mercredi 12 septembre 2012

வடலுார் வள்ளல்



வடலுார் வள்ளல் 

எடுப்பு

மாந்தருள் மாணிக்கம் வடலூரார் - சன்
மார்க்கமே கூறும்அருட் சுடரானார்!
                                   (மாந்தருள்)

தொடுப்பு

சாந்தமே தவழ்ந்திடும் தண்மதியார் - தமிழ்
தழைத்திடும் அருட்பாவைத் தரும்நிதியார்!
                                   (மாந்தருள்)

முடிப்புகள்

அன்பெனும் அமுதுண்டு அகம்செழித்தார் - பேர்
அருளெனும் ஒளிகண்டு துயர்துடைத்தார்!
பண்பெனும் நெறிவென்று பயன்படைத்தார்! - பசும்
பாலெனும் உளம்கொண்டு புகழ்விளைத்தார்!
                                   (மாந்தருள்)

வாட்டிடும் பசிப்பிணி போக்கியவர் - மண்ணில்
வதைத்திடும் உயிர்க்கொலை நீக்கியவர்!
தீட்டிடும் கவிச்சுவை தேக்கியவர் - நம்மைத்
தீண்டிடும் பொய்ம்;மையைத் தாக்கியவர்!
                                   (மாந்தருள்)

வாடிய பயிருக்கு உளம்கொதித்தார் - நாட்டை
வருத்திய சாதியைத் துணிந்தெதிர்த்தார்!
ஈடிலாப் பெருவாழ்வு இனிதளிப்பார் - இராம
லிங்கராம் எந்நாளும் மனமினிப்பார்!
                                   (மாந்தருள்)

4 commentaires:

  1. சீவ காருண்யத்தினை வலியுறுத்திய பெருமகனாரை சிறப்பித்த கவி அருமை! அருமை! நன்றி பகிர்விற்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம.!

      கொல்லாமை நன்னெறியைக் கொண்டு திகழ்ந்திட்டால்
      நல்லினிமை காணுமே நாடு!

      Supprimer

  2. வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலைப்
    பாடும் தமிழ்கண்டு பண்புற்றேன்! - ஓடும்
    நதியாக நற்றேன் கவிகண்டேன்! வாழ்வின்
    கதியாகக் கொண்டேன் கனிந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சன்மார்க்கம் ஓங்குமெனில் சண்டைகள் வந்திடுமோ?
      பொன்மாா்க்க மாகப் புவிபொலியும்! - நன்மாா்க்கம்
      காட்டிக் கருணைக் கடைவிாித்தார்! இன்பாவை
      ஊட்டி அளித்தார் ஒளி!

      Supprimer