Affichage des articles dont le libellé est மழலைச்செல்வம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est மழலைச்செல்வம். Afficher tous les articles

vendredi 29 novembre 2013

கொஞ்சுந் தமிழ்

கொஞ்சுந் தமிழ்

மயக்கும் இன்ப மதுவே வாராய்!
மணக்கும் வண்ண மலரே வாராய்!
வியக்கும் இனிய தமிழே வாராய்!
வெற்றி நிலைக்க விரைந்தே வாராய்!

படிக்கப் படிக்கப் படரும் தமிழே!
பாடப் பாடச் சுடரும் தமிழே!
குடிக்கக் குடிக்கச் சுரக்கும் தமிழே!
குன்றாச் சுவையைக் கொடுக்கும் தமிழே!

என்னை யாளும் வண்ணத் தமிழே
என்றன் நாவில் இருக்க வாராய்!
உன்னைப் போற்றி உள்ளம் மகிழ
உன்றன் அருளை உவந்து தாராய்!

10.06.1980 

vendredi 22 novembre 2013

கூடிவாழ்வோம்




கூடிவாழ்வோம்

செந்தமிழ்ப் புகழினைக் காத்திடுவோம் - தமிழ்
     செழித்திடப் பாமலர் கோர்த்திடுவோம்!
சிந்தையில் நன்னெறி சமைத்திடுவோம் - நாடு
     சிறந்திட நல்வழி அமைத்திடுவோம்!

வறுமையை வேருடன் நீக்கிடுவோம் - கொடும்
     மடமையாம் நோய்தனைப் போக்கிடுவோம்!
கடமையால் மேன்மையைத் தேக்கிடுவோம் - நாம்
     கற்றவர் வழியை நோக்கிடுவோம்!

விலையதின் உயர்வையே குறைத்திடுவோம் - நன்கு
     விலைப்பொருள் பெருகிட உழைத்திடுவோம்!
மலையென ஒற்றுமை வளர்த்திடுவோம் - கூடி
     மகிழ்வுடன் அனைவரும் வாழ்ந்திடுவோம்!

03.02.1980

mardi 19 novembre 2013

விளைத்திடுவோம்





விளைத்திடுவோம்!

ஆண்டவன் அருளைப் பாடிடுவோம்
            அமைதியை நாளும் தேடிடுவோம்
ஈன்றவர் பாதம் நாடிடுவோம்
            இனிமையாய்ப் பழகக் கூடிடுவோம்!

அருள்நெறி தன்னை ஏற்றிடுவோம்
     அன்னையாம் தமிழைப் போற்றிடுவோம்
இருள்வழி வதைவார் காத்திடுவோம்
     இடரினை ஓட்டிக் கூத்திடுவோம்!

அன்பெனும் அமிழ்தை அளித்திடுவோம்
     அறிவெனும் நிழலில் களித்திடுவோம்
பண்பெனும் அழகில் நிலைத்திடுவோம்
     பணிவெனும் விதையை விளைத்திடுவோம்!

10.10.1990

samedi 5 octobre 2013

அறிவொளி




அறிவொளி

அன்னையாம் தமிழைப் போற்றிட வேண்டும்
அறிவொளிச் சுடரை ஏற்றிட வேண்டும்
கண்ணென நாட்டைக் காத்திட வேண்டும்
கயவரை மாய்த்துக் கூத்திட வேண்டும்!

உண்மையாம் நெறியில் நடந்திட வேண்டும்
உழைப்பவர் உயர்வை அடைந்திட வேண்டும்
பெண்மையை நாளும் மதித்திட வேண்டும்
பெயரினைப் பாரில் பதித்திட வேண்டும்!

சாதிகள் யாவும் அழிந்திட வேண்டும்
சமத்துவம் எங்கும் பொழிந்திட வேண்டும்
நீதியே நிலத்தில் நிலைத்திட வேண்டும்
நேர்மையை வாழ்வில் விளைத்திட வேண்டும்!

05.05.1999

mercredi 28 août 2013

அன்பே கடவுள்




அன்பே கடவுள்

ஒழுக்கம் உன்பால் இருந்தாலே
     உயர்வு சேரும் தன்னாலே!
வழங்கும் நல்ல குணத்தலே 
     வளரும் வாழ்க்கை கொடிபோலே!

நன்மை செய்வீர் யாவர்க்கும்
     நாளும் நலங்கள் சூழ்ந்திடவே!
வன்மை யோடு வாய்மறையை
     வாழ்வில் பெறுவீர் வளமுறவே!

ஊறு பிறர்க்குச் செய்யாமல்
     உண்மை பேசி நின்றாலே
பேறு பலவும் பெற்றிடலாம்!
     பெருமை யாவும் உற்றிடலாம்!

