samedi 31 août 2013

பாவேந்தரைப் பாடுவோம்




பாவேந்தரைப் பாடுவோம்
(தலைமைக் கவிதை)

கண்ணன் வணக்கம்

எந்தை தாயும் நீயானாய்!
     எழுத்தைத் தந்த குருவானாய்!
சிந்தை மின்னும் அறிவானாய்!
     சிறப்பை நல்கும் நட்பானாய்!
முந்தைப் பிறப்பின் நற்பயனால்
     மூச்சாய் இயங்கும் தமிழானாய்!
நிந்தை இன்றிக் கவிபாட
     நீலக் கண்ணா காத்தருளே!

தமிழ் வணக்கம்

உண்ணும் உணவும், என்னுளத்தின்
     உணர்வும் ஒளியும் தமிழாகும்!
எண்ணும் கருத்தும், என்னுயிரை
     இயக்கும் இறையும் தமிழாகும்!
விண்ணும் மண்ணும் ஈடின்றி
     மின்னும் எங்கள் தமிழாகும்!
என்னுள் ஓடும் தமிழ்க்குருதி
     என்னை ஓங்கச் செய்ததுவே!

அவையோர் வணக்கம்

மெட்டி ஒலியும், குங்குமமும்,
     அண்ணா மலையும், மேலும்நமைக்
கட்டிப் போடும் தொடர்பலவும்
     கண்டு களிக்கும் இந்நாளில்
கொட்டும் மழையின் குளிர்ச்சியினைக்
     கொடுக்கும் இனிய தமிழ்நாடித்
தட்டி மகிழ வந்தோரே!
     சாற்றும் வணக்கம் ஏற்பீரே!

புரட்சிக் கவிஞன் பாவேந்தன்
     புகழைப் பாடப், பூந்தமிழால்
உரசும் சொற்கள் ஒவ்வொன்றும்
     ஒளிரும்! வெடிக்கும்! புயல்வீசும்!
அரசர் மன்றில் தமிழாண்ட
     அழகைப் போன்றே இப்பொழுது
முரசு கொட்டித் தமிழ்பாட
     முயன்ற இவரை வாழ்த்துகவே!

பாவேந்தன் புகழ்

முத்தொளிரும் தமிழ்பாடி,
புத்துலகச் சீர்சூடி,
மெத்தப்புகழ் பெற்றவுயர் புலவன்! - கவி
வித்தைகளை விளைத்ததமிழ் உழவன்!

புதுவைநகர் புகழ்மேவ,
பொதுமைநிலை மணம்வீச,
புதுமையொளிர் நூல்படைத்த மாந்தன்! - நம்
பூந்தமிழை அரசாண்ட வேந்தன்!

தேனூறும் அவன்தமிழில்
நானூறிப் போனதனால்
ஊண்புடைத்துப் பாக்கள்யான் தீட்ட, - அவை
கூன்விழுந்த நெஞ்சங்களை மாற்ற!

குடிவாழ மொழிவாழ
அடியோடு பகைவீழ
இடியாகும் பாவேந்தன் பாட்டு! - பாடி
எதிர்கால பிள்ளைக்கே ஊட்டு!

அஞ்சாத அரிமாவாய்,
துஞ்சாமல் பணிசெய்து
நஞ்சான இந்திதனை எதிர்த்தான்! - புகழைக்
கொஞ்சுதமிழ் வரலாற்றில் பதித்தான்!

சாதியெனும் பேய்ஒழிய,
சார்ந்துள்ள மதம்அகல,
நீதிபெற அவன்செய்த புரட்சி - அதனால்
நிலம்மீது நாம்பெற்றோம் மகிழ்ச்சி!

தன்மானம் நாமுறவே
தமிழ்மானம் காத்திடவே
பொன்வானக் கதிராக எழுந்தான்! - இந்தப்
புவிவாழப் பகுத்தறிவைப் பொழிந்தான்!

