன்!
  
இந்தி எதிர்ப்புப் பெரும்போரை
   முந்தி நின்று நடத்தியதால்,
தொந்தி சாயும் துன்னரிகள்
   சுரண்டும் தீதைப் போக்கியதால்,
சந்தி யெங்கும் தமிழமுதைப்
   பந்தி யிட்டு முழங்கியதால்,
புந்திக் குள்ளே இனப்பற்றுப்
   பொங்கும்! அண்ணா புகழ்வாழ்க!
  
நொடிக்கும் பொழுதில் நற்பதிலை
   நுவன்ற ஆற்றல்! எந்நாடும்
படிக்கும் வண்ணம் பன்னுரையைப்
   படைத்த வன்மை! துன்புற்றுத்
துடிக்கும் மக்கள் வளமுறவே
   தொகுத்த சட்டம்! நற்றேனைக்
குடிக்கும் வண்டாய் நுால்தேடிக்
   குவித்த அண்ணா புகழ்வாழ்க!
     
அண்ணா என்றால் அறமென்பேன்!
   அண்ணா என்றால் அறிவென்பேன்!
அண்ணா என்றால் அழகென்பேன்!
   அண்ணா என்றால் அமுதென்பேன்!
அண்ணா என்றால் ஒளியென்பேன்!
   அண்ணா என்றால் உயர்வென்பேன்!
அண்ணா என்றால் தகையென்பேன்!
   அண்ணா என்றால் தமிழென்பேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
04.02.2020

mercredi 2 octobre 2013

மாமன்னன் காந்தி




மாமன்னன் காந்தி

முடியின்றி அணியின்றி ஆண்ட மன்னன்!
     முடிவில்லாப் பெரும்புகழைச் சேர்த்த மன்னன்!
விடிவின்றித் தம்மக்கள் வாழ்ந்த போது
     விடிவெள்ளி யாகவொளி தந்த மன்னன்!
வடிவின்றி ஆடையினை எளிமை யோடே
     அணிந்துலகில் மாண்புகளை அணிந்த மன்னன்!
வெடியின்றித் தடியின்றி வெற்றி சூடி
     மேன்மைதரும் உண்மைநெறி காத்த மன்னன்!

பொக்கைவாய்ப் புன்சிரிப்பும், கருணை நெஞ்சும்,
     புதையலெனப் பெற்றுலகில் பொலிந்த மன்னன்!
தக்கையாய்க் கிடந்திட்ட நம்மின் வாழ்வைத்
     தடையுடைத்து வழிபடைத்த வீர மன்னன்!
சக்கையாய்த் தாழ்ந்திட்ட கருப்பர் வாழ்க்கை
     சால்பெய்தப் போராடி உயர்ந்த மன்னன்!
மக்களின் மகிழ்வொன்றே மனத்திற் கொண்டு
     வளம்படைத்த மாமன்னன் காந்தி யாமே!

23-10-2002

mercredi 21 août 2013

காமராசர்




காமராசர்
[கலிவெண்பா]