மடமை இருளை ஓட்டிடுவீர்!
     வளரும் கலைகள் நாட்டிடுவீர்!
கடவுள் அன்பில் இருக்கின்ற
     கருத்தை நெஞ்சுள் ஏற்றிடுவீர்!

30.03.2013
 

vendredi 16 août 2013

தேன்.. தேன்.. தேன்..




தேன்... தேன்... தேன்...

அன்பும் பண்பும் ஒளிர்கின்ற
     அகமே இறைவன் வீடாகும்!
நன்றே தேவன் திருப்பெயரை
     நவிலல் பிறப்பின் பேறாகும்!
துன்பம் கூடி வதைவோர்தம்
     துயரைத் துடைத்தல் வாழ்வாகும்!
என்றும் தமிழர் செந்தமிழின்
     எழிலைக் காத்தல் நலமாகும்!

உள்ளே ஒன்றும் வெளியொன்றும்
     உரைத்துத் திரிதல் தீதாகும்!
கல்லே என்று மனமுற்றால்
     கற்ற கல்வி பாழாகும்!
எல்லாம் தமக்குத் தெரியுமென
     இறுமாந் துலறல் அழிவாகும்!
தௌ்ளத் தெளிந்த நன்னெறியின்
     தேனைக் குடித்தல் அறிவாகும்!

நான்..நான் என்று புகழ்பேசி
     நடிக்கும் செயலை நீக்குகவே!
ஏன்..ஏன் என்று முன்வினையை
     எண்ணி ஆய்ந்தே உணருகவே!
வான்..வான் என்று வளமருளும்
     வாழ்வைத் தொண்டாய் மாற்றுகவே!
தேன்..தேன் என்று செழுந்தமிழில்
     தேவன் சீரைப் போற்றுகவே!

11.11.2003

அன்பாம் அமிழ்தம்





அன்பாம் அமிழ்தம்

அணியும் ஆடை அழுக்கானால்
     அகற்றி விடலாம் நம்பி!
மணியாம் உள்ளம் மாசானால்
     மாற்ற போமோ தம்பி?

பொய்மை பேசா திருந்தாலே
     பொழியும் வாழ்வில் இன்பம்!
உண்மை வழியே நடந்தாலே
     உனக்கே திங்கே துன்பம்!

அன்பாம் அமிழ்தைத் தினம்பருகி
     அமைதி உலவ வாழ்வோம்!
பண்பால் வாழ்வைக் கைப்பற்றிப்
     பாரில் நன்மை சூழ்வோம்!

02.01.1980

dimanche 21 juillet 2013

வளம் பெறுக!




வளம் பெறுக

பெரியவர் சொல்லை என்றும்
            பேணியே மதித்தல் வாழ்வு!
சிறியவர் இவரே என்று
            சிரித்திடின் பெறுவோம் தாழ்வு!

வறியவர் நிலையைக் கண்டு
            மாண்புடன் உதவி புரிக!
கொடியவர் செயலைக் கண்டு
            கொன்றிடும் புலியாய் எழுக!

நல்லவர் நட்பை நாடி
            நலம்பல பெறுக இன்றே!
வல்லவர் அன்பைத் தேடி
            வளம்பல பெறுக நன்றே!

07.04.1980
 

mercredi 17 juillet 2013

ஆடிடலாம்!





ஆடிடலாம்

கொத்தித் தின்னும் சிறுகுருகே!
            கொஞ்சிப் பேசும் பசுங்கிளியே!
அத்தி மரத்தின் எழிலணிலே!
            அழகாய் ஆடும் பொன்மயிலே!
தத்தி நடக்கும் இளங்கன்றே!
            சந்தம் பாடும் கருங்குயிலே!
கத்தி அழைத்தேன் உங்களையே
            கண்ணாம் மூச்சி ஆடிடவே!

துள்ளி ஓடும் கலைமானே!
            தூங்கா துழைக்கும் சிற்றெறும்பே!
அல்லி மலரின் மதுபருகி
            ஆடித் திரியும் தேன்வண்டே!
ஒல்லி யாக நீண்டிங்கே
            உயரப் பறக்கும் சிறுதும்பே!
சொல்லிக் கொடுப்பேன் ஓராட்டம்!
            சூழ்ந்து நிற்பீர் என்னருகே!

கண்ணைப் பறிக்கும் உடைபெற்றுக்
            காற்றில் நீந்தும் பட்டானே!
மண்ணைக் கிளறி விளையாடும்
            வாத்து கோழி வெண்முயலே!
பண்ணைத் தோப்பைக் காக்கின்ற
            பாசம் மிகுந்த நன்னாயே!
என்னை நாடி வந்திடுவீர்
            இனிதே கூடி ஆடிடலாம்!

20.05.2000