ஈரோட்டுப் பெரியாரின்
போரீட்டிப் பாவேந்தன்
சீராட்டிக் கொடுத்தநெறி கூறு! - அது
செந்தமிழின் வாழ்வென்று பாடு

பாவேந்தன் பைந்தமிழை
நாவேந்தும் நாவலர்கள்
காவேந்தும் பூந்தேனை உண்பார்! - அவன்
கவிதைக்கே ஈடில்லை என்பார்!

அடிமையெனும் ஓர்சொல்லை
அகராதி நீக்கிவிடும்!
மிடிமையொளிர் பாவேந்தன் உலகு! - பார்
வியந்ததமிழ் அரசாளும் அழகு!
 
முன்னொருநாள் இங்கே முடிதரித்த செந்தமிழைப்
பின்னே சிதைத்துப் பிழையாக வாழ்ந்தார்கள்!
காலம் அழிக்காத கன்னித் தமிழழகை!
சீலச் சிறப்பதனை! சிந்தைஎழில் சித்திரத்தை!
நீலக் கடல்கொண்டும் நின்று புகழ்பரப்பும்
கோலத்தைக், கோபுரத்தைக் குப்பை எனத்தள்ளி
மூலை முடக்கிடவே முந்துகின்ற வேளையிலே
சோலைக் குயிலொன்று சொக்கும் குரல்எடுத்துத்
தொட்டில் குழந்தைகளாய்த் தூங்கிக் கிடந்தவரைத்
தட்டி எழுப்பித் தமிழ்மானம் காத்ததுவே!

கானம் இசைத்திட்ட ஞானக் குயிலுக்கு
குஞ்சொன்று தோன்றிக் குரல்கொடுக்க நாம்கேட்டோம்!
நஞ்சும் அமுதாகும்! நற்றேனாய்த் தித்திக்கும்!
மிஞ்சும் சுவைக்களிப்பு மெய்யில் கலந்துறையும்!
பாரதி பாக்குயிலின் சேயாகப் மின்னுகின்ற
பேரெடுத்த தாசர் பெருமகனார் பாவேந்தர்!
யார்இந்தப் பாவேந்தர்? யாவர்க்கும் அஞ்சாத
சீரெடுத்த தோற்றம்! சிரிக்கும் தமிழ்நாவில்!
பாரெடுத்த மூடப் பழக்கம் பறந்திடவே
போர்தொடுத்தார்! செம்மைப் புரட்சிக்கு வித்திட்டார்!
பூவை எனும்பெண்ணை வேங்கைப் புலியாக்கி
ஏவியவர்! ஈனப் பகைவரெலாம் இற்றொழிய
பாடுபடும் நற்றொழிலின் பண்பெடுத்துப் பேசியவர்!
தேடியவர் அன்னார் திறம்மிகுந்த வாழ்வுபெற!
ஈடுண்டா இக்கவியின் ஏற்றம் எடுத்துரைக்க?
பீடு நடைபயிலும் பேராறாய்ச் சொல்பாயும்!
காடு கமழ்கின்ற கற்பூர வாசனையாய்க்
கூடும் பகுத்தறிவு! குன்றா(து) எழும்புரட்சி!
நீடு துயில்நிலவாய் நெஞ்சம் தமிழ்மணக்கும்!
ஏடு திறந்தவுடன் இட்ட சுவையழகு
பாடும் குறிக்கோளை! பாரதியின் தாசர்இவர்!
சூடும் புகழெடுத்துச் சொல்லுதற்கு வாயில்லை!
புரட்சிக் கவிபடைத்த பூங்காவைப் பாடிடுவோம்!
மருட்சி மயக்கில்லாச் சஞ்சிவிச் சாரலிலே
மெல்ல உலாப்போந்து மேன்மையினைப் பாடிடுவோம்!
வெல்லம் எனஇனிக்கும் பாண்டியனார் தம்பரிசு!
உள்ளம் கவர்ந்திழுக்கும் ஓரிசையின் தௌ்ளமுது!
எதிர்பாரா முத்தம் இடுவார் தமிழுக்கு!
கதையுண்டு! கற்கண்டாய்க் கம்பன் நயமுண்டு!
புதியதொரு பொன்னுலகம் போற்றவரும் பாவேந்தர்
விதைத்த வயல்விளைய வெட்டுவார் யாருண்டு?
பாவேந்தர் பாடலைப் பாடிப் பழகுதற்கு
நாவேந்தர் ஐவர் நமதவை வந்துள்ளார்!
மேடை மணங்கமழ மென்தமிழால் நெஞ்சத்தின்
கோடை தணியும் குளிர்ந்து!