வாழைபோல் நன்மை வழங்கிவந்த காமராசர்
ஏழைகட் காகவே இங்குதித்த ஏந்தலென்பேன்!
பட்டம் பதவிகளைப் பாட்டாளி மக்களுறத்
திட்டம் பலசெய்தே சீராட்சி கண்டவராம்!
அன்னார் பெரும்புகழை ஆற்றல் சிறப்புகளைச்
சொன்னால் மனமினிக்கும் சோகமெல் லாம்பறக்கும்!
நாட்டின் விடுதலையை நாடிய காமராசர்
வேட்டு முறையை விரும்பாத நன்மனத்தார்!
உத்தமர் காந்தியிடம் உண்மையைப் பெற்றதனால்
சத்திய மூர்த்தியிடம் சால்புகளைக் கற்றதனால்
அன்பு வழியொன்றால் அன்னியனை ஓட்டுவிக்கத்
துன்பம் பலவேற்றுத் தூய செயல்புரிந்தார்!
இன்பத் தமிழ்நாட்டின் ஈடில் முதலமைச்சர்
என்று புகழ்பெற்றார் ஏற்றமிகு தொண்டாலே!
ஒத்துழை யாமை உயர்ந்த இயக்கத்தில்                    
மெத்தக் கலந்து விடுதலையை வேண்டியவர்
உப்பெடுக்கும் ஒப்பற்ற போரினிலே முன்னின்று
தப்பாமல் வெஞ்சிறையைத் தாமுவந்து கொண்டவராம்!
தந்நலம் இல்லாத் தலைவர் அவர்போலப்
பொன்மனம் பெற்றார் புவியினில் உள்ளனரோ?
கள்ளங் கபடமிலாக் கற்றறியாக் கூட்டத்தில்
உள்ள குறைகள் உடனே பறந்தோடப்
பள்ளி பலவமைத்தார் பல்கலையும் பெற்றிடவே!
துள்ளித் திரிகின்ற தூய சிறார்க்கங்கே
உண்ண உணவளித்தார்! உண்மைப் பணிசெய்தார்!
எண்ணம் அனைத்திலும் ஏழைகளின் முன்னேற்றம்
கல்வியைக் கற்றார் கலைவல்லார் ஆவாராம்!
தொல்புவியில் தொண்டால் படிக்காத மேதையராம்!
ஊழை விரட்டி உயர்நலங்கள் சேர்த்திட்டார்
ஏழைபங் காளன்என எல்லோரும் போற்றிடவே!
மூத்த தலைவர்கள் முன்னே வழிவிட்டுப்
பூத்த முகத்தோடே புத்திளைஞர் ஏற்கட்டும்
நாட்டுப் பணிபுரிய நற்றலைமை என்றாரே!
ஏட்டில் எழுதாமல் இங்குவழி தாம்விட்டார்!
கல்விக்குக் கண்கொடுத்த காமராசர் என்றென்றும்
சொல்லைச் செயலாக்கித் தூய்மையுடன் வாழ்ந்தாரே!
வாட்டும் வறுமையுடன் வாழும் அறியாமை
நாட்டில் நடமிடும் நஞ்சாம் இனவெறி
தீண்டாமை என்கின்ற தீயசொல்! சாதிமத
வேண்டாத குப்பை! வெறும்பேச்சு! வீண்வாதம்!
அத்தனையும் நீக்க அறவழியில் பாடுபட்ட
வாய்மைமிகும் காமராசர் வாழ்ந்த திருநாளில்
தூய்மைமிகும் நல்லாட்சி தொல்லையிலாப் பொன்னாட்சி!
கன்னித் தமிழ்நாடு கண்டதுவும் பொய்யாமோ?
ஊழல் சிறிதுமிலை! ஊரில் வறுமையில்லை!
வீழும் சமுதாய வேற்றுமையை வேரறுத்து
நாடு நலமுறவே நன்மைகளைச் செய்திட்டார்!
கூடும் வறுமையைக் கூண்டோ(டு) அழித்திட்டார்!
சீருடை தந்திட்ட சீராளர் நற்புகழைப்
பாரில் பரப்பிடவே பாடுதல் புண்ணியமே!
கண்கண்ட தெய்வம்நம் காமராசர்; என்றுமனம்
புண்பட்ட மாந்தரெல்லாம் போற்றிப் புகழ்ந்தாரே!
எல்லார்க்கும் எல்லாம் இயல்பாய்க் கிடைத்திடவே
நல்லார் உழைத்திட்டார் நன்கு!

கம்பன் இதழ் 15-07-2003
 

samedi 12 janvier 2013

பாவேந்தன்




பாவேந்தன்

முத்தொளிரும் தமிழ்பாடி,
புத்துலகச் சீர்சூடி,
மெத்தப்புகழ் பெற்றவுயர் புலவன்! - கவி
வித்தைகளை விளைத்ததமிழ் உழவன்!

புதுவைநகர் புகழ்மேவ,
பொதுமைநிலை மணம்வீச,
புதுமையொளிர் நூல்படைத்த மாந்தன்! - நம்
பூந்தமிழை அரசாண்ட வேந்தன்!

