samedi 19 mars 2016

பெண்ணே பெருஞ்சக்தி




பெண்ணே பெருஞ்சக்தி  
(வெண்பாக் கொத்து)

குறள் வெண்பா

பெண்ணே இனிமை! பெருந்தவப் பேராற்றல்!
கண்ணே கமழும் கனிந்து!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணே வளமென்று பேணிச் சிறப்பித்தால்
மண்ணே மணக்கும்! மனத்துக்குள் எந்நாளும்
தண்ணே தழைக்கும் கனிந்து!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணே பெருமையெனப் பேசும் திருநாட்டை
விண்ணே வணங்கி விழாநடத்தும்! - ஒண்ணொளி
பண்ணே படைக்கும் கனிந்து!

இன்னிசை வெண்பா

பெண்ணே கலையின்பம்! பின்னும் கவியின்பம்!
புண்ணே அகற்றும் பொழிலின்பம்! பொங்குதமிழ்
கூட்டும் சுவையின்பம்! கோலக் குளிரின்பம்!
காட்டும் விழியே கனிந்து!

நேரிசை வெண்பா

பெண்ணே சிறப்பென்றும்! பேழை அணியென்றும்!
எண்ணே இலாத இனிப்பென்றும்! - கொண்டல்
வளமே கமழும் வரமென்றும் கொண்டால் 
களமே கமழும் கனிந்து!

இன்னிசைப் பஃறொடை வெண்பா

பெண்ணே நலத்தைப் பெருக்கும் பெருஞ்சக்தி!
கண்டாய் இனிக்கும் கவிகள் தருஞ்சக்தி!
மாண்பை அளித்து மகிழ்வூட்டும் அருஞ்சக்தி
ஆண்மை சிறக்க அமுதூட்டும் நற்சக்தி!
எல்லா எனஇங்[கு] இருக்கும் எழிற்சக்தி!
பொல்லாத் துயரைப் பொசுக்கும் உயர்சக்தி!
மண்ணுறும் சக்தி! மாகடல் சக்தி!அவ்
விண்ணுறும் சக்தி! வியன்தென்றல் சக்தி!பொற்
கற்புறும் சக்தி கனலுறும் சக்தியவள்!
கற்பாய் மனமே கனிந்து!
 
நேரிசைப் பஃறொடை வெண்பா

பெண்ணே இனிமையின் பேறெனப் பாடிடுக!
வண்டே வலம்வரும் கண்ணென்க! - வண்ணமிகு
பட்டான் பறப்பதுபோல் நெஞ்சம் களித்திடுக!
கொட்டும் மழையில் குளிர்ந்திடுக! - கட்டுக்
கரும்பின் சுவையென்க! காதல்அமு(து) என்க!
உருகும் பனியென்க! உண்மை - தருகின்ற
ஓங்குபுகழ் என்றே உவந்திடுக! என்றென்றும்
தேங்குநலம் என்றே தெளிந்திடுக! மன்பதையில்
மங்கை பிறப்புறும் மாட்சி அறிந்திடுக!
கங்குகரை இன்றிக் கனிந்து!


இலக்கண விளக்கம்

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா,  இன்னிசைப் பஃறொடை வெண்பா, நேரிசைப் பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'பெண்ணே' என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'கனிந்து' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன. 

18.03.2016

mercredi 16 mars 2016

வெண்பாக் கொத்து



திருக்குறளே இறைவன் ஒளி!
(வெண்பாக் கொத்து)

குறள் வெண்பா

அன்னைத் தமிழின் அருமைத் திருக்குறளே
உன்னை உயர்த்தும் ஒளி!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

அன்னைத் தமிழை அணியும் மனத்துக்குள்
முன்னைப் பெருமைகள் மூளும்! திருக்குறளே!
உண்மை உணர்த்தும் ஒளி!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

அன்னை அரசாள ஆன்ற அறமாளப்
பின்னைப் பழிபோகப் பேணுவாய்! - இன்குறளே!
உன்றன் உயிரின் ஒளி!

இன்னிசை வெண்பா

அன்னைத் தமிழே அகங்குளிரச் சீர்கொடுக்கும்!
முன்னை நிகர்த்தவளம் மேவ வழிபடைக்கும்!
வெள்ளமென இன்பம் விளைக்கும்! திருக்குறளே!
உள்ளமெனும் கோவில் ஒளி!

நேரிசை வெண்பா

அன்னைத் தமிழோங்க அன்பு நெறியோங்கப்
பொன்னை நிகர்த்த புகழோங்க - இன்னமுதாய்த்
தேங்கும் நலமோங்கத் தேனார் திருக்குறளே
ஓங்கும் உலகின் ஒளி!