பாவேந்தரின் புரட்சி

புதுவை வேந்தரின் புரட்சியைப் பாடப்
புதுவை மைந்தர்! பூந்தமிழ்ச் செல்வர்!
பார்த்த சாரதி பறந்து வருகிறார்! 
கோர்த்து இவர்தரும் குளிர்தமிழ்ப் பாக்கள்
நாட்டும் தமிழின் நலங்களை! நன்றே
ஊட்டும் வாழ்வின் வளங்களை! அன்பீர்
தட்டுக கைகளை! தமிழில் நெஞ்சை
ஓட்டுக மயங்கி! ஓடும் துயரே!

பார்த்த சாரதியே! பைந்தமிழ்ச் சாரதியே!
பா, தர வருகவே! பசுந்தேன் தருகவே!

பாவேந்தரின் பகுத்தறிவு

பாரதி தாசரின் பகுத்தறிவைப் பாடச்
சீருடைத் தமிழ்த்தாய் சிந்தை கொண்டார்!
நேரில் வந்த நெடுந்தமிழ்த் தாயைப்
பாரதி யானும் பாடித் தொழுதேன்!
தாயே! இனிய தமிழே! இங்கு
நாயும் நரியும் புலியிடம் வந்து
வேட மிட்டு விளைத்தன சூழ்ச்சி!
மாடம் இருண்டது! மாட்சி குலைந்தது!
இவைதாம் உணர்ந்தே எழுந்த வேந்தரின்
சுவைத்தமிழ் கூற அவையேறி வருகவே!

தமிழ்த்தாய் பொங்கி எழுகவே!
தமிழரின் பகைவர் விழுகவே!

பாவேந்தரின் கொள்கை

பாட்டு வேந்தர் நாட்டிய கொள்கையை
மீட்டி இசைக்க மேடையில் வருகிறார்
நற்செய ராமர்! சொற்றிறம் கேட்டு
நற்றமிழ்த் தாயவள் நறுமணம் காண்பாள்!
என்னோடு இங்கே இணைந்து நிற்கும்
நண்பர்! நல்ல தமிழின் அன்பர்!
பயமெனும் சொல்லைப் பார்த்ததும் இல்லை!
புயலிவர் படித்ததும் இல்லை! பொய்யர்
பகைவர் ஓடப் பாய்ந்து வருகவே!
தகவுடைத் தமிழைத் தந்து மகிழவே!

செயராமப் பெருந்தகையே! - செப்புக
செந்தமிழின் நற்சுவையே!

பாவேந்தரின் தமிழ்

வேந்தர் படைத்த வியன்தமிழ் உரைக்கச்
சாந்தம் படைத்த சகோதரி வருகிறார்!
அருணா செல்வம் ! அருந்தமிழ்ச் செல்வம்!
கருணா மூர்த்தியை, கர்த்தர் யேசுவை
அடியேன் வணங்கி அளிக்கும் வேண்டுகோள்!
படியாய்க் கிடந்து பாவையர் பட்ட
துன்பம் போதும்! துணிவுடன் பெண்கள்
இன்பத் தமிழ்தர எங்கும் எழுகவே!

அருணா செல்வமே! - உம்தமிழ்
பெருகிவரும் வெள்ளமே!
பைந்தமிழ் பொழிகவே - எங்கள்
பண்புளம் குளிரவே!