தேனூறும் அவன்தமிழில்
நானூறிப் போனதனால்
ஊன்புடைத்துப் பாக்கள்யான் தீட்ட, - அவை
கூன்விழுந்த நெஞ்சங்களை மாற்ற!

குடிவாழ மொழிவாழ
அடியோடு பகைவீழ
இடியாகும் பாவேந்தன் பாட்டு! - பாடி
எதிர்கால பிள்ளைக்கே ஊட்டு!

அஞ்சாத அரிமாவாய்,
துஞ்சாமல் பணிசெய்து
நஞ்சான இந்திதனை எதிர்த்தான்! - புகழைக்
கொஞ்சுதமிழ் வரலாற்றில் பதித்தான்!

சாதியெனும் பேய்ஒழிய,
சார்ந்துள்ள மதம்அகல,
நீதிபெற அவன்செய்த புரட்சி - அதனால்
நிலம்மீது நாம்பெற்றோம் மகிழ்ச்சி!

தன்மானம் நாமுறவே
தமிழ்மானம் காத்திடவே
பொன்வானக் கதிராக எழுந்தான்! - இந்தப்
புவிவாழப் பகுத்தறிவைப் பொழிந்தான்!

ஈரோட்டுப் பெரியாரின்
போரீட்டிப் பாவேந்தன்
சீராட்டிக் கொடுத்தநெறி கூறு! - அது
செந்தமிழின் வாழ்வென்று பாடு!

பாவேந்தன் பைந்தமிழை
நாவேந்தும் நாவலர்கள்
காவேந்தும் பூந்தேனை உண்பார்! - அவன்
கவிதைக்கே ஈடில்லை என்பார்!

அடிமையெனும் ஓர்சொல்லை
அகராதி நீக்கிவிடும்!
மிடிமையொளிர் பாவேந்தன் உலகு! - பார்
வியந்ததமிழ் அரசாளும் அழகு!

vendredi 23 novembre 2012

கலைக்கோயில் தாகூர்



கலைக்கோயில் தாகூர்

வங்கக் கவிஞர்! பொதுவுடைமை
     மணக்கும் நெஞ்சர்! அஞ்சாத
சிங்க கவிஞர்! சீர்திருத்தச்
     செல்வர்! நம்மின் நற்றமிழின்
சங்க கவிஞர் சிந்தனையைத்
     தந்த கவிஞர்! அன்பொளிரும்
தங்கக் கவிஞர்! ஈடில்லாத்
     தாகூர் புகழைப் போற்றுகவே!

சிந்தை இழந்து, செயலிழந்து
     சிறைக்குள் வாடும் அடிமையெனக்
கந்தைத் துiணியாய்க் கிடந்தோர்தம்
     கண்ணீர் துடைத்தே ஒளிதந்த
தந்தை பெரியார் ஈ.வே.ரா
     தமிழர் வாழ்வின் விடிவெள்ளி!
முந்தைக் கொடுமை முற்றெதிர்த்த
     தாகூர் வங்க விடிவெள்ளி!

கவிதைக் கோயில்! வங்கமொழி
     காத்து வளர்த்த போர்மறவர்!
புவியைப் புரட்டும் எழுத்துகளைப்
     பொழிந்த ஈடில் பேரறிஞர்!
அறிவை, அன்பை, பேரருளை
     அழிகின் சிரிப்பை, அடங்கா,ஐம்
பொறியை அடக்கும் நன்னெறியைப்
     புகன்ற தாகூர் வாழியவே!

அமையும் வாழ்க்கை அழகெய்த
     அன்பாம் மனிதம் மணக்காதோ?
சமயம், சாதி, பிரிவினைகள்
     சாற்றும் உள்ளம் திருந்தாதோ?
இமயம் குமரி முழுப்பரப்பும்
     இணைந்து வாழ உணர்வூட்டி
எமதின் நாட்டின் மறையான
     இனியர் தாகூர் வாழியவே!