இன்னிசைப் பஃறொடை வெண்பா

அன்னைத் தமிழே! அறத்தின் பிறப்பிடமே!
என்னை இயக்கும் இணையிலாப் பேரருளே!
தன்னே ரிலாது தழைக்கும் தவப்பொருளே!
பொன்னே! மணியே! புலமை மலர்க்காடே!
பாரோர் பயனுறப் பன்னல நூற்களைச்
சீரோ(டு) அளித்திட்ட செம்மொழிக் தேன்கடலே!
முப்பால் சுவையமுதே! மூவாத் திருக்குறளே!
ஒப்பில் இறையுன் ஒளி! 

நேரிசைப் பஃறொடை வெண்பா

அன்னைத் தமிழுற்ற தொன்மை உலகறிய
நன்றே உழைப்பது நம்கடனாம்! - இன்றுள்ள
துன்பம் அகலும்! துணிவு நிறைந்தோங்கும்!
இன்பம் பெருகும்! எழில்மேவும்! - மன்பதையில்
என்றும் பிறப்பொக்கும் என்றே நெறியூட்டும்
இன்றே இழிவுகளை இங்கெரிக்கும்! - நன்மையுறக்
கன்னல் சுரக்கும் கருணைத் திருக்குறளே
உன்னதம் ஊட்டும் ஒளி!

 இலக்கண விளக்கம்

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசைப் பஃறொடை வெண்பா, நேரிசைப் பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும்.  ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'அன்னை' என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'ஒளி' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன. 

16.03.2016

mercredi 9 mars 2016

கண்ணீர் வெண்பா!



கண்ணீர் வெண்பா!


[பாவலர் இளமதியார் கணவர் பாலசந்திர சர்மா அவர்கள் 07.03.2016 அன்று இறையடியை இணைந்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்]

உற்ற கணவன் உனைப்பிரிந்து சென்றானோ?
நற்றவ நாதனை நாடியே! - சுற்றி
விழுந்தாயோ? வெந்து விழித்தாயோ? யாவும்
இழந்தாயோ உள்ளம் எரிந்து!

முன்னை வினைகழிந்து முந்திப் பறந்தானோ?
உன்னைப் பிரிந்தே ஒளிந்தானோ? - பொன்னைப்
புழுதியில் போடுவரோ? பொங்குதென் நெஞ்சம்
புழுவெனச் சூட்டில் புரண்டு!

கண்ணின் மணியெனக் காத்திட்ட உன்துணைவன்
விண்ணில் பறந்து விரைந்தானோ? - பெண்ணே..நீ
கத்தித் துடித்தாயோ? புத்தி வெடித்தாயோ?
ஒத்திக் கிடந்தாயோ ஊர்ந்து!

நீடுதுயில் நீங்கி நிமலன் மலரடியை
நாடுமனம் கொண்டு நடந்தானோ? - கூடுதுயர்
கண்டு சுருண்டதுவோ? கண்ணீர் வறண்டதுவோ?
உண்டு முடித்ததுவோ ஊழ்!

பிள்ளையெனக் காத்த பெருஞ்சொத்தைக் காலனவன்
கொள்ளை அடித்துக் குதித்தானோ? - வெள்ளைமனம்
முற்றும் கருப்பாகி மூலையில் நின்றாயோ?
வற்றி வறண்டாயோ வாய்!

காற்றில் கலந்தானோ? தன்கடன் தீர்த்தானோ?
சேற்றில் உனைவிட்டுச் சென்றானோ? - ஆற்றிலுறும்
வெள்ளமெனத் துன்பம் விளைந்ததுவோ? என்தோழி
உள்ளமெனும் கூட்டை உடைத்து!

பட்டது போதுமெனப் பாய்ந்து பிரிந்தானோ?
விட்டது பாவம்! விரைந்தானோ? - சுட்டதுபோல்
உன்றன் உயிர்ஊசல் ஆடியதோ? என்தோழி!
என்றெழு வாயோ இயம்பு?

எப்படி இன்னல் எரித்ததுவோ? காரிருள்
அப்படி யே..வந்[து] அழுத்தியதோ? - செப்புமொழி
யாவும் மறந்தாயோ? எல்லாம் வெறுத்தாயோ?
மேவும் துயரில் விழுந்து!

பூவெங்கே? பொன்னெங்கே? போற்றிப் புனைந்திட்ட
பாவெங்கே? செய்த பணியெங்கே? - தேவெங்கே?
தேம்பி அழுதாயோ? திக்கற்று நின்றாயோ?
கூம்பிவிழுந் தாயோ குலைந்து?

பொல்லா உலகென்று போனானோ? உன்வாழ்வின்
எல்லாக் கதவுகளை இங்கடைத்து! - கல்லாய்
மனம்மாறி மண்ணில் கிடந்தாயோ? நட்பாம் 
இனம்வாடி நிற்க இணைந்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.03.2016