பாவேந்தரின் புத்துலகு

மன்னர் கண்ட மாண்புடை உலகைக்
கண்ணால் கண்டு கவிதர வந்தார்
அயரா துழைக்கும் செயா.பத்மநாபர்!
தயாராய் இருங்கள்! தமிழ்மொழி இவரிடம்
அலையெனப் பாயும்! அணுவென வெடிக்கும்!
கலையென மின்னும்! கருத்தினைக் கவரும்!
செயாவே உந்தம் குரலால் சிறக்கும் இவ்
விழாவே! உம்கவி வெல்க உலகையே!

செயா வருகவே! - பெண்ணின்
பயம்நீங்கக் கவிதை தருகவே! 

முடிப்பு கவிதை

பாட்டரங்கம் கண்டீர்கள், பாவின் வேந்தர்
     பழகுதமிழ் இன்பத்தைச் செவியில் கொண்டீர்!
கேட்டாலும் கிடைக்காத கவியின் செல்வம்
     கேளாமல் வழங்கியவர், புரட்சி வீணை
மீட்டியவர்! புயல்போலும் எண்ணம் வீசும்!
     என்றாலும் பூங்காற்றாய்க் குளிர்ச்சி பூசும்!
கூட்டணியாய்ப் பகுத்தறிவு! புதுமை துள்ளும்!
     குறிக்கோளோ புத்துலகம் காணச் சொல்லும்!

ஏடெடுத்தார்! கவியெழுதி மேலே சென்றார்!
     எனைஎழுது எனச்சொல்லும் அழகு வானம்!
காடுகளும் கழனிகளும் முகிலும் வந்து
     கண்கவர எத்தனிக்கும்! சிரித்துச் சூழும்!
ஓடைகளும் பூக்குலமும் கேட்கும் தங்கள்
     ஓவியத்தைத் தீட்டிடவே! வண்ணம் காட்டி
ஆடும்மயில் மாதர்குலம் அழகைப் பேசும்!
     அவைபடித்துப் புலவரெலாம் இன்பங் கொண்டார்!

தோட்டத்துத் திருவாயில் திறந்த வேளை
     சொர்ணமெனும் எழில்மங்கை வந்தாள்! போனாள்!
பாட்டாகச் சுவைக்கதைகள் பேசிச் சென்றாள்!
     பற்றியது காதலெனும் நெருப்பும்! அங்கே
கூட்டாக உளம்கலந்தான் காதல் கொண்டோன்
     கொள்ளையோ கொள்ளையெனக் காதல் வைத்தான்!
தீட்டிடுவார் தேனொழுகும் பாக்கள்! இன்பச்
     செந்தமிழின் அணியாவும் மின்னக் கண்டோம்!

வேரினிலே பழுத்தபலா விதவை என்றார்!
     விதிபழமை! புதியவிதி படைக்கக் கேட்டார்!
சீரென்றால் பெண்ணடிமை ஒழிதல் வேண்டும்!
     சிறப்பென்றால் தொழில்செய்வோர் ஆளல் வேண்டும்!
பேரென்றால் பகுத்தறிவுப் பெருமை தாங்கிப்
     பிடித்தபழம் பாசியெலாம் துடைக்க வேண்டும்!
போரிடுக! புத்துலகம் படைப்பீர் என்று
     பொற்காலம் புவிகாணக் கனவும் கண்டார்!

அமிழ்தூறும் தமிழுக்கே அபயம் என்றார்!
     அருங்கலைகள், அறிவியலும், ஊரும், பேரும்,
தமிழன்றிப் பிறமொழிகள் வேண்டாம் என்றார்!
     சங்கீதம் தரும்இனிமை தமிழே என்றார்!
இமயம்போல் இம்மண்ணில் எழுந்து நிற்கும்
     எம்தமிழே உயிர்உடலும் மூச்சும் என்றார்!
சுமையாகத் துயர்கூடி உழல்வோர் வாழ்வில்
     துன்பங்கள் பறந்தோடத் துணையாய் நின்றார்!