நாட்டின் உயிராய், ஒற்றுமையை
     நல்கும் நெறியாய், வீரமதை
ஊட்டும் மொழியாய், இந்தியர்தம்
     உடலாய், உணவாய், இனிமையினைக்
கூட்டும் அமுதாய் நாட்டுப்பண்
     தீட்டிக் கொடுத்த புகழ்த்தாகூர்
காட்டும் பாதை சோலையெனக்
     கமழக் கண்டேன் பாடுகவே!

முகத்தில் தொங்கும் வெண்கதிர்கள்!
     முழங்கால் வரையில் மேல்ஆடை!
அகத்தில் பொங்கும் நாட்டுணர்வு!
     அல்லும் பகலும் மொழியுணர்வு!
செகத்தில் தாகூர் போல்பிறப்பார்
     சிலரே! கீதாஞ்சலி நூலால்
புகழிற் பொலியும் நம்நாடே!
     புரட்சித் தாகூர் நெறிகாப்பீர்!

படித்தோர் புகழாம் போதையிலே
     பட்டம் தேடி இங்கலைவார்!
நடித்தே உலகை ஏமாற்றி
     நாளும் கொள்ளை அடித்திடுவார்!
இடித்(து)ஓர் உண்மை உரைக்கின்றேன்
     இன்னல் விளைத்த அயலவரைத்
துடித்தே எதிர்த்தார் நற்றாகூர்
     துறந்தார் உயர்'சர்' பட்டத்தை!

சீரும் பேரும் தாகூரைத்
     தேடி வந்து சேர்ந்ததுவே!
ஊரும் நாடும் அவர்உருவை
     உயர்வாய் எண்ணி வணங்கியதே!
நேரு, காந்தி, நற்றிலகர்
     நெஞ்சம் நாடும் கவிக்கழகம்!
பாருள் 'மாகாத்மா' காந்தியெனப்
     பட்டம் அளித்துப் புகழ்ந்தாரே!

நாகூர் இறையும், நற்சிவனும்,
     நாதர் வடிவும் ஒன்றன்றோ!
ஆ..கூர் தீட்டி நமக்குள்ளே
     அமைத்த சாதி ஒழியாதோ?
தாகூர் புகழைச் சாற்றிடவே
     சான்றோர் கூடும் இச்சங்கம்
தா..கூர் அறிவை! நேயத்தை!
     தரணி செழித்து மகிழ்ந்திடவே!

15-03-2005 தாகூர் விழா, பாரீசு.

lundi 5 novembre 2012

பழுத்த கனியே! தாகூரே!





பழுத்த கனியே! தாகூரே!

எங்கள் தந்தை பெரியார்போல்
     ஏற்கும் அஞ்சா(து) இருந்தனையே!
மங்கும் எளியோர் வாழ்க்கையினை
     மகிழும் வண்ணம் உயர்த்தினையே!
பொங்கும் புதுமைக் கருத்தினையும்
     பூந்தேன் பொழியும் அன்பினையும்
வங்க மொழியில் நூலாக
     வடித்துப் புகழைப் பெற்றனையே!

தடுக்கப் பட்டோர் நிமிர்ந்திடவும்
     தாழ்த்த பட்டோர் மீண்டிடவும்
ஒடுக்கப் பட்டோர் ஓங்கிடவும்
     உழலும் துன்பம் நீங்கிடவும்
எழுதப் பட்ட உம்கவியை
     இனிதே போற்றி வணங்குகிறேன்!
பழுத்த கனியே! தாகூரே!
     பண்பின் ஒளியே! வாழியவே!

  15.05.2002

lundi 29 octobre 2012

வெள்ளைப் புறா




வெள்ளைப் புறா

துணிவும் உண்டு! தூயவர்தம்
     பணிவும் உண்டு! நல்லழகாய்
அணியும் மணிபோல் ஒளிர்கின்ற
     அகமும் உண்டு! கனிவுண்டு!
பணியும் பண்பும் ஒன்றாகிப்
     படரும் பசுமைப் புகழுண்டு!
பிணியும் பிறவும் ஒழித்திங்குப்
     பெருமை தந்த இந்திராவே!

