நேரிசையொத்தாழிசைக் கலிப்பா
[ஒரு தரவு + மூன்று தாழிசை + தனிச்சொல் + சுரிதகம்] [ஆசிரியச் சுரிதகம், வெண்பா சுரிதகம் இரு வகையுள்ளன] [தரவின் சிறுமை 4 அடி, பெருமை 12 அடி] [இதன் தரவு 3 அடியானும் வரப்பெறும், சிறுபான்மை தரவு 13 அடியாகவும் வரும்]
தமிழே! எங்கள் தாயே!
தரவு
இனிக்கின்ற சுவையாவும் எழிற்றமிழ்க் கிணையாமோ?
நனைக்கின்ற மழையாக நலமளிக்கும்! அருந்தமிழா!
கனிகின்ற குலையாகக் கருத்துக்கள் இனிப்பளிக்கும்!
புனைகின்ற கவியாவும் பொழில்கொண்ட மதுவளிக்கும்!
தாழிசை
சொல்யாவும் அரும்பாகும்! தொடர்யாவும் கரும்பாகும்!
இல்யாவும் தமிழ்கொண்டால் இசைகின்ற இனிப்பாகும்!
சீர்யாவும் மலராகும்! செழுந்தளைகள் கனியாகும்!
பேர்யாவும் தமிழ்கொண்டால் பெருந்சுவையின் இனிப்பாகும்!
அடியாவும் தாராகும்! அமைந்தகவி அமுதாகும்!
குடியாவும் தமிழ்கொண்டால் குவலயமே இனிப்பாகும்!
ஆதலினால் [தனிச்சொல்]
அருமைத் தமிழா! அன்னை மொழியின்
பெருமை காத்துப் பெறுவாய் மேன்மை!
கன்னல் ஊறிக் கமழும்!
இன்னல் ஓட்டி இனிக்கும் தமிழே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.