குயில்கூவிக் கொண்டிருக்கும் குளிர்ந்த சோலை
     கொண்டாடி ஞானத்தைப் பிழிந்து தந்த
உயர்வான பாரதியார் முன்னே கண்டோம்
     உரிமைப்போர் விடுதலைக்காய் யுத்தம் செய்து
துயரோடும் வறுமையுடன் தொடர்ந்த தொண்டைத்
     துடிப்போடும் துணிவோடும் மற்றோர் பக்கம்
பெயர்த்தெடுத்துச் சமுதாயப் பார்வை தந்தார்
     பெரியாரின் வழிவந்த பெருமை உண்டு!

காலத்தால் அழியாத தமிழைக் காத்த
     கம்பன்முதல் பாரதியும் சங்கச் சான்றோர்
சீலமிகு சேனையிலே இவரும் சேர்ந்தார்!
     செந்தமிழின் சுவையுண்டு வாழ்வை வென்றார்!
கோலமிகு பாவேந்தர் நூல்கள் யாவும்
     கொள்கைஎழில் தரும்படைப்பா? புரட்சிக் காற்றா?
ஆலமரம் போல்படர்ந்த அழகின் வீச்சா?
     ஐயோ!நான் இவர்புகழைப் பாடப் போமோ?

காதலெனும் எழில்பரவக் காட்டும்! தேனைக்
     கனிச்சாறைக் கலந்தள்ளி ஊட்டும்! நெஞ்சின்
வேதனையும் சோதனையும் போக்கும்! இன்ப
     மெய்க்காதல் வண்ணத்தைப் படைக்கும் போது
பூதலத்தில் முடியரசின் கொடுமை பேசிப்
     புரட்சியினைத் தூவியவர், போரும் செய்தார்!
நீதியெனில் நிலம்முழுதும் குடிகள் ஆளும்
     நிலைதேடி அறைகூவி அழைத்தார் மண்ணை!

பழகுதமிழ்ப் பண்புதனை வழங்கும் போதும்
     பழந்தமிழர் பெருமையினை விளக்கும் போதும்
வழுவாத பகுத்தறிவுச் சிந்தை வைத்து
     மடமைஇருள் மனம்விலக்கி வாழச் சொன்னார்!
பழிகொண்ட படுகளங்கள், உதிரம் சிந்தும்
     படுநாசப் போர்ஒழிக்கப் பகர்ந்த போதும்
அழகாக அமர்ந்திருக்கும் இயற்கை கண்டார்!
     அதன்சிரிப்பைக் கவிச்சுவையாய் நமக்குத் தந்தார்!

பாவேந்தர் முத்தமிழின் அகலம் ஆழம்
     பறித்தெடுத்த பாஉழவர்! தமிழின் ஊற்று!
கோவேந்தர் வந்துதொழும் கவிதைக் கோயில்!
     கோபுரமே இக்கவிஞர்! குன்றின் உச்சி!
நாவேந்தர் ஐவர்வந்து நயங்கள் சென்னார்!
     நடமாடும் காவியத்தைப் பாடிச் சென்றார்!
பாவேந்தர் வரிசையிலே வருவார் யாரோ?
     பசுந்தமிழே பிறப்பெடுக்க அருள்வாய் இன்றே!

நற்றமிழர் வாழ்வினில்
பற்றுடைய வேந்தரின்
பொற்புடைய புரட்சியை
நற்பார்த்த சாரதி

கண்ணப்பத் தொண்டனின்
பொன்னொப்பும் அருளினால்
விண்முட்டும் தமிழினில்
பண்ணப்பிப் பாடினார்

என்னப்பன் ஈசனின்
மின்னொக்கும் அடியினை
அன்புற்று வணங்கியே
இன்புற்று வாழ்கவே!