நீண்ட மூக்கு! நேர்பார்வை!
     நிலத்தைப் புரட்டும் நெஞ்சுறுதி!
ஆண்ட தென்ன? நல்லறிவும்!
     அன்பும்! ஆசை நிறைந்தினிது
பூண்ட தென்ன? நம்நாட்டின்
     புகழும் பொலிவும்! கைகளினால்
தீண்ட தென்ன? வானுச்சி!
     திண்மைச் செயலர் இந்திராவே!

தந்தை நேரு தந்தநெறி!
     தரணி போற்றும் தங்கநெறி!
சிந்தை தரித்து நம்நாட்டைச்
     செதுக்கி வடித்த அருஞ்சிற்பி!
பந்தைப் போன்று பகைவர்களைப்
     பறக்கச் செய்த மறச்செல்வி!
விந்தை! நம்மின் விடிவெள்ளி!
     விழிபோல் இருந்த இந்திராவே!

வன்மை அடைந்த நாடுபல
     வளரும் நாட்டைச் சுரண்டுகிற
தன்மை அறிந்து தடைபோட்டுத்
     தாய்போல் அணைத்துத் துயர்தீர்த்தார்!
நம்மை அடையும் வழிகளையே
     நன்றே நவின்று நலஞ்சேர்த்தார்!
இன்மை நீக்கி இருள்போக்கி
     இனிமை அளித்த இந்திராவே!

நாடே உயிராய்! மக்களுறும்;
     நலமே உணர்வாய்! அறமூட்டும்
ஏடே உணவாய்! குமரிவரை
     இனிதே செழிக்கும் வன்னுரமாய்!
வீடே மறந்து! எதிர்வந்த
     விதியே ஓட வினைபுரிந்து!
ஈடே இல்லாப் பெண்மணியாய்
     இருந்த எங்கள் இந்திராவே!

ஆட்சி செய்யும் நுட்பங்கள்
     அனைத்தும் அறிந்த பெண்மணியார்!
காட்சிக் கென்றும் இனியவராய்க்
     கண்ணில் கமழும் கண்மணியார்!
சாட்சி சொல்லும் இவ்வுலகம்!
     சற்றும் அஞ்சா வன்மதியார்!
மாட்சி மிக்க வரலாறாய்
     வாழும் எங்கள் இந்திராவே!

ஆளும் ஆட்சி போர்க்களமாய்
     ஆன பொழுதும்! காலமெனும்
நாளும் கோளும் சரியின்றி
     நடந்த பொழுதும்! ஓய்வின்றித்
தோளும் காலும் நற்பணியில்
     தொடந்த பொழுதும்! எதிர்வந்து
மூளும் சதியை முற்றறுத்து
     முழங்கும் வெற்றி இந்திராவே!

காந்தி நாடு! கர்மவீரர்
     காம ராசர் கருணைநாடு!
நீந்தி முழுகி முத்தெடுக்கும்
     நேய கவிஞர் நிறைந்தநாடு!
சாந்தி! சாந்தி! அமைதியினைச்
     சாற்றும் நாடு! தலைமீதே
ஏந்திக் காத்தே இரவுபகல்
     எண்ணா துழைத்த இந்திராவே!

உலகம் போற்றும் தலைவர்களில்
     ஒப்பில் நிலவாய்த் திகழ்கின்றார்!
திலக மாகப் பாரதத்தாய்
     தீட்டி அழகாய் மிளிர்கின்றாள்! 
குலவும் சீர்கள் நாடெய்தக்
     கொள்கை கொண்டார்! உயிரீந்தார்!
உலவும் நினைவில் எந்நாளும்
     ஒளிரும் எங்கள் இந்திராவே!

கொள்ளைப் புறத்து மலர்க்கூட்டம்
     கொஞ்சி மணக்கும் வடிவழகு!
பிள்ளை அமுதாய் நம்முயிரைப்
     பிடித்து மயக்கும் சொல்லழகு!
கள்ளை நிகர்த்த சுவைக்கவிகள்
     கட்டிக் கொடுக்கும் செயலாழகு!
வெள்ளைப் புறாஎன் றிவ்வுலகம்
     வியந்து போற்றும் இந்திராவே!