கம்பு சுற்றும் அடியாளாய்க்
     கடவுள் என்னைப் படைக்கலையே!
கம்பன் தமிழில் கட்டுண்ட
     கன்னித் தமிழின் அடியவனாய்
நம்பி என்னைப் படைத்தானே!
     நல்ல அறிவைக் கொடுத்தானே!
நம்மின் தமிழைப் பழிக்கின்ற
     நரியை விரட்டல் என்கடனே!

தன்மானம் நாம்பெற்றால்
பொன்வானச் செம்மையினை
மண்மீது பெற்றிடுவோம்!
தண்டமிழா உணர்வாயே!

எத்திக்கும் தமிழ்பரவச்
சித்தம்கொள் தமிழினமே!
புத்திக்கு விருந்தாகும்
முத்தமிழை நாடுகவே!

ஏழாம் அறிவு, பகுத்தறிவு
     என்றே பாடி எனைக்கவர்ந்தார்!
ஆழம் அளந்து நற்கவிதை
     அழகாய்ப் படைத்த தமிழ்த்தாயே!
பாழும் மடமை முட்செடிகள்
     படர்ந்தால் உலகம் உயர்ந்திடுமோ?
வேழத் தமிழா! விழித்தெழுக!
     விளித்த தாயே வாழியவே!

சாதி ஒழித்தல் முதற்கடமை!
     தமிழைக் காத்தல் நம்முரிமை!
மோதி மிதித்து வேற்றுமையை
     முற்றும் ஒழித்தால் வரும்பெருமை!
நீதி உரைத்த பாவேந்தன்
     நெறியைச் சொன்ன தமிழ்த்தாயே!
சோதி போன்றே உம்மறிவு
     சுடர வேண்டி வாழ்த்துகிறேன்!

குகையுள் சிறுத்தை உறங்குவதோ?
     குள்ள நரிகள் ஆளுவதோ?
பகைவர் இடுப்பை முறிக்கின்ற
     பாக்கள் படைத்தார் செயராமர்!
அவையோர் சார்பில் வாழ்த்துகிறேன்!
     ஆற்றல் மேலும் ஓங்குகவே!
சுவையே! கதிரே! செந்தமிழே!
     சூடும் கவியை ஏற்றருளே!
 
விஞ்சும் தமிழை வேலென்றார்
     வீரர் கொண்ட வாளென்றார்
கொஞ்சும் தமிழைத் தேனென்றார்
     கொள்கைத் தமிழர் உரமேற,
அஞ்சி அஞ்சி வாழுவதோ?
     அருமைத் தமிழர் தாழுவதோ?
நெஞ்சில் வீரம் கொடுத்திட்டார்!
     வெல்க அருணா நற்செல்வம்!

புதுவை நகரே புலவர்தம்
     புலமை ஒளிரும் பூக்காடு!
பொதுமை நெறியைக் காக்கின்ற
     புரட்சி யாளர் வாழ்வீடு!
முதுமைத் தமிழின் உயர்பாக்கள்
     முழுதும் பருத்த தேன்கூடு!
புதுமைச் செல்வர் பாவேந்தர்
     புகழால் பொலியும் தமிழ்நாடு!

ஊழி முழுதும் உயர்தமிழே
     ஒளிரும் காலம் வரவேண்டும்!
தோழி பத்ம நாபசெயா
     சூட்டி மகிழ்ந்தார் புத்துலகை!
வாழி! வாழி எனப்பல்லோர்
     வாழ்த்தும் வல்ல புகழெய்த
ஆழிக் கண்ணன் நல்லருளை
     அடியேன் வேண்டி நின்றனனே!

பாக்கள் படைத்த பாவலரைப்,
     பசுமைத் தமிழின் காவலரை,
ஈக்கள் போன்று தமிழ்த்தேனை
     இனிதே பருகி மகிழ்ந்தோரை,
ஊக்கத் தோடு வண்ணவுரை
     உவந்து அளித்த நாவலரை,
வாக்குப் பொய்யாப் பாரதிநான்
     வணங்கி நிறைவு செய்தனனே!

(பாட்டரங்கம் 24-04-2004)